Category Archives: பயணம்

ஒரு பரதேசியின் பயணம் 6 – சபரிமலை.

ரு பரதேசியின் பயணம்  6 – சபரிமலை.
காலையில் பம்பா நதிக்கரையில் 

நான்காவது முறையாக சபரிமலை செல்லும் வாய்ப்பு இந்தமுறை மணிஜி மூலமாகக் கிட்டியது. மாலை போட்டு, விரதம் இருந்து சென்ற 18ம் தேதி மதியம் வைகை எக்ஸ்ப்ரஸில் நான், மணிஜி, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் கிளம்பினோம். சென்னையிலிருந்து திண்டுக்கல் வரை ரயில், அங்கிருந்து பேரூந்து மூலம் குமுளி, அங்கிருந்து பம்பா சென்று மலை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது எங்கள் திட்டம். 
பம்பா பேரூந்து நிலையம்.


20 நாட்களுக்கு முன்பாக, கேரள போலீஸால் அறிமுகப்படுத்தப்பட்ட விர்ச்சுவல் க்யூ முறை பற்றி வாசு சொன்னார். அந்தத் தளத்தில் 19ம் தேதி காலை 5 மணி வரிசைக்காக முன்பதிவு செய்திருந்தோம்.

தகவல் நிலையங்களும், அப்பல்லோ சிகிச்சை மையமும்

ரு 33kb  அளவு வருமாறு சமீபத்திய புகைப்படம் இணைத்து, நமது விவரங்களுடன் அந்தத் தளத்தில் பதிவு செய்தால் பார்கோட் கொண்ட ஒரு கூப்பனை அந்த இணையதளம் நமது மின்னஞ்சலுக்கு பிடிஎஃப் பைலாக அனுப்பிவைக்கிறது.  இதை ப்ரிண்டவுட் எடுத்துவைத்துக்கொண்டு பம்பாவில் அதற்கென இருக்கும் கவுண்டரில் காண்பித்து, ஒரு சாப்பா வாங்கிக்கொள்ளவேண்டும்.

மரக்கூட்டம் – விர்ச்சுவல் க்யூ பிரியும் இடம்.

ரங்குத்தி தாண்டி மரக்கூட்டம் அருகே இரு வழியாகப் பிரித்து இடது புறம் கூப்பன் சாமிகளையும், வலதுபுறம் சாதா சாமிகளையும் அனுப்பி வைக்கிறார்கள்.

விர்ச்சுவல் க்யூ சாமிகளும், சாதா சாமிகளும்

ன்னிதாதத்திற்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய ஷெட்டில் இந்தக் கூட்டத்தை தனித்தனியே வரிசைப்படுத்தி சிறு சிறு குழுக்களாக படியேற்றி பதினெட்டாம் படிக்கு அனுப்புகிறார்கள், ஒரு குழு தேங்காய் உடைத்து பதினெட்டாம் படி ஏறி முடித்த உடன் அடுத்த குழு அனுப்பப் படுகிறது, இதனால் காலதாமதமானாலும் நெரிசலின்றி அனைவரும் பதினெட்டுப் படி ஏறி சாமிதரிசனம் செய்ய முடிகிறது. இந்த கூப்பன் திட்டத்தால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் எங்களுக்கு மிச்சமானது, 7.30க்கு பம்பையிலிருந்து ஏறத்துவங்கி 10.50க்கெல்லாம் தரிசனம் முடிந்து வெளியே வந்துவிட்டோம். அதே நேரம் இந்த கூப்பன் இல்லாமல் ஏறியவர்கள் 4மணிக்குப் பிறகே தரிசனம் காணமுடிந்தாக கூறக்கேட்டோம். 

பரிமலை சில வருடங்களிலேயே மிகப்பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது,.

ம்பையிலிருந்து சன்னிதானம் வரை கழுதைப் பாதைவழியே சிமெண்ட் கொண்டு சாலை அமைத்து ட்ராக்டர் ஓட்டுகிறார்கள்,

சேகரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் எமன்கள்

பரியில் குமியும் குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் இன்னும் பிறவற்றை உடனுக்குடன் பம்பைக்கு கொண்டு செல்வதற்கும், பம்பையிலிருந்து சபரிக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பல ட்ராக்டர்கள் சென்று வந்த வண்ணம் இருக்கின்றன.

