Category Archives: வியாபாரம்

தெளிவாக ஏமாறுவது எப்படி?

தெளிவாக ஏமாறுவது எப்படி?

டெக்னிக்கலாக நாம் மாட்டிக்கொள்ளும் வியாபார விஷயங்கள் அநேகம்.

ஒரு சாதாரண சிம்கார்ட் பிரச்சனையைப் பார்ப்போம்.

புதிய நம்பர்வாங்க சிம் கார்ட் அப்ளிக்கேஷனை பூர்த்தி செய்து, போட்டோ ஒட்டி, 50 ரூபாய் ரீசார்ஜ் செய்து, அந்த நம்பரை மனப்பாடம் செய்து, குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் அதை தெரியப்படுத்திவிட்டு அப்பாடா என்று இருக்கும்போது ஒரு அழைப்பு வரும்.

அய்யா நீங்கள் இன்னும் உங்களுடைய இருப்பிடச் சான்று, அடையாள அட்டை விவரங்களை எங்களுக்கு அனுப்பவில்லை, சட்டப்படி இது உடனே எங்களுக்கு வந்து சேராவிட்டால் நாங்கள் உங்கள் எண்ணைத் துண்டித்துவிடுவோம், உடனே ஆவண செய்யவும்.

99 சதவீதம் பேர் என்ன செய்வார்கள்?? ஓடிச்சென்று சிம் கார்ட் வாங்கிய கடையில் புகார் அளிப்பார்கள், அவர்களோ, நாங்கள் ஏஜெண்டிடம் தந்துவிட்டோம் நீங்கள் கம்பெனிக்கே நேரில் சென்று குடுத்துவிடுங்கள் என்பார்கள், உடனே அந்தக் கம்பெனியின் அலுவலகம் எங்கே இருக்கிறதென்று ஓடி, அலைந்து மீண்டும் ஒரு அப்ளிகேஷன், போட்டோ, செராக்ஸ் இத்யாதி.. இத்யாதி.

சிறிய விஷயம்தான், நீங்கள் முதன் முதலில் அப்ளிகேஷன் பூர்த்தி செய்து தரும்போது ’பெற்றுக்கொண்டேன்’ என்ற அக்னாலெட்ஜ்மெண்ட் ரிசிப்ட்டை சீல்போட்டு வாங்கி இருந்தால், இந்த அலைச்சலே இல்லை. (அப்படி ஒன்று அந்த அப்ளிக்கேஷனில் இருப்பதே பலருக்குத் தெரியாது) ஆனால் நாம் நம்புவோம், யாரை? கடைக்காரரை, ஏஜென்டின் அல்லது கடைக்காரரின் அலட்சியத்தால் நமது முக்கியமான முகவரி, அடையாளம் குறித்த நகலும், நமது புகைப்படமும் காணாமல் போவது, அது அப்படியே அழிந்துபோனால் பரவாயில்லை, ஆனால் அதை வைத்து வேறு யாராவது தவறான வழியில் பயன்படுத்திவிட்டால், அதற்கும் சட்டம் நம்மையும்தான் கேள்வி கேட்கும். அதான் தொலைஞ்சு போச்சுல்ல ஏன் புகார் பண்ணவில்லை? என்று பதிலுக்கு மடக்கும்!

என்னிடமும் இதே போல் ஒருமுறை கேட்கப்பட்டபோது, நான் ஒழுங்காக ஆவணங்களை செலுத்திய ரசீதைக் காண்பித்தேன், இது என் தவறல்ல உங்களுடைய தவறு, அதற்குப் பொறுப்பேற்று உங்கள் கம்பெனியுடைய கவனக்குறைவினால் தொலைந்து போய்விட்டதால், அதனால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனியே பொறுப்பு என்று லெட்டர் குடுத்தால் புதிய அடையாள விவரங்கள் தருகிறேன் என்றேன்,  தேவையில்லை சார் உங்கள் எண்ணிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று உடனே சான்றளித்தார்கள். ஏன்? தவறு அவர்கள் மீது இருந்தது? சரியான ஆவணங்கள் என்னிடம் இருந்தது.

