கடல் – விமர்சனம்.

அது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்ளிய காலம். நான் அதிகம் பார்த்த தமிழ் படங்களுள் மணிரத்னத்தின் படங்களே டாப் டென்னில் வரும்.

அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், கதையை அங்கே சுட்டார், இந்தக் கோணம் இங்கே சுட்டார் என்று, ஆனால் அதை எல்லாம் மீறி அவர் படங்களின் மீதான ஈர்ப்பு என்பது குறையவே இல்லாத காலம் அது. முதலில் அது உடைந்து சுக்குநூறாகிப்போனது திருடா திருடா படத்தில்தான், கிட்டத்தட்ட அதே மனநிலையில் இன்று முதல் காட்சி பார்த்த இந்தக் கடல் படமும்.

என்ன ஆயிற்று அவரின் மேஜிக் மேக்கிங்கிற்கு? நல்ல மியூஸிக் டைரக்டர், நல்ல கேமரா மேன், அருமையான பாடல்கள், அழகான இரண்டு புதுமுகங்கள், நல்ல ஒரு கதை சொல்லியான ஜெமோ, ட்ரைவிங் சீட்டில் மணிரத்னம் தி க்ரேட், எப்படி வந்திருக்கவேண்டிய படம்???

அதென்னமோ நல்ல லைட்டிங்கில் படம் எடுக்கக்கூடாது என்று எதாவது வாக்கு குடுத்துவிட்டார்களா? ஏதோ அலை அடிப்பதால் அங்கொன்று இங்கொன்று சீன்கள் வெளிச்சத்தில் வருவதால் அது கடல் என்று தெரிகிறது. ஏன்? கடலை அதன் ஆத்மார்த்தமான நீலப் ப்ரதிபலிப்பில் காண்பிக்க என்ன தயக்கமோ?

ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல, கண்ணு வலிக்கிது மக்கா 😦

-0-

குழந்தையாக, சிறுவனாக, ஹீரோவாக வரும் நாயகன் கேரக்டர்கள் எல்லாமே நல்ல தேர்வு. நாயகி பல்லைப் பார்த்த உடனே தெரிந்துவிட்டது ஏதோ மனநிலை சரியில்லாத கதாபாத்திரம் என்று, ஆனால் அவருக்கான உடையில் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்று குழம்பி கடைசியில் நர்சாக அல்லது டாக்டராக அல்லது டெலிவரி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் என்று கண்டுகொள்கிறோம். அவருக்கு ஒரு நாலு வெள்ளை கவுன், ஹீரோவுக்கு பட்டனில்லாத சட்டை நாலு, படம் பூராவும் பீச் பக்கமும், கடலிலும் ஷூட்டிங், அதிகபட்ச செலவே சர்ச் செட்டுக்கும், அர்ஜுன் ட்ரெஸ்ஸிற்கும், அரவிந்சாமியின் புல்லட் பெட்ரோலுக்கும்தான் ஆகி இருக்கும்.

அய்யா சாமி, தூத்துக்குடிப் பக்கம் இந்தமாதிரித்தான் தமிழ் பேசுவார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மணிரத்னம் படம் என்றால் இப்படித்தான் தமிழ் பேசுவார்கள் என்பது இப்பொழுது தெரிந்துவிட்டது. சரி அதையாவது படம் முழுக்க ஒழுங்காகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, ஏதோ குறியீடு போல என்று ஃபாலோ பண்ணாமல் விட்டுவிட்டேன்.

முழுக்க கிருத்துவர்களைக் கொண்ட ஒரு கடற்கரைக் கிராமத்தின் ஒரு நல்ல கிருத்துவ பாதிரிக்கும், ஒரு கெட்ட மனிதருக்கும் (அவரும் பைபிளைக் கரைத்துக்குடித்த கிருத்துவர்தான், ஆனால் தன்னை சாத்தானாகப் பிரகடனப் படுத்திக்கொள்கிறார்) நடக்கும் கதை. நிச்சயம் போராட்டம் தடை எல்லாம் கொண்டுவந்து விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வழக்கமான எரப்பாளி டயலாக்கிலிருந்து துவங்குகிறது ஜெமோ டச், ஆங்காங்கே ’பேயோட்ட 15 ரூவா, பாவமன்னிப்புக்கு 10 ரூவா’ என்ற முத்திரை வசனங்களோடு நகர்கிறது வசனங்கள். பாடல்கள் படத்தில் ஒன்றவே ஒன்றாது என்று முடிவெடுத்து பாவமன்னிப்பாக கடைசி பாட்டை இறுதியில் டைட்டிலோடு ஓட்டிவிடுகிறார்கள், மக்களும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்கள்.

ரீ ரெக்கார்டிங் – அழுத்தமான காட்சிகளில் கூட டிங் டிங் லோ வால்யூமில் வைத்த செல்போன் ரிங் போல தடுமாறுகிறது. பாவம் அவரும்தான் என்ன செய்வார்?

-0-

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது, போலவே பழைய மணிரத்னம் படங்கள் நினைவில் உள்ள ரசிகனை இது போன்ற படங்கள் கொடுத்து திருப்திப்படுத்தவும் முடியாது.

மீண்டும் ஒழிமுறியை ஜெமோவுக்காகவும், விண்ணைத்தாண்டி வருவாயாவை ரஹ்மானுக்காகவும், இதயத்தைத் திருடாதேவை மணிரத்னத்திற்காகவும்,  மின்சாரக் கனவை ராஜீவ் மேனனுக்காகவும் பார்த்து என்னுடைய ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும்.

-0-

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய்,  ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )
கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டேன், என்னை மன்னியும்! 
.
Advertisements

விஸ்வரூபம்… (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு விமர்சனம்)

விஸ்வரூபம்.
கமலின் இந்தப் படத்தை காளஹஸ்தியில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. படத்தைப் பற்றிய அரசியலுக்குள் போக விரும்பவில்லை, ஏனெனில் பாகம் இரண்டு வர இருப்பதாக படத்தின் இறுதியில் காட்டப்படுவதால் (வந்தால்) அதையும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக இப்படத்தின் அரசியல் குறித்து பேசுவதே சரியாக இருக்கும் என்பது என் நிலைப்பாடு. 
ஆம். நீங்கள் பலரின் விமர்சனத்தைப் படித்ததுபோல படம் உலகத் தரத்தில்தான் ஒரு தமிழ் கலைஞனால் எடுக்கப்பட்டுள்ளது, எடுத்துக்கொண்ட களம் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா. ஆங்கிலத்தில் பல படங்கள் இந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், அர்னால்ட் டைப் ஹீரோயிசம், டெக்னிகல் மிரட்டல்களுடன் வந்திருக்கிறது. நம்மூரிலும் இந்தத் தரத்தில் ஒரு படம் வராதா என்று நினைத்ததுண்டு. படத்தின் முழு டோனும் அப்படி ஒரு ஆங்கிலப்படத்தை ஒத்த ஒரு உணர்வைத் தந்தது. நாங்கள் படம் பார்த்த அரங்கு சாதாரண ஏசி இல்லாத சுமார் டிடிஎச் அதிலேயே சவுண்ட் க்வாலிட்டி அசத்துகிறது. கமலின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமும் தெரிகிறது.
குறிப்பாக ஆப்கானிஸ்தானை காட்டும் காட்சிகளில் கேமரா செய்யும் ஜாலம் அசத்தல். முதல் சண்டைக் காட்சியும் அதை மீண்டும் ரிபீட் செய்யும் காட்சியும், பல கேமரா கோணங்களும் டெக்னிக்கலாக தமிழ்/இந்திய சினிமாவை கமல் இன்னும் பல படிகள் மேலே கொண்டுபோக ஆசைப்பட்டிருக்கிறார். இந்தக் களம் அவருக்கு காலை வாரி இருக்கலாம். ஆனாலும் பல படங்கள் இந்த உழைப்போடு வெளி வரும்போது இந்திய கேளிக்கை சினிமா பல புதிய உயரங்களை அடையும், இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தில் இதெல்லாமே தேவைதான்.       
ஆத்திக பகுத்தறிவுவாதியான கமல் படங்களில் பல குறியீடுகள் இருக்கும், வசனங்களிலும் அது மிக நுணுக்கமாக வெளிப்படும் இந்தப் படத்திலும் கதைப்போக்கிற்கு ஏற்ப அதைச் செய்திருக்கிறார். படத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அந்தக் குறியீடுகள்.
இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டபிறகு எதற்காக இந்தப் படம் எதிர்க்கப்பட்டது என்பதை எதிர்த்தவர்கள் விளக்குவார்கள். அப்பொழுது எனக்கும் உங்களுக்கும் சில வெளிச்சங்கள் பிறக்கும். மிக முக்கியமாக நான் அதைப் பற்றிக் கருத்துரைக்க விருப்பமில்லாததன் காரணங்களில், இணைய ஆராச்சிகளின் மெய் சிலிர்ப்பு வாசிப்பனுபவம்தான். தொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயிரம் அர்த்தம் வைத்து ஆயிரம் பக்க விளக்கங்களில் அசுரத்தனமாக எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள். எனவே உண்மையான எதிர்ப்பை மதிப்போம், அரசியல் / சுயலாப காரணங்களை எதிர்ப்போம். 
சரி, கிட்டத்தட்ட கமல் ரேஞ்சுக்கு தெளிவாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டேன் பரிகாரமாக 
நண்பர் ஜோதிஜியின் டாலர் நகரம் என்ற புத்தகவெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை இங்கே பகிற்கிறேன். அறிமுகம் தேவைப்படாத இணைய ஜாம்பவான் நண்பர் ஜோதிஜியின் புத்தக வெளியீடு விழா திருப்பூரில் நாளை நடக்க இருக்கிறது, அன்போடு உங்கள் ஆதரவை கோருகிறேன்.
விவரங்களுக்கு :  http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html
                                     http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_26.html   
நன்றி! 🙂

36வது சென்னை புத்தகக் கண்காட்சி – ஒய் எம் சி ஏ 2013

நுழைவாயில்

36வது, சென்னை புத்தகக் கண்காட்சி – ஒய் எம் சி ஏ 2013
36வது புத்தகக் கண்காட்சி இந்தமுறை ஒய் எம் சி ஏ மைதானம் நந்தனத்தில் நேற்று துவங்கியது. வழக்கம் போலவே முதல் நாள் முதல் ஷோ காணவேண்டியும், இந்தமுறை புதிய இடத்தில் நடப்பதாலும் ஆவலோடு நேற்று மதியம் 3 மணி அளவில் உள்ளே சென்றேன். மவுண்ட்ரோடிலிருந்து உள்ளே நுழைந்தால் மிகப்பெரிய மைதானங்களுடன் நம்மை வரவேற்கும் இந்தப் புதிய இடத்தில் குறுகிய சாலை கொண்ட நுழை வாயில் இருப்பதால் வண்டி ஓட்டுவதில் மிகப்பொறுமைசாலிகளான நம் மக்களால் நந்தனத்தில் மிகப் பெரிய ட்ராபிக் ஜாம் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.
அரங்கின் ஒரு தோற்றம்
பல மைதானங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த இடம் பார்க்கிங் வசதிக்கு பொருத்தமானதாக இருந்தாலும், கண்காட்சியை அடைய பல மீட்டர் தூரம் நடக்கவேண்டி இருக்கும், பகலில் கை காட்டிய இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இரவில் வண்டியை எங்கே விட்டோம் என்று தலை சொறியவேண்டும் என்பதால் ஏதேனும் ஒரு அடையாளம் பார்த்து வண்டி விடுவதும், செல்லும் பாதையை நினைவில் வைப்பதும் அவசியம்.
உள்பகுதி கூரை அமைப்பு 
வழக்கம் போலவே சர்க்கஸ் கூடாரம், ஆனால் இம்முறை பெரிய கூடாரம். அதிக ஸ்டால்கள். விழா மேடையின் எதிரே உள்ள வாயில் அருகில் ஸ்டால் கிடைத்த நவீன வேளாண்மை போன்ற ஸ்டால்கள் கொஞ்சம் பாக்கியவான்கள், காற்று கொஞ்சம் வீசி புழுக்கத்தைக் குறைக்கும்  ஒரே இடம் இதுதான். மற்ற இடங்களில் கூட்டமில்லாத நேற்றே மூச்சு முட்டுகிறது. இது போன்ற கூரை அமைப்பில், உயரமான இடத்தில் சுற்றிலும் இடைவெளி விட்டு அமைப்பது ஒன்றே குளுமைக்கும், காற்றோட்டத்திற்குமான ஒரே வழி.
ஸ்டால்களில் 70 சதவீதம் நேற்று அந்த நேரத்தில் புத்தகங்களை அடுக்கிவிட்டுத் தயாராகவே இருந்தார்கள் என்பது ஆச்சரியம். மற்றவர்கள் கடைசி நேர பரபரப்பில் இருந்தார்கள். கார்பெட் வசதிகள் தடுக்கி விழாத அளவிற்கு ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
இம்முறையும் முதலிலேயே மீனாட்சி புத்தக நிலையம் கண்ணில்பட உள்ளே சென்றேன், இம்முறையும் அவர்களுடைய மலிவுப் பதிப்பில் வெளியான சுஜாதாவின் பல புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைத்தது. 
பல ஸ்டால்களின் உள் அளவு சிறியதாகவே இருக்கிறது. கூட்டமான நேரங்களில் விண்டோ ஷாப்பிங் அல்ல ஸ்டால் ஷாப்பிங் செய்வதுகூடக் கடினம் என்றே நினைக்கிறேன். இரண்டு ஸ்டால்களை ஒன்றாக எடுத்த இடங்களில் புத்தகங்களை ஓரளவு பார்வை இட முடிந்தது. 
கழிப்பறை வசதி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை, ஒய் எம் சி ஏ சர்வ ஜாக்கிரதையாக அவர்களுடைய டாய்லெட்களை பூட்டி வைத்திருக்கிறார்கள், பூட்டி வைத்த டாய்லட்களைச் சுற்றி என்ன கதி ஆகப்போகிறதோ?
குடிக்கத் தண்ணீர் காசு கொடுத்து வாங்குங்க
சாப்பிட வாங்க என்ற பெயரில் கேண்டீன், விலை எல்லாம் வழக்கம் போலத்தான், சரி பரவாயில்லை பசிக்கிறதே என்று ஒரு மசாலா தோசை வாங்கி சாப்பிட்டு 10 நிமிடங்கள் கை கழுவும் இடம் எங்கே என்று தெரியாமல் அல்லாடி, கடைசியில் வலது பக்கம் கை காட்டப்பட்டு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் கை கழுவினேன். வழக்கம் போலவே குடிக்கத் தண்ணீர் கிடையாது, வேண்டுமென்றால் பாட்டில் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளவேண்டியதுதான். அல்லது விக்கித்துப் போகவேண்டியதுதான்.
லிச்சி தி க்ரேட்
எல்லா டென்ஷனையும் ஆசுவாசப்படு்த்தியது விலை ஏறாத லிச்சி ஜூஸ் மட்டுமே. நானும் ராஜகோபாலும், கஸ்டமர் கூட பெரிய டீல் பேசிக்கிட்டு இருக்கேன் சார், டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று போனில் உண்மை பேசிய மேவியும் ஆளுக்கு ஒரு கோப்பை அடித்தோம்.
இன்றைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தபோதே, இராமசாமி கண்ணன், அண்ணன் புதுகை அப்துல்லா, அன்பு மணிஜி, அகநாழிகை பொன் வாசுதேவன், தமிழ்மணம் நம்பர் 1 மோகன்குமார், லக்கி, அதிஷா என்று பல பிரபலங்கள் வந்திருந்தனர், திரு,பாஸ்கர் சக்தியிடம் ஞானபாநு ஸ்டால் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். கிங்விஷ்வா லயன் காமிக்ஸ் ஸ்டாலில் வெகு பிஸியாக இருந்தார்.
நவீன வேளாண் விவசாயி அண்ணன் அப்துல்லா
ஆமாங்க, இதுதான் உங்களை வரவேற்கிறது (வெளங்கிறும்)