அவசர சிகிச்சைக்காக

சுடுவெள்ளம்
ஓக்ஸிஜன் பார்லர்

ம்பையிலிருந்து நீலிமலை ஏற்றம் முழுக்க பல ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைத்துள்ளார்கள், வழிஎங்கும் சூடாக்கப்பட்டு பதிமுகம் கலந்த சிகப்புநிற குடிநீர் தாராளமாக விநியோகம் செய்கிறார்கள், இருதயப் பரிசோதனைக்கூடங்களும், அவசரசிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன அதை நிமிடத்திற்கு ஒருதரம் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கிறார்கள்.

 ப்படியும் மயங்கிய ஓரிரு பக்தர்களை உடனுக்குடன் ஸ்ட்ரெச்சரில் முதலுதவிக்காக அழைத்துச் சென்றதையும் கண்டோம். தெளிவாக உடல்நிலை பரிசோதித்துப் பின்னரே மலை ஏறுங்கள் என்று அனைத்து மொழியிலும் அறிவித்தும் சிலர் இவ்வாறு மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். பக்தி தாண்டி மலைஏற்றம் என்பது மனதும் உடலும் சம்பந்தப்பட்டது.

சரங்குத்தி
டோலி சார், டோலி

த்தனைக்கும் அருமையாக பாதை போட்டு வழிநெடுக எல்லா வசதிகள் கிடைத்தும் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் கொடுமை. 

நீலிமலையிலிருந்து ஒரு பார்வை

20வருடங்களுக்கு முன் நான் கண்ட காடு கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய ஆறுதல், மலையாளிகள் காட்டின்மீது வைத்துள்ள கொஞ்ச நஞ்சப் ப்ரேமை வாழ்க. 

நினைவில் காடுள்ள மரம்

19அதிகாலை பம்பையை அடைந்து குளித்து மலைஏறி தரிசனம் செய்து, மாலை 4 மணிவாக்கில் பம்பா பஸ்ஸ்டாண்ட் வந்தோம், சென்னைக்கான தமிழ்நாடு அரசுப் பேரூந்து ரூ.750/- மட்டும் வாங்கிக்கொண்டு சென்னைக்கு அல்ட்ராடீலக்ஸ் என்னும் மலைப்பாதைக்கு ஒவ்வாத மிகநீண்ட பேரூந்தை ஓட்டுகிறார்கள், ஓட்டுனரிடம் பிட்டைப்போட்டதிலிருந்து அந்தப் பாதைக்கே புதியவர்கள், சீசனுக்காக ஓட்ட வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது, சுமாரான வேகம், திருப்பங்களில் தடுமாற்றம் என்று தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக இறங்கும்போது குமுளிமலைப்பாதையில் ஒரு திருப்பத்தில் பின் சக்கரம் ஒரு பள்ளத்தில் இறங்கி ஏற வண்டியின் பின்புறம் அடிபட்டு ஒருவழியாக தடவித்தடவி இறங்கினோம். 

ஓங்கி உலகளந்த..

மாலை 5 மணிக்கு வண்டி எடுத்து 6.30க்கெல்லாம் ஒரு ஓட்டலில் நிறுத்தி சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நடத்துனர் கூறியவுடன் கேட்டால் கிடைக்கும் சங்க உறுப்பினரான மணிஜி தட்டிக்கேட்க ஆரம்பித்துவிட்டார், ஒத்தாசைக்கு நானும் TNSTC வெப்சைட்டை ஓப்பன் செய்து புகார் அளிக்க நம்பரைத் தேடினேன், இதைக் கண்ட நடத்துனர் உடனே, சாமி நீங்க எங்க சொல்றீங்களோ அங்க நிப்பாட்டறேன் என்று கூறி, சிப்ஸ் வாங்க குமுளியிலும் சாப்பாட்டிற்காக வழியில் ஓர் இடத்திலும் நிறுத்தி அதிகாலை 3 மணி சுமாருக்கு திண்டுக்கல் கொண்டுவந்து சேர்த்தார். ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றமுடியும் என்பது கேட்டால் கிடைக்கும் மூலம் மீண்டும் நிரூபணமானது. (டுவைன்) 
நீரும் ஞானும் பின்னே பம்பாவும்..

