Category Archives: பொது

>சில பகிர்வுகள்..!

>

வணக்கம் நண்பர்களே, நலமா?
பல நிகழ்வுகளால் எதையுமே படிக்க இயலவில்லை, மிக முக்கிய காரணமாக, என் 87 வயது பாட்டியின் மறைவு. என் வீட்டிலேயே இருந்து ஐந்தாம் தலைமுறையைக் காண இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அமைதியாய் ஒரு அதிகாலையில் அவர் உயிர் பிரிந்ததும் அதன் மறு நாள் காலையில் ஒரு குவியல் சாம்பலாய்க் கண்டதும் சோகம் தாண்டி நிறைய விஷயங்களைப் புரியவைத்தது.
என் தாத்தாவிற்கு சிறு வயதில் இரண்டாம்தரமாய் வாழ்க்கைப்பட்டு  ஐந்து பெண்களைப் பெற்று  இளம் வயதிலேயே விதவையாகி எல்லா குடும்பக் கஷ்டங்களையும் அனுபவித்து எந்தெந்த ஊரிலோ சுற்றிச் சுழன்று வாழ்ந்து தற்பொழுது நான் இருக்கும் கிராமத்தில் என் வீட்டில் இறந்து இயற்கை சூழலுடனான சுத்தமான ஒரு மயானத்தில் எரிந்து உதிர்ந்து போனாள். 
எனக்கு வராது என்றில்லாது எனக்கும் வருமென்று உள்வாங்கிப் பார்க்கையில் ஒரு இறப்பு பல விஷயங்களை உணர்த்துகிறது. துக்கமென்பது ஒரு அளவுகோலோடே அழவைத்ததும் ஒரு ஆச்சர்யம்தான். மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன்.  

சென்ற மாதத்தில் ஒரே ஒரு நாள் இணைப்பிலிருந்தபொழுது தமிழ் மணத்தில் வாக்களிக்க வேண்டிய இடுகைகளுக்கு வாக்களித்ததோடு அதை மறந்துவிட்டேன். என்னுடைய நான் எடுத்த சில புகைப் படங்கள் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியதற்கு வாழ்த்து தெரிவித்து வந்த பின்னூட்டம் கண்டதும் மகிழ்ச்சி. வெற்றி பெறுவது இரண்டாம் பட்சம். அதிகம் இணையத்தில் இல்லாத நிலையிலும் என்னையும் மதித்து வாக்களித்த நட்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.:)) மேலே உள்ளது என் வீட்டுத்தோட்டத்தில் நான் எடுத்தது.

உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். சமீபகாலத்தில் ஒரே இடத்தில் அதிக பதிவர்களைக் கண்டதும், பேசியதும் மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்து புத்தகக் கண்காட்சியில் இது தொடரும் என்று நினைக்கிறேன். நண்பர்களின் புத்தகங்கள் இது போன்று சிறப்பாய் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.

பா.ராஜாராம் அண்ணன் சவூதிக்கு திரும்பிச் செல்ல சென்னை வந்திருந்தபொழுது சந்தித்தேன். பல விஷயங்கள் பேசினோம். கூடப் பிறக்கவில்லை என்பது தவிர்த்து அன்பின் ஆளுமை அவர். வலைப்பூக்களின் முதல் மற்றும் சிறந்த பயன் இது போன்ற நட்புகள் மட்டுமே. :)) 
பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார் “ எழுத்தில் நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பிம்பம் நிஜத்தில் உடையும்பொழுது அதுவும் அழகாகத்தானிருக்கிறது.”

நான் சொன்னேன்… ”அந்த நிஜ பிம்பமும் உடையும் பொழுதுதான் மனசு வலிக்குதுண்ணே”

வேறென்ன? புத்தாண்டு வரப்போகிறது. இரண்டாயிரத்துப் பதினொன்று அனைவருக்கும் நல்லதாய் அமைய ப்ரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்.



இரு உள்ளங்கைகள் போதுமென்றாலும்
பற்றவியலாத 
புயல்கால மேகங்களாய் 
வட்டச் சுழன்று
கொட்டமடிக்கிறது
காமம்.

.