மேடை அரங்கு
சாகித்ய அகாடமி என்று தயை கூர்ந்து ஆங்கிலத்தில் சரியாகப் படிக்கவும்
சன் டிவியிலிருந்து, சத்யம் வரை கவரேஜ்கள் ஆரம்பித்திருந்தது, வழக்கம் போல் கால்கள் வலிக்க, பத்து நாளும் இங்கிட்டுத்தானே சுத்தப்போகிறோம் என்று ..
பாதையில்லா பயணம் – பிரமிள் (வம்சி)
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் – மம்மூட்டி (வம்சி)
கொல்லனின் ஆறு பெண் மக்கள் – கோணங்கி (வம்சி)
ரப்பர் – ஜெயமோகன் (கவிதா)
நவீன வேளாண்மை (விவசாய இதழ்)
இவர்கள் – நகுலன் (காவ்யா)
வாக்குமூலம் – நகுலன் (காவ்யா)
நாய்கள் – நகுலன் (காவ்யா)
கண்ணாடியாகும் கண்கள் – (காவ்யா)
சமவெளி – வண்ணதாசன் (சந்தியா) இராமசாமி கண்ணனுடையது 🙂
ஸ்ரீசக்ரபுரி – ஸ்வாமி ஓம்கார் (அகநாழிகை)
தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை – வண்ணநிலவன் (நற்றிணை)
ஈராறுகால்கொண்டெழும் புரவி – ஜெயமோகன் (சொல் புதிது)
புத்தகங்களுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
குறிப்பு: கையில் ஐபோன்5 இல்லாததால், டைனோஜிக்காக, ஆண்ட்ராய்ட் போனிலேயே பர்ப்பிள் கலர் வருமாறு எடுத்திருக்கிறேன். 
நன்றி! :)))

தெளிவாக ஏமாறுவது எப்படி?

தெளிவாக ஏமாறுவது எப்படி?

டெக்னிக்கலாக நாம் மாட்டிக்கொள்ளும் வியாபார விஷயங்கள் அநேகம்.

ஒரு சாதாரண சிம்கார்ட் பிரச்சனையைப் பார்ப்போம்.

புதிய நம்பர்வாங்க சிம் கார்ட் அப்ளிக்கேஷனை பூர்த்தி செய்து, போட்டோ ஒட்டி, 50 ரூபாய் ரீசார்ஜ் செய்து, அந்த நம்பரை மனப்பாடம் செய்து, குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் அதை தெரியப்படுத்திவிட்டு அப்பாடா என்று இருக்கும்போது ஒரு அழைப்பு வரும்.

அய்யா நீங்கள் இன்னும் உங்களுடைய இருப்பிடச் சான்று, அடையாள அட்டை விவரங்களை எங்களுக்கு அனுப்பவில்லை, சட்டப்படி இது உடனே எங்களுக்கு வந்து சேராவிட்டால் நாங்கள் உங்கள் எண்ணைத் துண்டித்துவிடுவோம், உடனே ஆவண செய்யவும்.

99 சதவீதம் பேர் என்ன செய்வார்கள்?? ஓடிச்சென்று சிம் கார்ட் வாங்கிய கடையில் புகார் அளிப்பார்கள், அவர்களோ, நாங்கள் ஏஜெண்டிடம் தந்துவிட்டோம் நீங்கள் கம்பெனிக்கே நேரில் சென்று குடுத்துவிடுங்கள் என்பார்கள், உடனே அந்தக் கம்பெனியின் அலுவலகம் எங்கே இருக்கிறதென்று ஓடி, அலைந்து மீண்டும் ஒரு அப்ளிகேஷன், போட்டோ, செராக்ஸ் இத்யாதி.. இத்யாதி.

சிறிய விஷயம்தான், நீங்கள் முதன் முதலில் அப்ளிகேஷன் பூர்த்தி செய்து தரும்போது ’பெற்றுக்கொண்டேன்’ என்ற அக்னாலெட்ஜ்மெண்ட் ரிசிப்ட்டை சீல்போட்டு வாங்கி இருந்தால், இந்த அலைச்சலே இல்லை. (அப்படி ஒன்று அந்த அப்ளிக்கேஷனில் இருப்பதே பலருக்குத் தெரியாது) ஆனால் நாம் நம்புவோம், யாரை? கடைக்காரரை, ஏஜென்டின் அல்லது கடைக்காரரின் அலட்சியத்தால் நமது முக்கியமான முகவரி, அடையாளம் குறித்த நகலும், நமது புகைப்படமும் காணாமல் போவது, அது அப்படியே அழிந்துபோனால் பரவாயில்லை, ஆனால் அதை வைத்து வேறு யாராவது தவறான வழியில் பயன்படுத்திவிட்டால், அதற்கும் சட்டம் நம்மையும்தான் கேள்வி கேட்கும். அதான் தொலைஞ்சு போச்சுல்ல ஏன் புகார் பண்ணவில்லை? என்று பதிலுக்கு மடக்கும்!

என்னிடமும் இதே போல் ஒருமுறை கேட்கப்பட்டபோது, நான் ஒழுங்காக ஆவணங்களை செலுத்திய ரசீதைக் காண்பித்தேன், இது என் தவறல்ல உங்களுடைய தவறு, அதற்குப் பொறுப்பேற்று உங்கள் கம்பெனியுடைய கவனக்குறைவினால் தொலைந்து போய்விட்டதால், அதனால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனியே பொறுப்பு என்று லெட்டர் குடுத்தால் புதிய அடையாள விவரங்கள் தருகிறேன் என்றேன்,  தேவையில்லை சார் உங்கள் எண்ணிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று உடனே சான்றளித்தார்கள். ஏன்? தவறு அவர்கள் மீது இருந்தது? சரியான ஆவணங்கள் என்னிடம் இருந்தது.

இது மட்டுமல்ல, அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) அதிகமாக விற்கும் குடிநீர் பாட்டிலிலிருந்து, வெளியில் அடிக்கப்படும் எந்தக் கொள்ளையையும் நாம் தட்டிக்கேட்பதே இல்லை, அவ்வளவு ஏன்? அது என்ன விலை என்றோ, அதன் தயாரிப்பு தேதி என்ன? உபயோகிக்கத் தகுந்ததா இல்லையா? ம்ஹும் எதையுமே கவனிப்பதில்லை, இது முக்கியமாக குழந்தைகளுக்கான உணவுப் பண்டங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கும்போது அவசியம் கவனிக்கப்படவேண்டும், குழந்தைகளுக்கு தின்பதற்குத் தரும் முன் நாம் சிறிது வாயில் போட்டு சரியாக இருக்கிறதா என்று சோதித்துவிட்டு தருவது முக்கியம். இது நம்முடைய அலட்சியமல்ல, இதையெல்லாம் கவனித்து சரியாக விற்கவேண்டியது கடைக்காரரின் பொறுப்பு எனவே அதை அவர் சரியாகத்தான் செய்வார் என்று நம்புகிறோம், ஆனால், அதைத்தான், அந்த நம்பிக்கையைத்தான் அவர்கள் தவறாகப் பயன்படுத்திவிடுகிறார்கள்.

இன்றிலிருந்து. நீங்கள் வாங்கும் பொருளின் உற்பத்தி நாள், முடிவு நாள், அதிக பட்ச சில்லறை விலை, அளவு, எல்லாவற்றையும் கவனிக்கத் துவங்கினால் எந்த அளவுக்கு ஏமாற்றப்படுகிறோம் என்பது புலப்படும், உதாரணத்திற்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் பொருட்காட்சிகளில் குடிநீர் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை பொங்கல் லீவில் நீங்களே நேரில் சென்று காணலாம். அரசாங்கமே கேட்காத இவர்களை நாம் என்ன கேட்டுவிடமுடியும் என்று நினைப்பீர்கள்தான், முடிந்தால் வீட்டிலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லலாம், அல்லது உள்ளே நுழையும் முன்னர் வெளியில் சரியான விலையில் கிடைக்கும் இடத்திலிருந்து வாங்கிச் செல்லலாம்.

மனமிருந்தால் மார்கபந்து 🙂

இதிலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும்??

ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்கலாம், முடியாது சார் அவங்க எதாவது திட்டிட்டாங்க, அடிச்சிட்டாங்கன்னா? என்று சங்கோஜப்பட்டால் இருக்கவே இருக்கிறது புறக்கணிப்பு. அப்படி விற்பவர்களைப் புறக்கணித்தாலே போதுமானது அவர்கள் நிச்சயம் திருந்துவார்கள் அதோடு நியாய விலைக்கும் தர முன்வருவார்கள், அல்லது வியாபாரத்தை விட்டே விலகிவிடுவார்கள்.

இதெல்லாம் எதுக்கு சார் ? ரெண்டு ரூபாய்ல என்னா ஆயிடப்போகுது என்பதுதான் மிகப்பெரிய ஏமாற்றுத்தனங்களுக்கான அஸ்திவாரம் என்று உணருங்கள்.

சமீபத்திய தினசரிகளில் கால் பக்கத்திற்கு சர்வீஸ் டாக்ஸ் வேறு சர்வீஸ் சார்ஜ் வேறு என்று தெளிவாக அரசாங்கமே அறிவிப்பு செய்ததே எதற்கு தெரியுமா? நாயர் கடையில் டீ குடிப்பவர்களுக்கு அல்ல, பெரிய பெரிய உணவகங்களில் பில்லில் 10 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் என்று போட்டு வாங்குவதற்குத்தான். நீங்கள் வாங்கும் பொருள் மட்டுமல்ல, பில்லைக்கூட சரிபார்க்கவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வுதான் அது,

ஒரு புதிய அறிவிப்பு வருகிறது, அழகான கவர்ச்சியான விளம்பரத்துடன், உடனே அதில் நாம் மதிமயங்குகிறோம், முன்னரே சொன்ன கடைக்காரர் மீது வைத்த நம்பிக்கை அடிப்படையில், ஆனால் நமக்கு விளம்பரப்படுத்தியதும், நாம் பெறுவதும் வெவ்வேறாக இருக்கிறது, உடனே குய்யோ முய்யோ என்று அலறினால் அப்பொழுதுதான் கண்டிஷன் அப்ளை என்ற கண்ணுக்குத் தெரியாத பூதம் கண்ணாடிக்குடுவையிலிருந்து கிளம்பி வரும், அதில் சிறிய எழுத்தில் படிக்காமத்தானே வாங்கின? கெளம்பு காத்து வரட்டும் என்று போட்டிருக்கும்,

என்ன செய்யலாம்? பொறுத்துப் பார்க்கலாம், அல்லது கேள்வி கேட்கலாம் எந்த அளவிற்கு சாத்தியம்? இல்லை என்றால் என்ன ஆகும்? இது உண்மையில் மதிப்புள்ளதுதானா?

இதிலும் முக்கியமான அம்சம் இருக்கிறது, இது அல்லது இதைவிட சிக்கலான கேள்விகளுக்கு எல்லாமே உங்களுக்குப் பிடித்த பதிலே கிடைக்கும், ஆனால் வாய்மொழியாக, எழுத்துப் பூர்வமாக அல்ல, எது எழுத்துப்பூர்வமாகக் கிடைக்கிறதோ அதில் கொஞ்சமேனும் உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.