ப்படியும் அந்தப் பேரூந்து பொங்கலுக்குள் சென்னை சென்றுவிடும் என்ற நம்பிக்கையில் நாங்கள் மூவரும் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் சிறிது சிரமப்பரிகாரம் செய்துகொண்டு காலை 7.30 க்கு மீண்டும் வைகையைப் பிடித்து நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.

பின்குறிப்பு:

விர்ச்சுவல் க்யூ ஒரு நல்ல திட்டம். மலைக்குச் செல்பவர்கள் அவசியம் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும்.
விவரங்களுக்கு:
 http://www.sabarimalaq.com/
மலையாள மனோரமா சார்பில் சபரிமலை பற்றி ஒரு ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டு இருக்கிறார்கள். பார்க்கிங் வசதி, முக்கிய தொலைபேசி எண்கள், வெதர், கூட்ட அளவு, கோவில் நடை திறக்கும்/பூஜா நேரங்கள் போன்றவைகளுடன் சபரிமலை செய்திகளும் அடங்கி இருக்கிறது, சிறப்பான முயற்சி,

மிழ்நாடு அரசுப் பேரூந்து நிருவனத்தின் வெப்பேஜில் குறிப்பிட்ட தொடர்பு எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை என்றே வருகிறது. பேரூந்திலும் எங்கும் குறிப்பிடவில்லை. இதில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக வேலை செய்யும் புகார் எண்களை கையில் வைத்துக்கொண்டால், அராஜகம் செய்யும் நடத்துனர், ஓட்டுனரிடமிருந்து தப்பிக்கலாம். சும்மா இல்லை சார், சொளையாக 750 ரூபாய் வாங்கிக்கொண்டு 6.30க்கு இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ளுங்கள் அல்லது பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள் வேறு எங்கும் நிற்கச் சொல்லி எங்களுக்கு ஆர்டரில்லை என்று கூசாமல் ஓசி பரொட்டா பார்சல் வாங்கிக்கொண்டு சொல்கிறார்கள்.

முடிந்தால் ரயிலிலேயே முன்பதிவு செய்து சென்று வருவது உத்தமம். 
கேரள அரசாங்கத்தின் சமீபத்திய அதிரடி சோதனைகளுக்குப் பிறகு மலையில் உணவு வகைகள் ஓரளவு நன்றாகவே கிடைக்கிறது. 
நன்றி, வணக்கம்.

சன்னிதானம்.
பதினெட்டாம் படி
அப்பம், அரவணை பிரசாதம் ஸ்டால்கள்

சாமியே சரணமையப்பா. :))
Advertisements

ஒரு பரதேசியின் பயணம் 4 – வெள்ளியங்கிரி தரிசனம்.