இது மட்டுமல்ல, அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) அதிகமாக விற்கும் குடிநீர் பாட்டிலிலிருந்து, வெளியில் அடிக்கப்படும் எந்தக் கொள்ளையையும் நாம் தட்டிக்கேட்பதே இல்லை, அவ்வளவு ஏன்? அது என்ன விலை என்றோ, அதன் தயாரிப்பு தேதி என்ன? உபயோகிக்கத் தகுந்ததா இல்லையா? ம்ஹும் எதையுமே கவனிப்பதில்லை, இது முக்கியமாக குழந்தைகளுக்கான உணவுப் பண்டங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கும்போது அவசியம் கவனிக்கப்படவேண்டும், குழந்தைகளுக்கு தின்பதற்குத் தரும் முன் நாம் சிறிது வாயில் போட்டு சரியாக இருக்கிறதா என்று சோதித்துவிட்டு தருவது முக்கியம். இது நம்முடைய அலட்சியமல்ல, இதையெல்லாம் கவனித்து சரியாக விற்கவேண்டியது கடைக்காரரின் பொறுப்பு எனவே அதை அவர் சரியாகத்தான் செய்வார் என்று நம்புகிறோம், ஆனால், அதைத்தான், அந்த நம்பிக்கையைத்தான் அவர்கள் தவறாகப் பயன்படுத்திவிடுகிறார்கள்.

இன்றிலிருந்து. நீங்கள் வாங்கும் பொருளின் உற்பத்தி நாள், முடிவு நாள், அதிக பட்ச சில்லறை விலை, அளவு, எல்லாவற்றையும் கவனிக்கத் துவங்கினால் எந்த அளவுக்கு ஏமாற்றப்படுகிறோம் என்பது புலப்படும், உதாரணத்திற்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் பொருட்காட்சிகளில் குடிநீர் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை பொங்கல் லீவில் நீங்களே நேரில் சென்று காணலாம். அரசாங்கமே கேட்காத இவர்களை நாம் என்ன கேட்டுவிடமுடியும் என்று நினைப்பீர்கள்தான், முடிந்தால் வீட்டிலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லலாம், அல்லது உள்ளே நுழையும் முன்னர் வெளியில் சரியான விலையில் கிடைக்கும் இடத்திலிருந்து வாங்கிச் செல்லலாம்.

மனமிருந்தால் மார்கபந்து 🙂

இதிலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும்??

ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்கலாம், முடியாது சார் அவங்க எதாவது திட்டிட்டாங்க, அடிச்சிட்டாங்கன்னா? என்று சங்கோஜப்பட்டால் இருக்கவே இருக்கிறது புறக்கணிப்பு. அப்படி விற்பவர்களைப் புறக்கணித்தாலே போதுமானது அவர்கள் நிச்சயம் திருந்துவார்கள் அதோடு நியாய விலைக்கும் தர முன்வருவார்கள், அல்லது வியாபாரத்தை விட்டே விலகிவிடுவார்கள்.

இதெல்லாம் எதுக்கு சார் ? ரெண்டு ரூபாய்ல என்னா ஆயிடப்போகுது என்பதுதான் மிகப்பெரிய ஏமாற்றுத்தனங்களுக்கான அஸ்திவாரம் என்று உணருங்கள்.

சமீபத்திய தினசரிகளில் கால் பக்கத்திற்கு சர்வீஸ் டாக்ஸ் வேறு சர்வீஸ் சார்ஜ் வேறு என்று தெளிவாக அரசாங்கமே அறிவிப்பு செய்ததே எதற்கு தெரியுமா? நாயர் கடையில் டீ குடிப்பவர்களுக்கு அல்ல, பெரிய பெரிய உணவகங்களில் பில்லில் 10 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் என்று போட்டு வாங்குவதற்குத்தான். நீங்கள் வாங்கும் பொருள் மட்டுமல்ல, பில்லைக்கூட சரிபார்க்கவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வுதான் அது,