ஒரு பொருள் அல்லது சேவையை பெற முடிவு எடுக்கிறீர்கள்.

விலை என்ன? தரமானதுதானா? எக்ஸ்பைரி தேதி என்ன? பார்க்கும் பொருளும் டெலிவரியாகும் பொருளும் வெவ்வேறாக இருந்தால் என்ன செய்வது? கெட்டுப் போயிருந்தால் என்ன செய்வது? யாரை அணுகவேண்டும்? வழிமுறைகள் என்ன? சட்ட வழிமுறைகள் என்ன? சரியான ஆவணங்கள் பத்திரப்படுத்துகிறீர்களா? பிரச்சனைகளின் முழுப் பரிவர்த்தனைகளையும் சேமிக்கிறீர்களா? புகார்களை சரியான நபர்களுக்கு தாமதிக்காமல் அனுப்புகிறீர்களா? தொடர்ந்து கண்காணித்து நீதியும் நிவாரணமும் பெறுகிறீர்களா? ரைட், ஆட்டத்தில் குதியுங்கள்.

உங்கள் செல் போனில் படம் எடுக்கும் வசதி இருக்கிறது, முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது அதைத் தெளிவாக ஒரு படம் எடுத்துக்கொள்ளலாம், முக்கியமான உரையாடல்களை போனிலேயே ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளலாம், இதெல்லாமே கார்ப்பொரேட்டின் கரங்கள் கழுத்தை நெரிக்கும்போது தப்பிக்க உதவும்.
கவனம், வாய் வார்த்தையோ, விளம்பரமோ, பில் இல்லாத பொருளோ, அத்தாட்சி இல்லாத ஆவண சமர்ப்பித்தலோ, சரிபார்க்காமல் பெறப்படும் டெலிவரியோ உங்களுக்கு பிரச்சனைகளையே தரும், ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள், விழிப்புணர்வு வாடிக்கையாளருக்குத்தான் தேவை. ஏமாந்துவிட்டு கொள்ளையடிக்கிறாங்க சார் என்று அவர்களைக் குறை கூறிப் பயனில்லை.
மீண்டும், ஒன்றை வாங்குவதற்கு முன்னால் அது பற்றிய முக்கிய விவரங்களை அறிந்துகொள்ளுங்கள், அல்லது அறிந்தவர்கள் துணையை நாடுங்கள், யாருக்குமே தெரியாத சூப்பர் டூப்பர் டெக்னாலஜி என்றால் சிறிது தாமதிப்பதில் தவறில்லை. இந்த உலகத்தில் எதுவுமே இலவசமும் இல்லை.

டிஸ்கி: வேறு எதையோ நினைத்து படிக்க வந்திருப்பீர்களேயானால் மன்னிக்கவும் அதற்கு கும்பெனி ஜவாப்தாரியல்ல.:)))

ஒரு பரதேசியின் பயணம் 6 – சபரிமலை.

ரு பரதேசியின் பயணம்  6 – சபரிமலை.
காலையில் பம்பா நதிக்கரையில் 

நான்காவது முறையாக சபரிமலை செல்லும் வாய்ப்பு இந்தமுறை மணிஜி மூலமாகக் கிட்டியது. மாலை போட்டு, விரதம் இருந்து சென்ற 18ம் தேதி மதியம் வைகை எக்ஸ்ப்ரஸில் நான், மணிஜி, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் கிளம்பினோம். சென்னையிலிருந்து திண்டுக்கல் வரை ரயில், அங்கிருந்து பேரூந்து மூலம் குமுளி, அங்கிருந்து பம்பா சென்று மலை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது எங்கள் திட்டம். 
பம்பா பேரூந்து நிலையம்.


20 நாட்களுக்கு முன்பாக, கேரள போலீஸால் அறிமுகப்படுத்தப்பட்ட விர்ச்சுவல் க்யூ முறை பற்றி வாசு சொன்னார். அந்தத் தளத்தில் 19ம் தேதி காலை 5 மணி வரிசைக்காக முன்பதிவு செய்திருந்தோம்.

தகவல் நிலையங்களும், அப்பல்லோ சிகிச்சை மையமும்

ரு 33kb  அளவு வருமாறு சமீபத்திய புகைப்படம் இணைத்து, நமது விவரங்களுடன் அந்தத் தளத்தில் பதிவு செய்தால் பார்கோட் கொண்ட ஒரு கூப்பனை அந்த இணையதளம் நமது மின்னஞ்சலுக்கு பிடிஎஃப் பைலாக அனுப்பிவைக்கிறது.  இதை ப்ரிண்டவுட் எடுத்துவைத்துக்கொண்டு பம்பாவில் அதற்கென இருக்கும் கவுண்டரில் காண்பித்து, ஒரு சாப்பா வாங்கிக்கொள்ளவேண்டும்.

மரக்கூட்டம் – விர்ச்சுவல் க்யூ பிரியும் இடம்.

ரங்குத்தி தாண்டி மரக்கூட்டம் அருகே இரு வழியாகப் பிரித்து இடது புறம் கூப்பன் சாமிகளையும், வலதுபுறம் சாதா சாமிகளையும் அனுப்பி வைக்கிறார்கள்.

விர்ச்சுவல் க்யூ சாமிகளும், சாதா சாமிகளும்

ன்னிதாதத்திற்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய ஷெட்டில் இந்தக் கூட்டத்தை தனித்தனியே வரிசைப்படுத்தி சிறு சிறு குழுக்களாக படியேற்றி பதினெட்டாம் படிக்கு அனுப்புகிறார்கள், ஒரு குழு தேங்காய் உடைத்து பதினெட்டாம் படி ஏறி முடித்த உடன் அடுத்த குழு அனுப்பப் படுகிறது, இதனால் காலதாமதமானாலும் நெரிசலின்றி அனைவரும் பதினெட்டுப் படி ஏறி சாமிதரிசனம் செய்ய முடிகிறது. இந்த கூப்பன் திட்டத்தால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் எங்களுக்கு மிச்சமானது, 7.30க்கு பம்பையிலிருந்து ஏறத்துவங்கி 10.50க்கெல்லாம் தரிசனம் முடிந்து வெளியே வந்துவிட்டோம். அதே நேரம் இந்த கூப்பன் இல்லாமல் ஏறியவர்கள் 4மணிக்குப் பிறகே தரிசனம் காணமுடிந்தாக கூறக்கேட்டோம். 

பரிமலை சில வருடங்களிலேயே மிகப்பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது,.

ம்பையிலிருந்து சன்னிதானம் வரை கழுதைப் பாதைவழியே சிமெண்ட் கொண்டு சாலை அமைத்து ட்ராக்டர் ஓட்டுகிறார்கள்,

சேகரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் எமன்கள்

பரியில் குமியும் குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் இன்னும் பிறவற்றை உடனுக்குடன் பம்பைக்கு கொண்டு செல்வதற்கும், பம்பையிலிருந்து சபரிக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பல ட்ராக்டர்கள் சென்று வந்த வண்ணம் இருக்கின்றன.

அவசர சிகிச்சைக்காக

சுடுவெள்ளம்
ஓக்ஸிஜன் பார்லர்

ம்பையிலிருந்து நீலிமலை ஏற்றம் முழுக்க பல ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைத்துள்ளார்கள், வழிஎங்கும் சூடாக்கப்பட்டு பதிமுகம் கலந்த சிகப்புநிற குடிநீர் தாராளமாக விநியோகம் செய்கிறார்கள், இருதயப் பரிசோதனைக்கூடங்களும், அவசரசிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன அதை நிமிடத்திற்கு ஒருதரம் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கிறார்கள்.

 ப்படியும் மயங்கிய ஓரிரு பக்தர்களை உடனுக்குடன் ஸ்ட்ரெச்சரில் முதலுதவிக்காக அழைத்துச் சென்றதையும் கண்டோம். தெளிவாக உடல்நிலை பரிசோதித்துப் பின்னரே மலை ஏறுங்கள் என்று அனைத்து மொழியிலும் அறிவித்தும் சிலர் இவ்வாறு மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். பக்தி தாண்டி மலைஏற்றம் என்பது மனதும் உடலும் சம்பந்தப்பட்டது.

சரங்குத்தி
டோலி சார், டோலி

த்தனைக்கும் அருமையாக பாதை போட்டு வழிநெடுக எல்லா வசதிகள் கிடைத்தும் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் கொடுமை. 

நீலிமலையிலிருந்து ஒரு பார்வை

20வருடங்களுக்கு முன் நான் கண்ட காடு கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய ஆறுதல், மலையாளிகள் காட்டின்மீது வைத்துள்ள கொஞ்ச நஞ்சப் ப்ரேமை வாழ்க. 

நினைவில் காடுள்ள மரம்

19அதிகாலை பம்பையை அடைந்து குளித்து மலைஏறி தரிசனம் செய்து, மாலை 4 மணிவாக்கில் பம்பா பஸ்ஸ்டாண்ட் வந்தோம், சென்னைக்கான தமிழ்நாடு அரசுப் பேரூந்து ரூ.750/- மட்டும் வாங்கிக்கொண்டு சென்னைக்கு அல்ட்ராடீலக்ஸ் என்னும் மலைப்பாதைக்கு ஒவ்வாத மிகநீண்ட பேரூந்தை ஓட்டுகிறார்கள், ஓட்டுனரிடம் பிட்டைப்போட்டதிலிருந்து அந்தப் பாதைக்கே புதியவர்கள், சீசனுக்காக ஓட்ட வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது, சுமாரான வேகம், திருப்பங்களில் தடுமாற்றம் என்று தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக இறங்கும்போது குமுளிமலைப்பாதையில் ஒரு திருப்பத்தில் பின் சக்கரம் ஒரு பள்ளத்தில் இறங்கி ஏற வண்டியின் பின்புறம் அடிபட்டு ஒருவழியாக தடவித்தடவி இறங்கினோம். 

ஓங்கி உலகளந்த..

மாலை 5 மணிக்கு வண்டி எடுத்து 6.30க்கெல்லாம் ஒரு ஓட்டலில் நிறுத்தி சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நடத்துனர் கூறியவுடன் கேட்டால் கிடைக்கும் சங்க உறுப்பினரான மணிஜி தட்டிக்கேட்க ஆரம்பித்துவிட்டார், ஒத்தாசைக்கு நானும் TNSTC வெப்சைட்டை ஓப்பன் செய்து புகார் அளிக்க நம்பரைத் தேடினேன், இதைக் கண்ட நடத்துனர் உடனே, சாமி நீங்க எங்க சொல்றீங்களோ அங்க நிப்பாட்டறேன் என்று கூறி, சிப்ஸ் வாங்க குமுளியிலும் சாப்பாட்டிற்காக வழியில் ஓர் இடத்திலும் நிறுத்தி அதிகாலை 3 மணி சுமாருக்கு திண்டுக்கல் கொண்டுவந்து சேர்த்தார். ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றமுடியும் என்பது கேட்டால் கிடைக்கும் மூலம் மீண்டும் நிரூபணமானது. (டுவைன்) 
நீரும் ஞானும் பின்னே பம்பாவும்..

ப்படியும் அந்தப் பேரூந்து பொங்கலுக்குள் சென்னை சென்றுவிடும் என்ற நம்பிக்கையில் நாங்கள் மூவரும் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் சிறிது சிரமப்பரிகாரம் செய்துகொண்டு காலை 7.30 க்கு மீண்டும் வைகையைப் பிடித்து நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.

பின்குறிப்பு:

விர்ச்சுவல் க்யூ ஒரு நல்ல திட்டம். மலைக்குச் செல்பவர்கள் அவசியம் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும்.
விவரங்களுக்கு:
 http://www.sabarimalaq.com/
மலையாள மனோரமா சார்பில் சபரிமலை பற்றி ஒரு ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டு இருக்கிறார்கள். பார்க்கிங் வசதி, முக்கிய தொலைபேசி எண்கள், வெதர், கூட்ட அளவு, கோவில் நடை திறக்கும்/பூஜா நேரங்கள் போன்றவைகளுடன் சபரிமலை செய்திகளும் அடங்கி இருக்கிறது, சிறப்பான முயற்சி,

மிழ்நாடு அரசுப் பேரூந்து நிருவனத்தின் வெப்பேஜில் குறிப்பிட்ட தொடர்பு எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை என்றே வருகிறது. பேரூந்திலும் எங்கும் குறிப்பிடவில்லை. இதில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக வேலை செய்யும் புகார் எண்களை கையில் வைத்துக்கொண்டால், அராஜகம் செய்யும் நடத்துனர், ஓட்டுனரிடமிருந்து தப்பிக்கலாம். சும்மா இல்லை சார், சொளையாக 750 ரூபாய் வாங்கிக்கொண்டு 6.30க்கு இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ளுங்கள் அல்லது பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள் வேறு எங்கும் நிற்கச் சொல்லி எங்களுக்கு ஆர்டரில்லை என்று கூசாமல் ஓசி பரொட்டா பார்சல் வாங்கிக்கொண்டு சொல்கிறார்கள்.

முடிந்தால் ரயிலிலேயே முன்பதிவு செய்து சென்று வருவது உத்தமம். 
கேரள அரசாங்கத்தின் சமீபத்திய அதிரடி சோதனைகளுக்குப் பிறகு மலையில் உணவு வகைகள் ஓரளவு நன்றாகவே கிடைக்கிறது. 
நன்றி, வணக்கம்.