முதல் பாகம் – இங்கே

ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்? ஏனென்றால் அப்பொழுதுதான் ஏறிவந்த களைப்பு அறவே நீங்குகிறது. பளிச்சென்று பல்ப் போட்டாற் போல உடலெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுகிறது. முக்கியமாக வரவிருக்கும் குளிர் நம்மைத் தாக்காமல் இருக்க உடலைத் தயார் படுத்துகிறது.
இனி ஏழாம் மலை பற்றி, ஆறாவது மலை உச்சிதான் ஏழாம் மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு இறக்கமான இடம். சுனையிலிருந்து சிறிது தூரம் ஏறிய உடனே ஒரு நமக்குக் காணக்கிடைப்பது ஒரு பெருவெளி, நீண்ட மண் பாதை, எப்பொழுதும் ஈரமாக இருக்கும் இடம், சட்டென்று வானிலை மாறுவதை உணரமுடிகிறது. காற்று முன்னைக்காட்டிலும் வேகமாக வீசுகிறது. சுற்றுமுற்றும் வெண்பனி மேகங்களால் மூடப்பட்டு என்ன இருக்கிறது என்பதே தெரியாத நிலை. தீடீரென்று வெயிலடிக்கும்போது பள்ளத்தாக்கோ, அடர்ந்த காடோ, மலைகளோ தெரியவரும், ஒரு போட்டோ எடுக்கலாம் என்று செல்போனை வெளியே எடுப்பதற்குள் வெளிச்சம் மறைந்து புகை மண்டலமாகக் காட்சி அளிக்கும்.
ஏழாம் மலை பனி மூட்டம்
தான்தோன்றிப் பிள்ளையார்
ஏழாம் மலை ஏறுகிறோம் என்பதே ஒரு மிகப்பெரிய பூரிப்பை உள்ளே பொங்கச்செய்தது. கடந்து வந்த மலைகளைக் காட்டிலும் இங்கே நடப்பது சவாலாக இருந்தது. பாதை, மழை இல்லாததால் வழுக்கவில்லை, என்றாலும் ப்ராணவாயு குறைவு என்பதை உணரமுடிந்தது. மெதுவாகவே நடக்க ஆரம்பித்தோம். முதலிலேயே வெட்டவெளியில் வருவது தான்தோன்றிப் பிள்ளையார் சிலை.
அவரைச் சுற்றிவிட்டு முன்னேறிச் செல்லச் செல்ல காற்றும், பனியும் அதிகமாகியது, சர்வசாதாரணமாக தூக்கி அடிக்கக்கூடிய வலிமை அங்கே காற்றுக்கு இருந்தது. மோசமான வானிலையில் சர்வநிச்சயமாக மனிதர்களால் இங்கே நடக்க இயலாது என்பது புரிந்தது, சரியான அளவில் எங்கள் உடல் தாங்கக்கூடிய அளவிலே அங்கே வானிலை அமைந்தது என்பது எங்களுக்கு ஒரு கொடுப்பினைதான். ஸ்வாமிஜியும் மற்றவர்களும் எங்களுக்கு முன்பாகவே சென்றுவிட்டிருந்தனர், அகநாழிகை வாசுதேவன் மட்டும் இருவேறாக பாதை பிரியும் இடத்தில் நாங்கள் வழிதவறாமல் இருக்க எங்களுக்காக காத்திருந்தார்.
ஈசனைக் காணும் முன்பாக முதலில் வரும் பிள்ளையார் தரிசனம்
இன்னும் சற்றுதூரம்தான், அற்புதமான தரிசனம் கிடைக்கப்போகிறது, ஆனால் அந்த இடம் எங்கே என்று எங்களுக்குத் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது, இதோ இந்தப் பாறையின் பின்புறம்தான் என்று எங்களுடன் வந்தவர் சொன்னார். வளைந்து ஏறிய ஒரு பாதையில் தடுப்புக் கட்டைகள் தெரிந்தன. பல சூலங்கள் குத்தி வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய பாறைகளை யாரோ அடுக்கி வைத்ததுபோல, மிகப் பிரம்மாண்டமாக பெரிய பாறைகளின் நடுவில் முதலில் ஒரு பிள்ளையார் சிலை வருகிறது. அவரை தரிசித்து வலதுபக்கம் படிகள் இறங்கினால் அந்தப் பிரம்மாண்டமான பாறை அடியில் இயற்கையாகவே இருக்கும் குகையில் மிக அழகாக நமக்கு காட்சி அளிப்பது சுயம்புவாய் தோன்றிய பஞ்ச லிங்கங்கள்.
அதோ அந்த வலதுபக்கமிருக்கும் கூரையின் அடியில்தான் இருக்கிறான் ஈசன்.