ஒரு புதிய அறிவிப்பு வருகிறது, அழகான கவர்ச்சியான விளம்பரத்துடன், உடனே அதில் நாம் மதிமயங்குகிறோம், முன்னரே சொன்ன கடைக்காரர் மீது வைத்த நம்பிக்கை அடிப்படையில், ஆனால் நமக்கு விளம்பரப்படுத்தியதும், நாம் பெறுவதும் வெவ்வேறாக இருக்கிறது, உடனே குய்யோ முய்யோ என்று அலறினால் அப்பொழுதுதான் கண்டிஷன் அப்ளை என்ற கண்ணுக்குத் தெரியாத பூதம் கண்ணாடிக்குடுவையிலிருந்து கிளம்பி வரும், அதில் சிறிய எழுத்தில் படிக்காமத்தானே வாங்கின? கெளம்பு காத்து வரட்டும் என்று போட்டிருக்கும்,

என்ன செய்யலாம்? பொறுத்துப் பார்க்கலாம், அல்லது கேள்வி கேட்கலாம் எந்த அளவிற்கு சாத்தியம்? இல்லை என்றால் என்ன ஆகும்? இது உண்மையில் மதிப்புள்ளதுதானா?

இதிலும் முக்கியமான அம்சம் இருக்கிறது, இது அல்லது இதைவிட சிக்கலான கேள்விகளுக்கு எல்லாமே உங்களுக்குப் பிடித்த பதிலே கிடைக்கும், ஆனால் வாய்மொழியாக, எழுத்துப் பூர்வமாக அல்ல, எது எழுத்துப்பூர்வமாகக் கிடைக்கிறதோ அதில் கொஞ்சமேனும் உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.

ஒரு பொருள் அல்லது சேவையை பெற முடிவு எடுக்கிறீர்கள்.

விலை என்ன? தரமானதுதானா? எக்ஸ்பைரி தேதி என்ன? பார்க்கும் பொருளும் டெலிவரியாகும் பொருளும் வெவ்வேறாக இருந்தால் என்ன செய்வது? கெட்டுப் போயிருந்தால் என்ன செய்வது? யாரை அணுகவேண்டும்? வழிமுறைகள் என்ன? சட்ட வழிமுறைகள் என்ன? சரியான ஆவணங்கள் பத்திரப்படுத்துகிறீர்களா? பிரச்சனைகளின் முழுப் பரிவர்த்தனைகளையும் சேமிக்கிறீர்களா? புகார்களை சரியான நபர்களுக்கு தாமதிக்காமல் அனுப்புகிறீர்களா? தொடர்ந்து கண்காணித்து நீதியும் நிவாரணமும் பெறுகிறீர்களா? ரைட், ஆட்டத்தில் குதியுங்கள்.

உங்கள் செல் போனில் படம் எடுக்கும் வசதி இருக்கிறது, முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது அதைத் தெளிவாக ஒரு படம் எடுத்துக்கொள்ளலாம், முக்கியமான உரையாடல்களை போனிலேயே ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளலாம், இதெல்லாமே கார்ப்பொரேட்டின் கரங்கள் கழுத்தை நெரிக்கும்போது தப்பிக்க உதவும்.
கவனம், வாய் வார்த்தையோ, விளம்பரமோ, பில் இல்லாத பொருளோ, அத்தாட்சி இல்லாத ஆவண சமர்ப்பித்தலோ, சரிபார்க்காமல் பெறப்படும் டெலிவரியோ உங்களுக்கு பிரச்சனைகளையே தரும், ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள், விழிப்புணர்வு வாடிக்கையாளருக்குத்தான் தேவை. ஏமாந்துவிட்டு கொள்ளையடிக்கிறாங்க சார் என்று அவர்களைக் குறை கூறிப் பயனில்லை.
மீண்டும், ஒன்றை வாங்குவதற்கு முன்னால் அது பற்றிய முக்கிய விவரங்களை அறிந்துகொள்ளுங்கள், அல்லது அறிந்தவர்கள் துணையை நாடுங்கள், யாருக்குமே தெரியாத சூப்பர் டூப்பர் டெக்னாலஜி என்றால் சிறிது தாமதிப்பதில் தவறில்லை. இந்த உலகத்தில் எதுவுமே இலவசமும் இல்லை.

டிஸ்கி: வேறு எதையோ நினைத்து படிக்க வந்திருப்பீர்களேயானால் மன்னிக்கவும் அதற்கு கும்பெனி ஜவாப்தாரியல்ல.:)))

Advertisements
Advertisements