சன்னிதானம்.
பதினெட்டாம் படி
அப்பம், அரவணை பிரசாதம் ஸ்டால்கள்

சாமியே சரணமையப்பா. :))

ஆண்ட்ராய்ட் போன்கள் – ஒரு அறிமுகம் – 2

முதல் பாகத்துல குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் விக்கி பேஜ யாரும் படிச்சிருக்கமாட்டீங்கன்னு தெரியும். இட்ஸ் ஓக்கே. 
மணியம்மாள் டெக்ஸ்டைல்ஸ் மாதிரி எதை எடுப்பது? எதை விடுப்பது? என்று குழப்பும் அப்ளிகேஷன்களால் மண்டை காயத் தேவையில்லை. ஆனால் என்ன மாடல் என்பது கொஞ்சம் குழப்பும்.
முன்பே சொன்னதுபோல நமக்கு என்ன தேவை என்பதைப் பொருத்தே, தேவையான விஷயங்கள் அடங்கிய ஒரு போனை தேர்ந்தெடுப்பது நல்லது. பல ஹை எண்ட் மாடல்களை வைத்துக்கொண்டு வெறுமனே பேசுவதற்குமட்டும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். 
விலை அதிகமாக இருக்கும் மாடல் நல்ல மாடல். அல்லது விலை அதிகமான மாடல் வைத்துக்கொள்வதே நான் புழங்கும் அலுவலக, மேல்தட்டு வட்டத்திற்கு எனக்கு மதிப்பாக இருக்கும் என்பது. இரண்டாவதை விட்டுவிடுவோம், சூழ்நிலை கருதி அதை அவர்கள் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால் முதல் காரணி கொஞ்சம் சிக்கலானது. காசு இருக்கிறது என்பதற்காக ஒரு ப்ரைவேட் ஜெட் வாங்கி அதை மண்பாடி லாரியில் ஏற்றி ஒரு க்ளீனரைப்போல ட்ரைவர் அருகில் அமர்ந்துகொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவது போல அபத்தமானது. பந்தாவான பொஸிஷனில் இருப்பவர்கள் மிகச் சாதாரணமான அடிப்படையான விஷயங்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். கேட்டால் எதுக்கு காச வேஸ்ட் பண்ணனும்? எப்படியும் இதன் மீதான மோகம் ஓரிரு மாதங்கள் கூட இருக்காது, அதன் பிறகு இதுவும் மற்றொரு போனே என்ற தத்துவத்தை உதிர்ப்பார்கள். எனவே எப்பொழுதும் இந்தியத் தாரக மந்திரமான சீப் அண்ட் பெஸ்ட் என்ற சூத்திரத்தினை நினைவில் வைப்போர் மேலே தொடர்க!
ஐசிஎஸ் 4.0.4 ல் இப்படித்தான் தமிழ் தெரிகிறது.

டால்பின் என்ற ப்ரவுசரைத் தரவிறக்கிப் படிக்கும்போது
இந்தியாவில் விற்கப்படும் சில ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ் எழுத்துகள் தெரிவதில் சிக்கல் இருக்கிறது. இது பெரும்பாலும் ஜின்ஜெர்ப்ரெட் 2.3.6 வெர்ஷன்களில் இல்லை. அதாவது நீங்கள் பார்க்கும் பேஸ்புக், இணையம், எஸ் எம் எஸ், கூகிள் ப்ளஸ் போன்றவைகளில் தமிழில் பகிரப்படுபவைகளில், தமிழ் எழுத்துகள் அழகாகவே தெரியும். நீங்கள் போன் செட்டிங்ஸில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. அதற்கு முன்பாக வந்த வெர்ஷன்களில் இந்தப் பிரச்சனை இருந்தது. அப்படித் தமிழ் தெரியாத பிரச்சனை ஆண்ட்ராய்டில் மட்டுமல்ல ஐபோன் தவிர்த்து மற்ற போன்களிலும் இருந்தது, அதற்கு ஒபெரா மினி எனப்படும் ஒரு ப்ரவுசரை தரவிறக்கி அதில் சில செட்டிங்ஸ் மாற்றங்கள் செய்து தமிழ் படித்து வந்தனர். 
ஜின்ஜெர்ப்ரெட் 2.3.6 (Ginger Bread) வெர்ஷனுக்குப் பிறகான ஐஸ் க்ரீம் சாண்ட்விச் (ICS 4) லும் வெர்ஷன் 4.0.3 வரை தமிழ் பல மாடல்களில் சரியாகத் தெரிகிறது, சில போன்களில் கொக்கி கொமாராக இழுத்துக்கொண்டும் தெரிகிறது.லேட்டஸ்ட் ஜெல்லி பீனில் இந்தக் குறை இல்லை என்றே நினைக்கிறேன். இதைப்படிக்கும் என்னுடைய அமெரிக்க வாசகர்கள் யாராவது ஜெல்லிபீனில் இயங்கும் நெக்ஸஸ் போனை பரிசளித்தால் அதைப்பற்றியும் எழுதத் தயாராக இருக்கிறேன். ஒரு எழுத்தாளனாக என்னால் வேறென்ன கைமாறு செய்ய முடியும்?  🙂
தமிழ்விசை பற்றி அறிய படத்தை க்ளிக் செய்யவும்.
சரி, தமிழ் படித்தால் மட்டும் போதுமா? தமிழில் தட்டச்ச ஏதேனும் வழி இருக்கிறதா? என்றால் அதற்கும் ஒரு அப்ளிகேஷன் இருக்கிறது. தமிழ்விசை எனும் அந்த விசைப் பலகையைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தட்டச்சியே தமிழைக் கொண்டுவரமுடியும் (NHM போல).
unmaiyil indha tamilai nammudaiya pOnil padikka mudivadhum ezhudha mudivadhumthaan evvalavu makilchiyaaka irukkiradhu!!
படிக்கவே கடுப்பாக இருக்கிறதல்லவா? இதற்குப் பதில் அழகு தமிழிலேயே அனைத்தையும் படிக்க முடிவதும், தட்டச்ச முடிவதும் சமூகதளங்களான பேஸ் புக், ட்விட்டர், ப்ளாக், கூகுள் ப்ளஸ் போன்றவற்றை பெரும்பாலும் பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துவிட்டது. யோசித்துப் பாருங்கள். சிம்பியன் போன்ற ஓப்பன் ஸோர்ஸ் அல்லாத சிஸ்டத்தில் இயங்கும் போன்களில் இது சாத்தியமே இல்லை. அவர்களிடம் என்னுடைய போனில் தமிழ் தெரியவில்லை என்று கேட்டால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் நம்மவர் ஒருவரே தமிழில் எழுத ஒரு தட்டச்சு அப்ளிகேஷனை உருவாக்கி அதுவும் இலவசமாகத் தந்திருக்கிறார்கள் என்றால் இது மிகப் பெரிய விஷயம்தானே? இதுதான் ஆண்ட்ராய்டின் வெற்றிக்குக் காரணம்.
பேஸ்புக்கில் தமிழ் படிக்கும்போது

ட்விட்டரில் தமிழ்.
இதுமட்டுமல்ல விதவிதமான கீபோர்ட்கள் இருக்கிறது. ஸ்வைப் என்பது அதில் ஒன்று How are you  என்று தனித்தனியாக ஒவ்வொரு பட்டனாக ஒற்றி எடுக்காமல் அப்படியே ஒவ்வொரு எழுத்தையும் தொட்டு ஒரு கோலம் போட வேண்டியதுதான் வார்த்தை ரெடி! 
கோலம் போட்டு டைப் பண்ணும் ஸ்வைப் கீ போர்ட்
இப்படி அவசியமானவற்றை எங்கே தேடுவது? எப்படித் தரவிறக்கிப் பயன்படுத்துவது? அதற்குத்தான் கூகிள் ப்ளே என்ற மார்க்கெட் உதவுகிறது. https://play.google.com/store இது உங்கள் ஆண்ட்ராய்ட் போனிலேயே இருக்கும். இதன் மூலம் வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் தரவிறக்கிப் பயன்படுத்தமுடியும். இதில் தரவிறக்க உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் கண்டிப்பாகத் தேவை. இது கிட்டத்தட்ட கூகுள் சர்ச் போலத்தான். ஏதேனும் ஒரு குறிச்சொல்லை வைத்துக்கொண்டு அதற்கான அப்ளிகேஷனை நீங்கள் தேடிக் கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆப்ஸிற்கும் ரேட்டிங், அதைப் பயன்படுத்தியவர்களின் விமர்சனங்கள் இருக்கும். உங்கள் கணினியிலிருந்தே உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்க கட்டளை குடுத்தால் அது ஆட்டோமேட்டிக்காக உங்கள் போனில் டவுன்லோடாகி இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்துவிடும். அஃப்கோர்ஸ் இணையத் தொடர்பு மூலமாகத்தான். இணையத் தொடர்பில்லாத ஸ்மார்ட்போன் இரண்டு கையில்லாத சால்வை போத்திய கெட்டபய காளியைப் போல.
சரி, இனி போன் வாங்குவதிலிருந்து ஆரம்பிப்போம்.
முதலில் என்ன பட்ஜெட் என்பதில் உங்களுக்கான தோசை, சாதாவாகவோ, மசாலா சேர்த்தோ, ஸ்பெஷல் சாதாவாகவோ, ஊத்தப்பமாகவோ கிடைக்கும். 
ஏனென்றால் பட்ஜெட்டை சார்ந்ததுதான் தொடுதிரை / அளவு (அதாங்க டச் ஸ்க்ரீன் ), இன்டர்னல் மெமரி, ப்ராசசர், கேமரா மெகா பிக்ஸல் மற்றும் தரம் போன்றவை அமையும். 10000த்திற்குள்ளான போன்கள், 15000த்திற்குள்ளான போன்கள், 20, 30, நாற்பதாயிரத்தை நெருங்கியும் மாடல்கள் இருக்கின்றன. 
1ஜிகா ஹெர்ட்ஸ் டுயல் கோர் ப்ராசசர், 512>எம்பி ராம், 4> ஜிபி இண்டர்னல் மெமரி, 3.5>இன்ச் ஸ்க்ரீன், 5 மெகா பிக்ஸல் கேமரா, கூடவே ஒரு ஃப்ரண்ட் கேமரா (ஸகைப், கூகுள் ஹேங் அவுட், வீடியோ காலிங்கிற்கு) என்பதை குறைந்த பட்ச அளவாக இருந்தால் ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் மாடலை ஓரளவு நம்மால் அனுபவிக்க முடியும். இதில் முக்கியமானது இண்டர்னல் மெமரி எனப்படும் போனிலேயே இருக்கும் நினைவகத்தின் அளவு. பல மாடல்களில் இது மிகக் குறைவாக இருக்கும் அதனாலேயே விலை கம்மியாக இருக்கும். நீங்கள் பல அப்ளிகேஷனை தரவிறக்கிப் பயன்படுத்தத் துவங்கும்போது இந்த நினைவகம் முழுவதும் நிரம்பி உங்கள் போனின் செயல்பாட்டை மிகவும் மெதுவாக ஆக்கிவிடும், அருகிலிருக்கும் அமெரிக்க நண்பர் இதுக்குத்தாங்க ஆப்பிள் ஐபோன் வாங்குங்கன்னு சொன்னேன் என்று உங்களை வெறுப்பேற்றுவார். (உடனே அதுல பேட்டரியக் காமிங்க, மெமரி கார்ட் ஸ்லாட் இருக்கா? என்றெல்லாம் எதிர்கேள்வி கேட்டு சமாளிப்போம்னு வெச்சிக்கிடுங்க இருந்தாலும்…) 
விற்பவரும் சாமர்த்தியமாக 32ஜிபி வரைக்கும் எக்ஸ்பாண்ட் பண்ணிக்கலாம் சார் என்று உங்களை அசரடிப்பார், ஆனால் இண்டர்னல் மெமரியில் இருக்கும் அனைத்தையும் நீங்கள் எஸ் டி கார்டுக்கு மாற்ற முடியாது என்பதை நினைவில் வையுங்கள். (ரூட்டிங் என்றொரு பைபாஸ் சர்ஜரி இருக்கிறது அதைப் பற்றி இப்பொழுது வேண்டாம்)
சரி, இண்டர்னல் மெமரி ஓக்கே. ஒரு ஜிகா ஹெர்ட்ஸ் டுயல் கோர் ப்ராஸஸர் வேகமான செயல்பாட்டுக்கு உதவும். சரி. அதுவும் இருக்கிறது. பிறகு? கேமரா. மின்னுவதல்லாம் மின்னலல்ல என்பதைப்போல 5 மெகா பிக்ஸல் என்று சொல்லுவதெல்லாமும் அதே தரத்தில் இருக்கும் என்பது நிச்சயமில்லை. எவ்வளவு சாதாரணக் கேமராவும் நல்ல வெளிச்சத்தில் நன்றாகத்தான் படமெடுக்கும் என்றாலும், பயன்படுத்தப் படும் லென்ஸ் வைத்து படத்தின் தெளிவு கூடுகிறது, போலவே அதில் உபயோகப் படுத்தப்படும் எல் இ டி ப்ளாஸ் லைட்டும். ஆக, இது பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் கம்பெனியைப் பொறுத்து வேறுபடுகிறது. நோக்கியாவில் 3 மெகா பிக்ஸலில் அருமையாக விழும் படங்கள் சாம்சங்க் 5 மெகா பிக்ஸலில் சாதாரணமாக இருப்பதை கண்டிருக்கிறேன். எனவே கேமரா உங்களுக்கு முக்கியமென்றால் ஒரு படம் எடுத்து அதன் க்வாலிட்டி எப்படி? என்று சோதித்து வாங்குவதில் தவறில்லை. ஏனெனில் நல்ல கேமரா இருக்கும் போன் உங்கள் பிரயாணத்தில் தனியே ஒரு கேமராவைத் தூக்கிச் செல்வதிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதோடு, கண்டதும் உடனே பாக்கெட்டிலிருந்து படமெடுக்க உதவுகிறது. அது மட்டுமில்லை எடுத்த படத்தை நீங்கள் உடனே மெயிலிலோ, ட்விட்டரிலோ, ப்ளூடூத்திலோ, பேஸ்புக்கிலோ பகிர்ந்துகொள்ள முடியும். 
ஒரு சிம், இரண்டு சிம் கார்டுகள் கொண்ட போன்களும் கிடைக்கின்றன. உங்களுக்கு அவசியமானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 
உதாரணத்திற்கு இரண்டு சிம் கொண்ட மூன்று மாடல்களைப் பார்ப்போம்:
நமது பட்ஜெட் 10000/- என்றால்..
சாம்சங் கேலக்ஸி ஏஸ் டுயல்
சோனி டிப்போ டுயல்
மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ110
இந்த மூன்று மாடல்களில் மேலே சொன்ன அளவீடுகளை வைத்துப் பார்த்தால் எது சிறந்தது? நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்? 
முடிந்தால் இங்கே பதில் கூறுங்கள். அல்லது அலுவலகம் சென்று வரும் வழியில் லைவ் டெமோ காண்பிக்கும் ஒரு ஷோரூமில் இந்த மாடல்களை உபயோகித்துப் பாருங்கள். அல்லது அடிப்படையான விசயங்களை உங்களுக்குச் சொல்லும் கீழே உள்ள தளத்தில் சென்று வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் உபயோகித்தவர்களின் கருத்துகளையும் படியுங்கள். 
உதாரணத்திற்கு, மேலே சொன்ன மாடல்களின் ஒரு ஒப்பீடு: 
(இந்தத் தளத்தில் வேறு, வேறு மாடல்களைக்கூட நீங்கள் ஒப்பீடு செய்துகொள்ளலாம். இதெல்லாமே அந்தந்த தயாரிப்பாளர்கள் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்டவை, ஒன்றை வாங்கச் செல்வதற்கு முன்பான அதைப்பற்றிய சிற்றறிவுக்கு இவைகள் உதவுமே அன்றி இவையே வேதவாக்கல்ல என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.)
http://www.gsmarena.com/ இந்தத் தளத்தில் உங்களுக்குப் பிடித்த மாடலை செலக்ட் செய்து அதன் டெக்னிக்கல் விவரங்கள், அதை வாங்கியவர்களின் கருத்துகள் (அவை அனைத்தும் உண்மையுமல்ல பொய்யுமல்ல 🙂 )போன்றவற்றையும் படியுங்கள். 
மேலே உள்ளவைகள் உதவிகரமாக இருந்ததா? அல்லது மேலும் குழப்புகிறதா? அல்லது, அய்யா சாமி ஆண்ட்ராய்ட் பொழச்சிப்போகட்டும் அதப்பத்தி எழுதிக் கொலபண்றத நிப்பாட்டுங்க, என்று தோன்றுகிறதா? எதுவா இருந்தாலும் கருத்த சொல்லுங்க பாஸ் 66A எல்லாம் பாயாது. 
டிஸ்கி: தமிழ்மணம் ரெகுலராகப் போய் மாமாங்கம் ஆகிவிட்டதால், சமீபத்தில் சென்றபோது அண்ட்ராய்டைப் பற்றி நன்றாக எழுதி இருக்கும் பலரின் தளங்களையும் வாசிக்க முடிந்தது. அடுத்த இடுகையிலிருந்து அவற்றின் இணைப்பையும் தர உத்தேசம். உங்களைக் கவர்ந்த இடுகை பற்றியும் கமெண்ட்டில் நீங்கள் தெரிவிக்கலாம். எனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