முதலில் இருக்கும் பெரிய லிங்கமும் அதற்குப் பின்னால் இருக்கும் மற்ற நான்கு லிங்கங்களும் சேர்ந்து அந்தச் சிறிய குகைதான் அனைவரையும் ஈர்க்கும் ஒரு அற்புத இடம். இதுதானா? இதற்குத்தானா இவ்வளவு சிரமம் என்றெல்லாம் எந்தக் கேள்வியும் எழவில்லை. உடலில் எந்தக் களைப்பும் தெரியவில்லை, மனதெங்கும் உற்சாகம், சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன், எங்கும் பள்ளத்தாக்கு, வீசி அடிக்கும் பனிக்காற்று, திடீரென்று அடிக்கும் வெயில், இயற்கையின் பிரம்மாண்டம், எல்லாவற்றையும் உதறிவிட்டு கிடைப்பதை உண்டு இங்கேயே தங்கிவிடலாம் என்ற வெறி மனதில் வழிந்தோடியது.
தென் கயிலாயம், வெள்ளியங்கிரி – ஈசன் சன்னதி
மிக அழகான பூசை
நாங்கள் சென்றபோது எங்களுக்கு முன்னரே வந்திருந்த ஸ்வாமிஜி லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் ஆரம்பித்திருந்தார், அழகான மலர் மாலை, சந்தனம் பூக்கள், வில்வ அர்ச்சனைகளுடன் பஞ்சலிங்க தரிசனம் மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொருவரையும் லிங்கத்தின் முன் அமர்ந்து தனித்தனியாக ப்ராத்தனைகளுடன், வில்வ அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டச்சொன்னார். அனைவரும் முடித்தபின்னர், அங்கேயே இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு தியானமும், பாடல்களும் பாடினோம். யாருமில்லாத அந்த இடத்தில் காற்றின் ஓசையில் எங்கள் சேர்ந்திசைத்த குரல் அற்புதமாக இருந்தது.
பூசை செய்த வீடியோ
ஆழ மூச்சை உள்ளிழுத்து கண் மூடி ஏதும் நினைக்காது வெறுமனே அமர்ந்திருந்தேன். என்னத்தை வேண்டுவது? என் யோக்கியதைக்கு மேலேயே வாழ்வு கிடைக்கப்பெற்றவன் நான். இது போன்ற பிராயணங்களே எனக்கு எப்படி அமைகிறது என்ற கேள்விக்கே விடை தேடிக் கிடைக்காமல் விட்டுவிட்டவன் நான். குறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது, மலை ஏற்றி அழைத்து வந்த பரம்பொருளுக்கு நன்றி நினைத்து வெறுமனே அமர்ந்திருந்தேன்.
உள்ளே இருக்கும் இந்த லிங்கங்கள்தான் இங்கே புனிதமா? வேறொன்றும் இல்லையா? இதற்குத்தான் இத்தனை பாடா? என்று கேட்டால், இல்லை இந்த லிங்கங்கள் ஒரு எல்லை. போதும், உனக்கென்று விதித்தது உனக்குக் கிடைக்கும், இந்த முயற்சியில் உனது எல்லை இது என்று காட்டவே இப்படி அமைந்திருக்கலாம். ஒரு வாழ்க்கைப் பாதையின் ஏற்ற இறக்கத்தைத்தான் இந்தப் பயணம் கன கச்சிதமாக உணர்த்துகிறது. இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங்கள் இல்லை, நீங்கள் நினைத்தாலும் இங்கே அதைக் சுமந்து கொண்டு வருவது சிரமம். கொள்ளை காசு கொடுத்து குடிநீர் வாங்கத் தேவை இல்லை, குளிக்கக் கட்டணமில்லை. எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையாக நடந்து வந்துதான் தரிசிக்க முடியும். அகங்காரத்திற்கும், பலத்திற்கும் இங்கே வேலையே இல்லை, மனோதிடம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் இங்கே வந்து இயற்கையின் மாசுபடாத அற்புதத்தை தரிசிக்கலாம். உள்ளுக்குள் ஏதோ ஒரு கதவு உங்களுக்குத் திறக்கும். நல்ல பாதைக்கு நிச்சயம் திசை திருப்பும். அதற்கு இயற்கை என்றோ, ட்ரெக்கிங் என்றோ, ஆக்ஸிஜன் என்றோ, ஈசன் என்றோ பெயர் வைக்கலாம், பெயரில் என்ன இருக்கிறது???
பஞ்ச லிங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அந்தப் புகைப்படம் இங்கே