தொடர்வதற்கு நன்றி.
(கொடுமை தொடரும்..)

ஆண்ட்ராய்ட் போன்கள் – ஒரு அறிமுகம் – 1

ஆண்ட்ராய்ட் செல்பேசிகள்.
ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்? அண்ட்ராய்ட் போன், ஆப்பிள் ஐபோன், விண்டோஸ் போன். இதில் எதை வாங்குவது? 
சரி, முதலில் ஸ்மார்ட் போன் என்றால் என்ன? 
இண்டெர்நெட் வசதி பரவலாக்கப்பட்டபிறகு, செல்பேசிகள் வெறுமனே நீ நல்லா இருக்கியா? நாசமாப் போனியா? என்ற குசலம் விசாரிப்புகளுக்கும், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற அதிமுக்கிய தகவல் பறிமாற்ற எஸ் எம் எஸ் குறுஞ்செய்திகளையும் தாண்டி அருமையான எஃப் எம் ரேடியோவாகவும், எம்பி3 ப்ளேயராகவும் மெதுவாக அடைந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து ஒரேயடியாக, சாட்டிலைட் மேப், அட்டகாசமான ஸ்டில்/வீடியோ கேமரா, ஹை டெபினிஷன் வீடியோ, ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங், நேரடி 3ஜி வீடியோ கான்ப்ரன்ஸ், இண்டெர்நெட் ப்ரவ்ஸிங் என்று உள்ளங்கையளவு கம்ப்யூட்டராகவே ஆகிவிட்டது. இதற்கு ஒரு பெயர் வைக்கவேண்டாமா? அதுதான் ஸ்மார்ட்போன்.
ஆஹா, வந்ததுபார் யுகப்புரட்சி என்று செல்பேசி தயாரிப்பாளர்களும் அடித்து ஆடத்துவங்கினார்கள். ஏற்கனவே கோலோச்சிக்கொண்டிருந்த ஆப்பிள் கம்பெனியின் ஐபோன் சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது, தொடுதிரை வசதி, பல விதமான பயனுள்ள அப்ளிகேஷன்கள், செக்யூரிட்டி, வேகம் என்று சவால்விடமுடியாத உச்சத்தில் இருந்தது.
அன்று இந்தியாவில் இண்டு, இடுக்கெல்லாம் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்தது நோக்கியா. அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான சிம்பியனில் நோக்கியா என்ன தருகிறதோ அது தரும் விலையில் மக்களும் வாங்கி அதில் என்ன இருக்கிறதோ, அதை சூப்பரோ, சூப்பர் என்று புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்த நேரத்தில்தான், ஆண்ட்ராய்ட் என்னும் புதிய ஓப்பன் ஸோர்ஸ் எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கூகிளால் அசிர்வதிக்கப்பட்டு  சாம்சங் கம்பெனியால் முன்னெடுக்கப்பட்டு வித விதமான மாடல்களில் ஆப்பிளின் ஐபோன் வசதிகளுக்கிணையாக ஆனால் குறைந்த விலையில் மார்க்கெட்டில் நோக்கியாவையும் அதன் சிம்பியனையும் அடித்து ஆட ஆரம்பித்தது.
ஹெச்டிசி, சோனி, மோட்டரோலா, எல்ஜி போன்ற பிற கம்பெனிகளும் கூடவே சேர்ந்துகொள்ள ஸ்டார்ட் மீஜிக் என்று எங்கு பார்த்தாலும் ஆண்ட்ராய்ட் மாயை. ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால் ஆண்ட்ராய்ட் மூலம் உலகமே உங்கள் கையில் என்னும் அளவிற்கு சற்றொப்ப 5000 ரூபாயிலிருந்து போன்கள் விற்கப்பட ஆரம்பித்ததும், தகத்தகாய 3ஜி சிம்மைப் போட்டுக்கொண்டு மக்கள் இண்ட்டெர்நெட்டில் சீன் போட ஆரம்பித்து இதோ உங்க போன் ஐசிஎஸ்ஸா? ஜெல்லி பீனா என்று கேட்கும் அளவிற்கும், ஐயோ கொல்றாய்ங்க என்று ஆப்பிள் கேஸ் போட்டு சாம்சங்கை கோர்ட்டுக்கு இழுக்கும் அளவிற்கும் ஆண்ட்ராய்ட் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது என்றால் மிகையில்லை என்று எழுதினால் அது க்ளிஷேவாக இருந்தாலும் இதுவே உண்மை.      
சரி சார், எனக்கு நம்பர் போட்டு பச்சை பட்டனை அமுக்கி மிஸ் கால் குடுக்கத் தெரியும், சிகப்பு பட்டனை அமுக்கி காலை கட் செய்யத் தெரியும். ஒன் நியூ மெஸ்ஸேஜை ஓப்பன் பண்ணி 45கோடியே 50 லட்சம் விழுந்த லாட்டரி எஸ் எம் எஸ்ஸை வைத்துக்கொண்டு எங்கே போய் பணம் வாங்குவது என்று குழம்பி குபேரனுக்கு நன்றி சொல்லி யாருக்கும் தெரியாமல் ஐஎஸ்டி போட்டு அந்த நைஜீரியாக்காரனை நம்பத் தெரியும். ப்ளூ டூத் ஆன் பண்ணி அனுஷ்கா போட்டோவை அடுத்தவரிடமிருந்து வாங்கி ஸ்க்ரீன் சேவராக வைத்துக்கொள்ளத் தெரியும், எவண்டி உன்னப் பெத்தான் என்று ரிங் டோன் வைக்கத் தெரியும். பிறகு எதற்கு எனக்கு ஆண்ட்ராய்டும், ஸ்மார்ட் போனும் என்கிறீர்களா? நல்லது இதோடு எஸ்கேப் ஆகி அந்த நைஜீரியா எஸ் எம் எஸ டிலிட் பண்ணிட்டுப் போய் புள்ள குட்டியப் படிக்க வைங்க. 
சூப்பரா இருக்கும் சார் ஆண்ட்ராய்டுன்னு சொன்னானேன்னு வித்தவன நம்பி வாங்கினேன், ஒரு இழவும் புரியல, எங்க தொட்டாலும் சிலுத்துக்குது என்று புலம்பும் ஆண்ட்ராய்ட் போனை அது விற்ற பெண் அழகாக இருந்ததிற்காகவோ, கூடவே நான்ஸ்டிக் கடாய் ப்ரீயாகக் குடுத்தார்கள் என்பதற்காகவோ அறியாமல் வாங்கிய ஞானப்பழமா நீங்கள் ? உங்களுக்காகத்தான் சார் இந்த இடுகை, வாங்க எதோ எனக்குத் தெரிஞ்சத உங்களுக்கும் சொல்றேன்.
ஆண்ட்ராய்ட் என்பது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருள். விண்டோஸ் மென்பொருளில் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ்7.  போல இதற்கும் வெர்ஷன்கள் உண்டு. ஆனால் கட்டுப்பாடுகள் இல்லை, அதாவது ஆண்ட்ராய்ட் பற்றிய ஞானம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு அவசியமான ஒரு அப்ளிகேஷனை நீங்களே உருவாக்கி உங்கள் போனில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 
ஏப்ரல் 30, 2009 ல் கப் கேக் 1.5 என்ற பெயரில் ஆரம்பித்து , டோனட், எக்லேய்ர், ஜிஞ்சர் ப்ரெட், ஹனிகோம்ப், ஐஸ் க்ரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன்  என்று நாக்கைச் சப்புகொட்டும் பெயர்களை தன்னுடைய ஒவ்வொரு வெர்ஷனுக்கும் கொண்டு பலவிதமான முன்னேற்றங்களுடன் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது ஆண்ட்ராய்ட்.
போன்களின் ஹார்ட்வேரை குறுகக் குறள் போன்று குறுக்கிச் செய்து பல ஜால வித்தைகளை ஏற்ற ஏற்ற இந்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரும் வெர்ஷனும் மாறிக்கொண்டே இருக்கிறது.
8 மெகாபிக்ஸல் கேமரா (பின் பக்கம்) 1.2 மெகாபிக்ஸல் கேமரா (முன்புறம் வீடியோ காலிங்கிற்காக) 5இன்ச் அளவிற்கான கண்ணைப் பறிக்கும் தொடுதிரை (டச் ஸ்க்ரீன்), மெமரி கார்ட் பொருத்தும் வசதி, இரண்டு சிம்கார்டுகள் பயன் படுத்தும் வசதி, ஜிபிஎஸ், அருமையான மைக், தெளிவான ஸ்பீக்கர், ஹெச்டி வீடியோ சினிமாவை தங்கு தடையில்லாமல் பார்க்கும் வசதி, நீங்கள் பேசுவதை அப்படியே புரிந்துகொண்டு திரையில் டைப் பண்ணும் வசதி, ஓரிடத்தில் நீங்கள் எடுத்த போட்டோவை வீடியோவை உடனே யு ட்யூபிலோ, உங்கள் ப்ளாக்கிலோ, ஜி மெயில், கூகிள் ப்ளஸ்ஸிலோ, ட்விட்டரிலோ இன்ன பிற சமூக தளத்திலோ உடனே அப்லோட் செய்யும் வசதி, நாசமா நீ போனியா தெருவாக இருந்தாலும் கூகிள் நேவிகேஷனில் டைப் செய்துவிட்டு காந்தக் கண்ணழகா லெப்ட்ல திரும்பு ரைட்ல திரும்பு என்று அழகாக செல்லுமிடத்திற்கு வழிகாட்டும் மேப் வசதி, தட்காலில் சீட் இருக்கிறதா? இப்பொழுது நான் எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறேன், அல்லது எதிர் பார்க்கும் ரயில் எப்பொழுது வரும், இப்பொழுது எங்கே வந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்கள், சச்சின் ரிட்டையர் ஆகிவிட்டாரா என்று உடனே சொல்லும் செய்தித் தளங்கள். அனைத்துக் கிரிக்கெட்டையும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கும் வசதி (ஃப்ரீயாத்தாங்க) தாண்டவம் படம் டிக்கெட்டை ஆண்டவனுக்கு முன்னாடியே ஆன்லைனில் புக் பண்ணி தியேட்டரிலுருந்தே விமர்சனம் எழுதும் வசதி, பேஸ் புக்கில் எத்தனை பேர் நம்மை லைக் போட்டு ஹீரோ ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்கும் வசதி, செந்தமிழில் வணக்கம் நலமா இனிய விடுமுறை நாள் வாழ்த்துகள் என்று விநாயக சதுர்த்திக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, இணையம் துணை கொண்டே உலகெங்கும் இருக்கும் நண்பர்களுடன் இலவசமாகப் பேசும் வசதி, உங்கள் ஏரியாவில் இன்றைக்கு எவ்வளவு வெயில் அளவு, நாளைக்கு மழை வருமா, போன்ற வானிலைச் செய்திகள், பலவிதமான வீடியோ பைல்களையும் பார்க்கும் வசதி, பலவிதமான விதங்களில் போட்டோ எடுக்க உதவும் கேமரா அப்ளிகேஷன்கள். 
இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ என்று யாராவது சொன்னால் உடனே குறித்து வைத்துக்கொண்டு கரெக்ட்டாக அந்த நாளில் சைலன்ஸராக வந்து என்னா சார் கிழிச்சீங்க? என்று நினைவுபடுத்தும் காலண்டர் வசதி, குறிப்புகள், போன்  வீட்ல சமைக்கும்போது சாம்பார்ல போன் உழுந்துடுச்சி மச்சி நம்பர் குடேன் என்று கதறவைக்காமல் அத்தனையையும் கூகுள் சர்வரில் ஏற்றி பாதுகாக்கும் வசதி, திகட்டத் திகட்ட விளையாட்டுகள், இசைக் கருவிகள், படம் வரைய, பாட்டுப்பாட, ஸ்ஸ்ஸ் ஸப்பா சும்மா இல்லை சார் ஐந்துமில்லியன் அப்ளிகேஷன்கள் வாங்க பழகலாம் என்று கொட்டிக்கிடக்கிறது.     
  