’எறும்பு’ ராஜகோபால், வைரவன், ’அகநாழிகை’ வாசுதேவன் வெள்ளியங்கிரி ஈசன் வாசலில்
தரிசனம் முடிந்து வலப்புறமாகச் சுற்றி இறங்கினோம். ஏழாம் மலை அடிவாரத்தில் சிதிலமடைந்த ஓலைக் கடையில் எல்லோரும் காத்திருங்கள் நாம் அடுத்து கண்ணன் குகைக்குச் செல்லப்போகிறோம் என்று ஸ்வாமிஜி சொன்னார். மெதுவாக நடந்து சென்று எடுத்துவந்திருந்ததை உண்ணத்துவங்கினோம். குகையை ஸ்வாமிஜி சென்று பார்த்துவிட்டு அழைப்பதாக தகவல் வந்தது.
குகைக்குச் செல்லும் பாதை இல்லாப் பாதை
ஏழாம் மலை ஆரம்பிக்கும் இடத்தில் ஏறும்போது இடப்புறமாக ஒரு மிகப்பெரிய சரிவு வருகிறது காட்டுச் செடிகள் வளர்ந்து பாதைகள் ஏதுமில்லாத இடத்தில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே வழிகாட்டிச் செல்ல நாங்கள் அனைவரும் நடக்க ஆரம்பித்தோம், தூரத்தே ஒரு பாறை அருகில் ஸ்வாமிஜி ஒரு ஆரஞ்சுப் புள்ளியாகத் தெரிந்தார். அந்த இடத்தை அடைந்தவுடன்தான் தெரிந்தது அது குகைக்கான நுழைவாயில் அல்ல. அது இரண்டாகப் பிளவு பட்டிருந்த ஒரு பாறைப் பகுதி, சுமந்து வந்திருந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு பாறைகளைக் கவனமாகத் தாண்டி வந்த வழி போல பாதி தூரம் ஏறிச்சென்றால் மிகப்பெரிய குகையின் நுழைவாயில் தெரிகிறது.
குகைக்குச் செல்லும் வழியில் பைகளை வைத்த இடம்
குகையின் உள்ளே டீ தயாராகிறது
விஷயம் தெரியாதவர்களால் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு ஆபத்தான இடத்தில் இயற்கையாகவே மறைந்து இருக்கிறது. உள்ளே அட்டைப் பூச்சிகளின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நுழைந்தவுடன் மிகப்பெரிய குகை, அதனுள்ளே புகுந்து வலப்பக்கம் சென்றால் அடுத்தடுத்து அறைகள் போல குகைகள் இருக்கின்றன. அட்டைகள் மட்டும் இல்லையென்றால் நிம்மதியாகத் தங்கி ஓய்வெடுக்கத் தகுந்த இடம். இந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்களால் ஏற்கனவே அங்கே அடுப்பு மூட்டி விறகெறித்து சமைத்த தடங்களும், சாம்பலும் காணக்கிடைத்தது, ஸ்வாமிஜியின் ஆஸ்தான சீடர் எங்களுக்காக சுள்ளிகள் சேகரித்து அற்புதமான சுக்குக் கருப்பட்டி டீ தயாரித்துத் தந்தார், அனைவரும் குடித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மலை இறங்க ஆரம்பித்தோம். மூன்றாவது மலை உச்சியில் இருக்கும் பிரம்ம குகை அருகில் எங்களை ஒன்று கூடச் சொன்னார் ஸ்வாமிஜி.
மீண்டும் ஆறாவது மலை சுனையைப் பார்த்துக்கொண்டே இரவில் எடுக்க முடியாத இடங்களைப் பகலில் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டே இறங்கினேன், பாதங்களும், குதிகாலும் போதும் ஓய்வெடு என்று கதறியும் பொருட்படுத்தாமல் மூன்றாம் மலை நோக்கி நடக்கத் துவங்கினேன். இந்த மலைப் பிரயாணத்தில் இறக்கம்தான் ஏற்றத்தைவிட மிகவும் சோதனையானது, சென்ற முறை அனுபவத்தில் முதல் மலையில் இறங்கும்போது ஓய்வெடுத்ததால் அடுத்த அடி எடுத்துவைக்க அவஸ்தைப்பட்டது எனக்கும் ராஜகோபாலுக்கும் நன்றாக நினைவிலிருந்தது, என்ன ஆனாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓய்வெடுப்பதில்லை என்ற முடிவில் நாங்கள் இருந்தோம். போதாததுக்கு 10 மணி ரயில் பிடிக்க அப்படி சென்றால்தான் 7 மணிக்குள் வெளிச்சம் இருக்கும்போதே