அத்தனையும் வேண்டாம் தேவையானதைப் பார்ப்போம். எனக்குத் தெரிந்ததை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நெற்றிக்கண்ணைத் திறந்து குற்றமெல்லாம் கண்டுபிடிக்காமல் உங்களுக்குத் தெரிந்ததை நீங்களும் பகிருங்கள்.
அதுவரை ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? 

டிஸ்கி: ஆஹா ஆண்ட்ராய்ட் பற்றி ஒரு பெரிய சாப்ட்வேர் இன்ஜினியர் எழுதறாரே என்று என்னை நம்பும் உங்களைப் போல நானும் ஒரு அப்பாவி செல்போன் யூஸர்தான், இதில் புலி எல்லாம் கிடையாது, காசு குடுத்து பந்தாவாக வாங்கிவிட்டு பேந்த பேந்த முழித்து, அங்கே இங்கே பீராஞ்சு ஓரளவு கற்றுக்கொண்டு எனக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்லி ஒரு பதிவும் நாலு ஓட்டும், நாப்பது ஹிட்ஸும் தேத்தலாமே என்றுதான் எழுதுகிறேன். ஹி ஹி.
அடுத்து
என்ன மாடல் வாங்கலாம்?
தமிழில் படிப்பது எப்படி?
தமிழ் டைப்புவது எப்படி?
உங்கள் போனையே வைபை மோடமாக மாற்றுவது எப்படி?
ஆண்ட்ராய்ட் போன் பால் குடிக்குமா? 
இன்னும் பல சுவாரஸ்யங்களுடன்..
(தொடரும்..)

ஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.

ஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. 
மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிருந்தே ஆசிர்வதிக்க) கொல்லிமலை செல்லலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பியபொழுது இது மற்றுமொரு சாதாரணப் பிரயாணம் என்றே நினைத்திருந்தோம். 
சென்னையிலிருந்து கிளம்பி பைபாஸில் சென்று கொண்டிருந்தபோது சிறிது சிரமப் பரிகாரத்திற்காக ஓரிடத்தில் கார் நிறுத்தவேண்டி இருந்தது, செல்வது கொல்லிமலை என்பதால் காணும் வித்தியாச மனிதர்களை கூர்ந்து நோக்கும் மனோபாவம் ஏனோ உள்ளே நுழைந்துவிட்ட தருணத்தில் அந்த மனிதரைப் பார்த்தோம். இன்னும் அழுக்கேறமுடியாத அளவிற்கான உடை, உடல், பரட்டைத் தலை முடி, தாடியுடன் ஒருவர் எங்களைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். சரி ஏதேனும் காசு தருவோம் என்று பணத்தை எடுத்து அவருக்குத் தந்தேன். அதை கொஞ்சம் கூட மதிக்காமல் என்னை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்து நகர்ந்து சென்றுவிட்டார். அவர் பார்த்த பார்வையின் உக்கிரத்திலிருந்து வெளிவரும் முன்பாகவே..
இதில் யார் பிச்சைக்காரன் நீயா? அவனா? என்று மணிஜி கேட்டதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. ஆமாம், அவருக்கென்று எந்தக் கவலையுமில்லை, காசும் காகிதமும் அவருக்கு ஒன்றுதான். நாம்தான் பிச்சை எடுக்க அனுதினமும் அலைந்துகொண்டிருக்கிறோம். உனக்கு என்ன பிச்சை வேணும்னு எனக்கு காசு பிச்சை தர்றன்னு அவன் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ? என்று சிரித்தபடியே கேட்டார் மணிஜி. உண்மைதான். அப்படித்தரும் காசுக்குப் பின்னே மனிதநேயம் தொடங்கி, தான தர்மம் என்று நீண்டு தலைகாக்கும் கவசமாகி நிற்கின்ற அந்த பிச்சைப் பணம், உண்மையில் நான் எங்கோ யாரிடமோ வேலை என்று செய்து எடுத்த சம்பாத்தியப் பிச்சைதானே? 
மீளமுடியாத இந்த மாய யாசகத்திலிருந்து அவர் சுலபமாக வெளியேறிவிட்டதாகவே தோன்றியது. பிச்சையினின்றும் விலகிய ஒருவருக்கு பிச்சை எடுப்பவன் எங்கிருந்து பிச்சை போடுவது? அவர் மீண்டும் எங்கள் கார் அருகில் வந்தார், ஏதும் சட்டை செய்யாது அங்கிருந்து நகர்ந்து சென்றுகொண்டே இருந்தார். 
நார்மலான மனிதர்களை அப்நார்மலாகப் பார்க்கும் மனோபாவம், அப்நார்மலான நம்மைப் போன்றவர்களுக்கு சுலபத்தில் வந்துவிடுவதோடு, இவரைப் போல சுதந்திரம் இல்லாத கூட்டுப் பறவை ஆனேனே என்ற வெஞ்சினத்தில் இப்படி இருப்பவர்களைப் பைத்தியக்காரன் என்று பெயரிட்டழைத்து சமாதானம் செய்துகொள்கிறது மனது, என்று எண்ணியபடியே பயணத்தைத் தொடர்ந்தோம்.
ஆத்தூர் தாண்டி நாமகிரிப்பேட்டையில் திரும்பிச் சென்று  மலை அடிவாரத்திலிருந்து சுமார் 76 வளைவுகளைக் கடந்து கொல்லிமலை உச்சியை மாலை அடைந்தபோது அருமையான உபத்திரவம் செய்யாத குளிர் எங்களைச் சூழ்ந்துகொண்டது. இந்த வளைவுகள் எப்படி இருக்கும் என்று காண விரும்பினால் கூகிள் மேப்ஸில் கொல்லி ஹில்ஸ் என்று தட்டச்சி்ப்பாருங்கள், முதன் முதலில் பேனா எடுக்கும் குழந்தை வெள்ளைத்தாளில் கிறுக்கிய சித்திரத்தை ஒத்து இருக்கும். சாலைகள், தடுப்புச் சுவர்களைக் காட்டும் ரிப்ளெக்டர்கள் போன்றவைகள் சிறப்பாக இருப்பதால், பிரயாணம் ஏதும் பிரச்சனை இன்றி இருந்தது. 
அடியேனும், தோழர் கும்க்கியும், அகநாழிகை வாசுவும்
இரவில் மின்விசிறி தேவையே இல்லாத அளவிற்கு கம்பளியில் நுழைந்து தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் பனி சூழ்ந்து ரம்மியமாக காட்சி தந்தது கொல்லிமலை. உயர்ந்து வளர்ந்த சில்வர் ஓக் மரங்களும் அதன் அடியூடே பின்னிப் பிணைந்த மிளகு கொடிகளும், பல்வேறு மரங்களுமாய் கேரளாவைப் போன்றே காட்சி அளித்தது. 
சீக்குப் பாறை வ்யூ பாயிண்ட்

இதமான வெயில் வருட நாங்கள் முதலில் சென்றது சீக்குப் பாறை என்றழைக்கப்படும் ஒரு அழகான வ்யூ பாயிண்ட். மிகப் பெரிய பசுமைப் பள்ளத்தாக்கு, இடதுபுறம் அழகான பாறைகளையுடைய மலை சூழ, அந்த இடத்தில் எங்கள் நால்வரைத் தவிர்த்து யாருமே இல்லை. பேரமைதியுடன் பசுமையை ரசித்து கொஞ்சநேரம் பொழுதை அங்கே கழித்தோம். கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்தினிடையே இது போன்ற இடங்களைக் கண்டுவிட்டு தனிமையில் காணும்பொழுது கிடைக்கும் பரவசம் வித்தியாசமான அனுபவம்.
மாசிலா அருவியில் அகநாழிகை வாசு

மாசிலா அருவிக்குச் செல்லும் பாதை
அடுத்து அங்கிருந்து நாங்கள் சென்றது மாசிலா அருவி. புதியதாக பாதை போட்டு சிறப்பாக அமைந்திருந்தது அருவிக்குச் செல்லும் வழி, இங்கும் கூட்டமில்லை, மிகப்பெரிய உயரத்திலிருந்து சமதளத்தில் விழுந்து பிறகு மீண்டும் ஒரு சிறிய குன்றைக் கடந்து நம் மீது விழும் இந்த இயற்கையின் அற்புத அருவியில் திகட்டத் திகட்டக் குளித்தோம்.( ஜட்டி போட்டுக்கொண்டு (!) குளிக்கக்கூடாது என்ற விளம்பரங்கள், மூலிகை எண்ணெய் மசாஜ், மிளகாய் பஜ்ஜி, சோப்பு, எண்ணெய் வழுக்கல் என்ற) எந்த இடையூறும் இல்லாது அருமையான ஒரு இயற்கைக் குளியல் போட்டு வெளியே வந்து அங்கே விளைந்த கொய்யாப்பழத்தைக் கொறிக்க வாங்கிக்கொண்டு நாங்கள் சென்ற இடம் அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் அதன் அருகிலிருந்த ஆகாய கங்கை அருவி.
ஆகாய கங்கைக்குச் செல்லும் படிக்கட்டுகள்
அறப்பளீஸ்வரர் கோவில் அருகில மதிய உணவை முடித்துக்கொண்டு, எதிரே உள்ள அருவிக்கான நுழைவாயிலில் டிக்கெட் வாங்கிக்கொண்டு பெயர், முகவரி, அலைபேசி எண் போன்ற தகவல்களை அங்கிருந்த புத்தகத்தில் எழுதிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கத் துவங்கினோம், சுமார் 1100 படிக்கட்டுகள் கீழிறங்க வேண்டும். வழியிலேயே ஒரு வ்யூ பாயிண்ட்டும், பல குகைகளும் வருகிறது. எதிரில் குளித்துவிட்டு வந்த ஓரிருவர் தவிர்த்து அங்கே இயற்கையும் நாங்களும் மட்டுமே இருந்தோம். இவ்வளவு படிக்கட்டுகள் இறங்கி குளித்துவிட்டு மீண்டும் ஏறி வரவேண்டுமா? என்ற தயக்கம் இருந்தது. மேலும் சற்றுமுன்னர்தான் மாசிலா அருவியில் ஆனந்தக் குளியல் போட்டிருந்ததால் உடனே இன்னொரு அருவிக்கான் ஆர்வம் வரவில்லை. ஆனாலும் மெதுவே இறங்கிச் செல்லலானோம். பாதி இறங்கும்போதே ’ஹோ’ வென்று அருவி விழும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்ததே தவிர்த்து அருவி கண்ணுக்கே தெரியவில்லை. முழுவதும் கீழிறங்கிய உடன் படிக்கட்டுகள் முடிந்து பாறைகள் தென்பட்ட இடுக்கு வழியே நாங்கள் கண்ட காட்சி மெய்சிலிர்க்கவைத்தது. 
அதோ ஆகாய கங்கை அருவி..

பரிசுத்தமான இயற்கை.

காற்றும், சாரலும் விசிறி அடித்த இடம்.
யோசித்துப்பாருங்கள், யாருமற்ற வனாந்திரம். மிகப்பெரிய உயரத்திலிருந்து ஆக்ரோஷமாக விழும் அருவி, அங்கே குளிக்க அமைக்கப்பட்டிருந்த கம்பிகளைத் தாண்டி விழுந்துகொண்டிருந்தது. விழுந்த வேகத்தில் பலமான காற்றோடு சாரலைக் கொண்டுவந்து உடல் மீது பொழிந்தது. நாங்கள் அருவிக்குச் சமீபம் செல்வதைப் பற்றி யோசிக்கவே இல்லை, அருவிக்கு சுமார் 50 அடி தொலைவிலேயே நின்றுவிட்டோம். அதுவே, நிற்க முடியாத அளவிற்கு எங்களைத் தாக்கி பின்னே தள்ளிக்கொண்டிருந்தது. எந்த யோசனையுமற்று அதனையே பார்த்துக்கொண்டு என்னென்னவோ கத்திக் கூப்பாடு போட்டோம். அப்படி ஒரு அனுபவித்திராத பரவச நிலையை அந்த அருவியின் வேகத்தில் அடித்த சாரலும் காற்றும் எங்களுக்கு அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. 
தாண்டவம் 🙂
நின்றோம், முதுகு காட்டினோம், படுத்தோம், கத்தினோம், கையைக் காலை நீட்டி நடனமாடினோம். அங்கே எங்களையும் அந்த மலைகளையும் காடையும் தவிர்த்து யாருமே இல்லை. எப்படி யாருமே இல்லாத இந்த இடத்தில் எந்த உதவியும் கிடைக்காத ஓரிடத்தில் இப்படி ஒரு பயமுமில்லாமல் இருக்கிறோம் என்று எதுவும் நினைக்கமுடியாத அளவிற்கு அருவி முழுவதும் எங்களை ஆட்கொண்டது. மாலை 3.30 மணி சுமாருக்கு இருட்டத்துவங்கிவிடும் என்ற எண்ணத்தில் அவ்விடத்தை பிரிய மனமில்லாது மெதுவாக மேலேறி வந்தோம். எதிரில் உள்ள கடையில் மூலிகை சூப் குடித்ததும் உடல் அசதி எல்லாம் சட்டென்று மறைந்தது மனப்பிரமையா, மனப் பிராந்தியா என்று தெரியவில்லை. 
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்த அனுபவத்தை முடிந்தால் நீங்களும் ஒருமுறை கொல்லிமலை சென்று ஆகாச கங்கையைப் பார்த்துவிடுங்கள். ஆயிரத்திச் சொச்ச படிக்கட்டுகளில் இயற்கை ஒரு பெரிய பொக்கிஷத்தை வருடம் முழுவதும் நமக்காக அங்கே ஜீவனுடன் வைத்திருக்கிறது. இப்படி ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவிற்கு ஆகாச கங்கை எனும் கொல்லிமலை அருவி உங்களுக்கு வழங்கிடும்.
விவசாய மலைவாழ் இளைஞர்களுடன் மணிஜியும், வாசுவும்
பெரிய அளவில் சுற்றுலா பகுதிகள் எதையும் வைத்திருக்காததாலேயே கொல்லிமலை ஊட்டி கொடைக்கானல் அளவிற்கு கும்பலை ஈர்க்கவில்லை என்று தெரிகிறது. அங்கே சுற்றிய வழி எங்கும் வாழையும், மிளகும் அமோகமாகப் பயிரிட்டிருக்கிறார்கள். வழியில் ஒரு தோட்டத்தில் அப்படி வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்களிடம் பேசிவிட்டு 5 வாழைக்கன்றுகளும் வாங்கி வந்தோம். இன்னும் பார்க்கவேண்டிய சில இடங்களை நேரமின்மை கருதி செல்லமுடியவில்லை. 
மலை உச்சியில் அதிரம்பள்ளி அருவி ஒரு தரிசனமென்றால், அதனை ஒத்த அடிவாரப் பிரம்மாண்டம் இந்த ஆகாச கங்கை. 
இன்னும் இந்த இடுகையை சிறப்பாக எழுதி இருந்திருக்க முடியும். ஆனாலும் அனுபவித்த அந்த அருவியின் தாக்கத்திலிருந்து மீள வழியின்றி கிடைத்த வார்த்தைகளைக் கோர்த்து கொல்லிமலைப் பிரயாணத்தை இங்கே பதிவு செய்கிறேன். 
கொல்லிமலைப் பற்றி மேலும் சில தகவல்கள் :  விக்கி
நன்றி! 🙂   

சிறப்பாக நடந்த பதிவர்கள் விழா – வாழ்த்தும், நன்றியும்!

இன்றைக்கு தமிழ் பதிவர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன். மணிஜி, கேபிள்ஜி, அண்ணன் உண்மைத் தமிழன், எல்.கே, சுகுமார் சுவாமிநாதன், ஜாக்கி சேகர், பட்டர் ப்ளை சூர்யா, அகநாழிகை வாசு, வெள்ளிநிலா ஷர்புதீன், காவேரி கணேஷ், சுரேகா, மெட்ராஸ் பவன் சிவகுமார், வீடு திரும்பல் மோகன் ஜி, திசைகாட்டி ரோஸ்விக், சீனா ஐய்யா, நண்டு @ நொரண்டு, பிலாசபி பிரபாகரன், சங்கவி, சேட்டைக் காரர்(ன்),  பழம் பெரும் பதிவர் ஜமால், சிரிப்பு போலிஸ் ரமேஷ், திரு.லதானந்த், சிபி செந்தில் குமார், ஆயிரத்தில் ஒருவன் மணி, பெஸ்கி  போன்ற நண்பர்களை சந்தித்தேன் கூடவே பெருந்திரளான புதிய அறிமுகமில்லாத பதிவுலக  மக்கள் திரண்டிருந்தனர். வேடியப்பன் புத்தக ஸ்டால் போட்டிருந்தார். காலை முதல் மதியம் வரை பதிவர்கள் அறிமுகம், அதன் பின்னர் கவியரங்கம் என்று களை கட்டியது நிகழ்சிகள்.
அருமையான மதிய உணவுடன் விழா கட்டுக்கோப்பாக மிகவும் சிறப்பான அளவிலே நடத்தப்பட்டது பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். பல பெண் பதிவர்களும் வந்திருந்தார்கள். வயதில் மூத்த பதிவர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டது  ஆச்சரியம். 
விழா ஏற்பாடு செய்தவர்களில் பலரை நான் பார்த்ததில்லை, படித்ததில்லை. ஆனால் மிகப்பெரிய உழைப்பு அவர்களால் இங்கே யார் பெயரையும் முன்னிறுத்தாமல் தரப்பட்டிருந்தது. சுரேகா நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆர்வத்துடன் படித்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை சந்தித்தது வியப்பு கலந்த மகிழ்ச்சி 🙂
நல்லதொரு விழாவை சிறப்பாகச் செய்து முடித்துவிட்டார்கள். அடுத்தது என்ன என்ற கேள்வி அவர்கள்  முன்னே நிற்கிறது. அதையும் சிறப்பாக சமூக அக்கறை சார்ந்து முன்னெடுத்துச் செயல் படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது. 
எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் இந்தப் பதிவுலகம் – ஓட்டு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, அரசியல், வம்பு   என்ற பொழுது போக்குகள் கடந்து சமூகம் சார்ந்த உதவிகளுக்கு மிக முக்கியப் பங்காற்றும் ஒரு சக்தியாக மாறும் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தேன்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு பைசா அளவுக்குக் கூட என் பங்கு இல்லை, என்றாலும், கண்ட மக்கள் அனைவரும் புதியவர்களாக இருந்தாலும் நட்பும், அன்பும், மரியாதையும், மகிழ்ச்சியும் அளித்த அவர்கள் அனைவருக்கும் நானும் ஒரு காலத்தில் பதிவர்  என்ற முறையில்  நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். :))                    
                                  

ஆடித் தள்ளுபடி என்னும் தகத்தகாய கொள்ளை!!

ஆடித் தள்ளுபடி என்னும் தகத்தகாய கொள்ளை!!
ஊரிலிருந்து வந்திருந்த உறவுமுறை அண்ணன் ஆடித்தள்ளுபடியில் உடை வாங்க தி நகர் செல்லலாம் என்று அழைத்தான். அதெல்லாம் வேஸ்ட். அதற்கு நல்ல கடையில் நாமே நமக்குப் பிடித்ததை நமக்கு சரிப்படும் விலையில் எடுத்துக்கொள்ளலாம் என்றேன், ம்ஹூம் கேக்கவே இல்லை, தினத்தந்தியில் ஒன்று வாங்கினால் மூன்று  இலவசம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று ரங்கநாதன் தெருவில் முக்கால்வாசியை வளைத்துப் போட்டிருக்கும் பிரபல கடைகளின் விளம்பரங்களைக் காட்டி இதெல்லாம் பொய்யாடா? என்று எதிர்கேள்வி கேட்டான். 
போதாதக் குறைக்கு டிவியில் வேறு விதவிதமான பாடல்களுடன் டி நகரையே 120% டிஸ்கவுண்டில் தரப்போவதாகவே நம்பவைக்கும் பல லட்சக்கணக்கான செலவுள்ள விளம்பரப் படங்கள். இந்த ஆடி விட்டா உனக்கு டிஸ்கவுன்ட்டே கிடைக்காது என்பதுபோல என்னையே கொஞ்சம் தடுமாற வைத்தது. சரி என்று தகத்தகாய டிஸ்கவுன்ட் என்றால் என்னன்னு தெரியுமா ?என்று கேட்டேன். தெரியாது. என்றான், வா டி நகர் போலாம் என்று கூட்டிப் போனேன். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து முதலில் ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் என்ற அந்த கடைக்குள் மும்பை புறநகர் ரயிலில் பீக் அவரில்  ஏறும் லெவலில் இருந்த கூட்ட நெரிசலில்  திக்கித் தெணறி உள்ளே நுழைந்தோம், எனக்கு ஏனோ பாய்ஸ் படத்தில் சுஜாதா எழுதிய வசனம் நினைவுக்கு வந்தது. 
மருந்தளவுக்குக்கூட  ஏசி வேலை செய்யவில்லை. 20 சதுர அடியில்  25 பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.
”என்ன வேனும் சார்?”
”ஏங்க அந்த ஒண்ணு வாங்கினால் மூணு..”
ஏளனமாக ஒரு பார்வை பார்த்து, ”அது மொத மாடி”
சரி என்று திருப்பதி க்யூவை விட பயங்கரமான இருந்த அந்த க்யூவில் ஒரு மீட்டருக்கும் குறைவாக இருக்கும்போல் தெரிந்த மாடிப்படிகளில் இறங்குபவர்களும் ஏறுபவர்களும் தோளோடு தோள் உரச ஒரு வழியாக ஏறி முதல் மாடி அடைந்தோம். எங்கு நோக்கினும் ஜனத்திரள், சூப்பரான ப்ராண்டு பேண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டமே இல்லை. டேய் இங்கியே முடிச்சடலாம்டா கூட்டமே இல்லை என்றான் அண்ணன். எனக்கு டவுட் அதிகமாகியது. ஆனால் அந்தக் கவுண்டருக்கு மேலே மானாவாரியாகத் தொங்கிக்கொண்டிருந்த 1க்கு3 அட்டைகள் குழப்பியது.
என்னுடைய அண்ணன் என்னைப் பார்த்தான், பார்த்தியாடே கூட்டத்தைப் பார்த்திருந்தா இந்த மாதிரி ப்ராண்டேட் பேண்ட்டு 600 ரூவாய்க்கு மூணு கிடைச்சிருக்குமாடே என்ற கேள்வி அவன் பார்வையில்ருந்து என்னைத் துளைத்தது. சரி சரி ஆவட்டும் பேண்ட்ட வாங்கு என்று சைகை காட்டி அவன் அருகில் சென்றேன். 
அவனுடைய சைஸைக் கேட்டு அவர் மள மளவென்று பேண்ட்டுகளை எடுத்து காண்பித்தார். எல்லாம் 1000 ரூவாய்க்கு மேல் இருந்ததால் அந்த விற்பனையாளர் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த 1க்கு 3 விளம்பரத்தைக் காண்பித்து இதுல ஆயிரம் ரூபா பேண்ட்டே இல்லையே என்றேன்.
சடக்கென்று ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்த அவர், ”சார்.. அதெல்லாம் பத்தாம் நம்பர் கவுண்டர்லதான் இதுல எதுவும் டிஸ்கவுண்ட் கிடையாது என்றார்.” அப்பொழுதுதான் கவனித்தேன் ஏன் நாங்கள் இருந்த இடத்தில் கூட்டமில்லாமல் எதிர்புரத்தில் மக்கள் மொய்த்திருக்கிறார்கள் என்று. ஒன்றும் புரியாமல் பத்தாம் நம்பர் கவுண்டர் சென்றபிறகுதான் தெரிந்தது குப்பை மலைபோல அழுக்கடைந்த, தையல் பிரிந்த பேண்டுகள் குமித்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் கொடுமை அதில் எல்லா சைஸுகளும் இருந்ததுதான். நமக்கு வேண்டியதை அந்த குவியலில் இருந்து உறுவி எடுக்கவே திறமை வேண்டும். நான் மீண்டும் கடையின் சீலிங்கைப் பார்த்தேன். இரண்டடிக்கு இரண்டடி ப்ராண்டட் பேண்டுகள் 1க்கு மூன்று என்று அட்டைகள் தொங்கியது. போதாதகுறைக்கு எல்லா கண்ணாடியிலும் ப்ரிண்டவுட் எடுத்து ஒட்டி வைத்திருந்தனர். சரிய்யா எங்க ப்ராண்டட் என்றால் வாய்க்கு வந்த பெயரில் ’ஹிமேன்’ ’ஓமேன்’ ’எஸ்மேன்’ ’நோமேன்’ என்று ஒரு பெயர் வைத்து அட்டகாசமான லேபிளை இடுப்பருகே தைத்து வைத்து ப்ராண்டேட் என்று ஏமாற்றும் சூத்திரம் புரிந்தது. 
நான் அண்ணைப் பார்த்தேன். ”இந்தக் கடை வேணாம்டா அந்தக் கடைக்குப் போலாம் முருகன் வேல் நம்மைக் கைவிடாது” என்று எதிர் வரிசையில் இருக்கும் இன்னொரு பிரபலக்கடைக்குச் சென்றோம். அங்கேயும் சீலிங் முழுக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று  (ரெம்ப நியாமானவயங்க பாஸ்)  ஒரு அடிக்கு ஒன்றாக அட்டைகள் கலர் கலராகத் தொங்கிக்கொண்டிருந்தது. சிண்டிகேட் போட்டுகிட்டுத்தான் ஏமாத்தறாங்கபோல என்று நினைத்துக்கொண்டேன். ஒன்றுக்கு மூன்று போய் ஒன்றுக்கு ஒன்று என்று அண்ணன் அரை மணி நேரத்திலேயே மனதைத் தயார்படுத்திவிட்டது வியப்பளித்தது. குழந்தைகளுக்கான உடைகள் பிரிவில் சென்று முதலிலேயே அவன் கேட்டான், ”ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீ…?? அது அந்த மொத வரிசைல இருக்கு பாருங்க அதுமட்டும்தான்.” மொத்தமே முப்பது உடைகள், அதுவும் பல அளவுகளில்,, தரமற்றதாக… மற்ற உடைகள் எல்லாமே 400 ரூவாய்க்கு மேற்பட்டவை. 
அண்ணன் நொந்துவிட்டான். நான் மற்ற மக்களைப் பார்த்தேன். இவ்வளவு கும்பலும் ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக குடும்பத்தோடு இங்கே வருவது இந்த விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்துதான் என்பது புரிந்தது. வந்தது வந்தாச்சு வெறுமனே செல்லமுடியாது, ஏதாச்சும் வாங்கிட்டுப்போவோம் என்று அவர்கள் மற்ற நாட்களில் சாகவாசமாக தேடி வாங்கும் உடைகளை இந்த கும்பலில் மிதிபட்டு கசங்கி நசுங்கி என்ன ஏதென்றே சரி பார்க்காமல் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லும் அவஸ்தை புரிந்தது. மிகப்பெரிய கடைகள் அனைத்தும் இந்த ஏமாற்று வேலையில் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் சில ஆயிரம் ரூவாய் யாரும் விரும்பாத சரக்கை தள்ளுபடியில் ஒரு மூலையில் காண்பித்துவிட்டு கடையில் இருக்கும் அனைத்துமே தள்ளுபடி என்ற மாயையை விளம்பரம் மூலம் ஏற்படுத்தி மக்களை பெரும்திரளாக வரவழைத்து பகல் கொள்ளை அடிக்கின்றனர். 
இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் அதிகம் அறியப்பட்ட கடைகள்தான், விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை நியாயமான டிஸ்கவுண்ட்டாக அளித்தாலே பரம்பரை பரம்பரையாக விசுவாசமாக மக்கள் வாங்க முன்வருவார்கள். ஆனாலும் ஒரு ஆட்டு மந்தையை விதவிதமாக டிஸ்கவுண்ட் கொம்பு கொண்டு வளைப்பதிலும் ஒரு குரூரம் இருக்கிறது போல.
01. முதலில் ரயில்நிலையம் அருகில் இருக்கும் கடையில் படிக்கட்டுகள் மிகவும் குறுகியவை. ஏதேனும் தீ விபத்து அசம்பாவிதம் என்றால் கடை வாசலில் பைகளை செக் பண்ணும் இருவர் தவிர்த்து மற்றவர்கள் உடல் கருகி இறக்கும் அளவிற்கு கட்டுமான டிசைன் இருக்கிறது. இந்த மகா இலவச ட்ரென்டையே விளம்பரங்களில் ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள்தான், அடுத்த வருஷம் 1 வாங்கினால் 100 இலவசம் என்று விளம்பரம் வந்தாலும் வரும். சேப்டி முக்கியம் என்று நினைப்பவர்கள் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருப்பது உத்தமம். இல்லையென்றால் இன்சூரன்ஸ் கம்பெனிகூட நீங்கள் சூசைட் பாயிண்டிற்குச் சென்றீர்கள் என்று க்ளெயிம் மறுக்கக்கூடும். 
02. இரண்டாவதாகச் சென்ற அந்த பிரபல கடை ரெம்ப யோக்கியம் ஒன்றுக்கு ஒன்றுதான் ப்ரீ. முதல் கடைக்குச் சென்று வெறுத்துப்போய் வருபவர்களுக்கு, நாங்க அவங்க அளவுக்கு கேடி இல்லைங்க மூணெல்லாம் தரமாட்டோம் ஒரு ப்ரீதான் என்று உள்ளே இழுக்கும் தகத்தகாய டெக்னாலஜி. வருபவனை கருவேப்பிலையாவது விற்று காசை புடுங்கிக்கொள்ள வாசலிலேயே காய்கறி விற்கிறார்கள்.
03. ப்ளாஸ்டிக் பைகள் உலகிலேயே இங்கேதான் மிக அதிக அளவில் புழங்கும் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் பிக் ஷாப்பர் போன்ற ஒரு கட்டைப் பைகள் தருவார்கள் ஆனால் கூட்டத்தில் அதற்கெல்லாம் அவர்களுக்கோ, மக்களுக்கோ நேரமில்லை போல ப்ளாஸ்டிக் பைகளில் அழுத்தி அனுப்பிவிடுகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் குறைந்தது இரண்டு பைகளாவது இருக்கிறது.
04. அந்தப் பிரபல கடையின் வாசலில் சாக்கோ பார் விற்றுக்கொண்டிருந்தார்கள், சரி தாகத்துக்கு தண்ணீர் எடுத்துவரவில்லை இதாவது இரண்டு சாப்பிடலாம் என்று அண்ணன் வாங்கினான், சில பெண்கள் குழந்தைகளுடன், அந்தக் கடையிலேயே பொருட்கள் வாங்கிய பைகளை அந்தக் கடை வாசலில் வைத்துவிட்டு குழந்தைகளுக்கும் அவர்களுக்குமாக சாக்கோ பார் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். திடீரென்று அந்த ஐஸ் விற்ற கடைப் பெண் அங்கே மரப்படியில் உட்கார்ந்திருந்தவர்களை இங்கே உட்காரக்கூடாது எழுந்திருங்கள் என்று விரட்டினார். பாதி ஐஸ் தின்ற கையோடு குழந்தையும் அந்தப் பெண்களும் முழித்தனர். அந்தக் கடையில் வாங்கிவந்த பைகளை எடுத்ததுதான் தாமதம் அந்தக் கடைப் பெண் ஒரு குடம் தண்ணீரை எடுத்து அந்த மரப்படியில் ஊற்றினார். எனக்கு கோபம் வந்தது. ஏம்மா தண்ணி ஊத்தின? இப்ப அவங்க பை எல்லாம் எங்க வைப்பாங்க உங்க கடையில வாங்கிய கஸ்டமருங்கதானே? என்று கேட்டேன். கடை வாசல்ல உக்காரக்கூடாதுங்க, அப்புறம் எப்படி கஸ்டமர் வருவாங்க என்று தெனாவட்டாக பதில் சொன்னது. அந்தப் பெண்களுக்கும் கோபம் வந்தது, உன்கிட்டதானே வாங்கினோம் சாப்ட்டுமுடிக்கறதுக்குள்ள ஏன் தண்ணி ஊத்தின என்று குரல் உயர்த்தவும், நான் அந்தப் பெண்ணிடம் உங்க மேனேஞரையோ ஓனரையோ கூப்பிடு என்றேன், என்னாத்துக்கு என்று கேட்ட பெண்ணிடம் இது உங்க கடை இடமா நீ ரோட்ல மரப்படி போட்டு வியாபாரம் பண்ணிட்டு எங்க கிட்ட சட்டம் பேசறியா? இதுவரைக்கும் மக்கள் நடக்கற இடம்னுதானே கோர்ட்டு இடிச்சி வெச்சிருக்கு, நீ ஏன் நாங்க நடக்கற எடத்துல படிக்கட்டு வெச்ச? யாரக் கேட்டு அங்க தண்ணி ஊத்தின? கூப்டு உன் இன்சார்ஜை என்று சவுண்ட் விட்டதை அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை. உடனே உள்ளே இருந்து யாரோ வந்து சாரி சார் என்றார். கோர்ட் உங்க கடையெல்லாம் இழுத்து மூடி சீல்வெச்சாக்கூட தப்பே இல்லய்யா என்று சொல்லிவிட்டு, அந்த எழுப்பப்பட்ட பெண்களிடம் சாப்பிட்ட ஐஸ் குச்சி பேப்பரையெல்லாம் அந்தப் படியிலேயே வீசி போடச்சொன்னேன், கையில் வேறு குப்பைகள் இருந்தாலும் அங்கேயே போடுங்கள் என்றேன். திருப்தியோடு பொதுமக்கள் சேவைசெய்து அங்கே இருந்து நகர்ந்தோம்.
05. இந்த மாதிரி நேரங்களில் முக்கியமாக நான் ஒரு விஷயம் செய்வேன். சரி ஆனது ஆச்சு வந்தது வந்துட்டோம் வேற எதையாச்சும் வாங்குவோம் என்பது கிடையாது. நேர்மையான, உண்மையான வர்த்தகம் தவிர்த்து இதை ஊக்குவிப்பதே இல்லை. யோசித்துப்பாருங்கள்.. இந்த டிஸ்கவுண்டிற்காகவே வருபவர்கள் முதலில் அதைத்தான் கேட்கவேண்டும் அது இல்லை அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தால் முழுக்க புறக்கணித்துவிட்டுச் செல்வதே மீண்டும் அவர்கள் இந்த ஏமாற்று வேலை செய்யாமலிருக்க உதவும். ஆனால் கும்பலைப் பார்த்தால் நீங்க சொம்மா கடைக்கு வந்தாலே நாங்கள் ஆயிரம் ரூபாய் புடுங்கிப்போம் என்று சொன்னாலும் வருவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
06. விபத்துகள் பல நடந்தும் நெரிசல் நேரங்களை மக்கள் தவிர்க்கவிரும்புவதும் இல்லை. நெரிசலில் கைக்குழந்தைகளை கூட்டிவருபவர்களை என்ன சொல்ல? :(( 
07. ரங்கநாதன் தெருவில் கோர்ட் ஆர்டர்கள் எல்லாம் இப்பொழுதே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது, மீண்டும் மூன்றடி சாலையாக தீபாவளிக்குள் ஆகிவிடும். மீண்டும் ஏதாவது ஒரு விபத்து நடந்தாலொழிய இதற்கு தற்கால விடிவு வராது. அந்த விபத்தும் ஏதாவது ஒரு விவிஐபி குடும்பத்திற்கு வந்தால் கொஞ்சம் பலமான விடிவு பிறக்கலாம். பணம் என்னவேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இந்தத் தெரு உலகிற்கே ஒரு உதாரணம்.
08. இந்தப் பெரிய கடை உள்ளே சென்று ஏமாறுவதற்கு ப்ளாட்பாரத்தில் பேரம் பேசி ஒன்றுக்கு மூன்று பொருள் வாங்கலாம், நிச்சயம் கடையில் வாங்குவதை விட சிறிது அதிகமாகவே உழைக்கும்.
09. ப்ராண்டெட்தான் வேண்டுமென்று அடம்பிடிப்பவர்கள் அதற்கென இருக்கும் கடைகளில் வாயைக் கட்டி வகுத்தைக் கட்டி ஒரு பேண்ட் 6000 ரூவாய், ஒரு பெல்ட் 2500 ரூவாய் ஒரு ஜட்டி 1000 ரூவாய் என்று வாங்கிக்கொள்வது இன்னும் உத்தமம், சரியான பில் கிடைக்கும் ஏதேனும் பிரச்சனை என்றால் பொறுமையாக பதில் சொல்வார்கள். தரமும் சிறப்பாக இருக்கும். 
10. இங்கிருக்கும் பெரும்பாலான கடைகள் ஒரே இடத்திலிருந்துதான் பொருட்களை வாங்குகின்றன, விதவிதமான விலைகளில் அவர்கள் விற்கிறார்கள். இங்கே சூப்பர் அங்கே சுமார் என்பதெல்லாம் மனப் பிராந்தி.
11. அதெல்லாம் முடியாதுங்க பரம்பர பரம்பரையா நாங்க தள்ளுபடியில்தான் பொருட்கள் வாங்கறது என்பது உங்கள் ஜீனில் ஊறிக்கிடந்தால் ஒன்றும் பாதகமில்லை. குடும்பத்தோடு செல்வதற்கு முன்பாக நீங்கள் மட்டும் தனியாகச் சென்று விளம்பரப்படுத்தியதற்கும் விற்பனைக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா என்று பரிசோதித்துவிட்டு, ஏமாந்தே தீருவோம் என்றால் பிறகு குடும்பத்தோடு செல்லுங்கள்.
12. இதற்காகவெல்லாம் எந்தக் கட்சியும் தலைவர்களும், புலனாய்வுப் பத்திரிக்கைகளும் மாநாடோ கவர் ஸ்டோரியோ போராட்டமோ நடத்த மாட்டார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களின் விளம்பர, டொனேஷன் தர்மம். ஆனால் நமக்குத் தேவை பகுத்தறிவு. அதற்காகத்தான் இந்த இடுகை.
ஆடி ஸ்பெசல் டிஸ்கி:
இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு மூன்று ஓட்டு இலவசம்.
.         
Advertisements