அடிவாரம் அடைய முடியும் என்பது எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. என்னைவிட ராஜகோபால் பாத வலியில் மிகவும் சிரமப்பட்டாலும் தாங்கிக்கொண்டு என்னைவிட முன்னால் அவரால் நடக்க முடிந்தது. அவருக்கும் முன்னால் அகநாழிகை வாசு அசால்ட்டாக நடந்துகொண்டிருந்தார், நிச்சயம் இவர் மலை ஏற சிரமப்படுவார் என்று நான் நினைத்த வாசு மிகச் சுலபமாக மலை ஏறி இறங்கியது இந்தப் பயணத்தில் மனோதிடமும், ஆர்வமும் எந்த எல்லைக்கும் ஒருவரை பயணிக்க வைக்கும் என்று எனக்கு உணர்த்தியது. அவர் மட்டுமல்லாது அறுபது வயதைக் கடந்த கனத்த சரீரமுள்ள திரு,அருணாச்சலம் என்பவர் சென்ற ஆண்டும் எங்களுடன் வந்திருந்து ஏழாம் மலை ஏறாமல் திரும்ப வந்து, இம்முறை ஸ்வாமி தரிசனம் செய்தார். அவரது மனோதிடம் வியக்க வைத்தது. பல 30 வயதுற்குள்ளான இளைஞர்கள் மிகவும் சிரமப்பட்டதையும் பார்க்கும்போது, உடல் வலிமையும் வயதும் ஒரு பொருட்டே அல்ல என்பது உறுதியாகப் புரிந்தது. பயண ஆரம்பத்திலேயே ஓம்கார் தெளிவாக எல்லோருக்கும் விளக்கிவிட்டார், எப்பொழுது மலை ஏறமுடியாது என்று தோன்றுகிறதோ அப்பொழுதே நீங்கள் நிறுத்திவிடலாம், ஏழாம் மலை என்பதை விட இந்த மலை சிறிதேனும் ஏறுவதே முக்கியம் எக்காரணம் கொண்டும் அதில் ரிஸ்க் எடுத்து அடுத்தவர் பயணத்திற்கு இடையூராக இருக்கலாகாது என்று சொல்லி இருந்தார். ஆனால் ஆச்சரியமாக கலந்துகொண்ட அனைவரும் ஒரு குறையுமின்றி ஏறி இறங்கினோம்.
பிரம்ம குகை நுழைவாயில், அந்தப் பாறைகளுக்கு சுமார் 20 அடிக்குக் கீழே சுயம்பு லிங்கம்
மூன்றாம் மலையில் அனைவரும் பாதாளகுகையில் இருக்கும் மற்றுமொரு சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யக் காத்திருந்தனர். இதைப்பற்றி சென்ற பயணத்திலேயே எழுதி இருக்கிறேன். நானும் ராஜகோபாலும் ஏற்கனவே பார்த்த குகை என்பதாலும், ஏறி இறங்குமளவிற்கு பாதத்தில் வலு இல்லாததாலும் வெளியிலிருந்தே தரிசித்து சிறிது ஓய்வெடுத்து அங்கிருந்த சுனை நீரை பாட்டிலில் நிரப்பிக்கொண்டு இறங்க ஆரம்பித்தோம்.
இரவு 7.20 அடிவாரம் வந்தபோது ஸ்வாமிஜி கைதட்டி வரவேற்றார். அதாவது நாங்கள் இறங்க ஆரம்பித்திருந்தபோது அவர் குகை உள்ளே அமர்ந்து மற்றவர்களுக்கு அங்கிருந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வைத்து, அதன் பின்னர் வெளியே வந்து எங்களுக்கும் முன்பாக அடிவாரம் சென்றிருந்தார், ஸ்வாமிஜி 10மணிக்கு ரயில் பிடிக்க முடியுமா என்றேன், காசியில் இப்படித்தான் என்னுடன் வந்தவர் கேட்டார் உங்களுக்காக விமானம் காத்திருக்கும் கவலையின்றி தரிசனம் செய்யுங்கள் என்றேன், அவர் விமானம் இரண்டுமணி நேரம் தாமதமாகக் கிளம்பியது பிரச்சனையின்றி பயணப்பட்டார் , இத்தனை மலை ஏறி தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும்? கவலை வேண்டாம் என்றார். நான் ஏதும் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.
கையிலிருந்த கழியையும், பையையும் கழட்டி வைத்துவிட்டு மல்லாந்து படுத்தேன். ஒன்றை வெற்றிகொள்ள முயற்சி மட்டும் முக்கியம் என்பது புரிந்தது. முயற்சி என்பது விதை போல அதை மண்ணில் புதைப்பது மட்டுமே நம் வேலை, வளர்வதற்கு விதை மட்டும் காரணமல்ல. நான் ஏதோ ஒரு ஜனனச் சங்கிலியின் ஒரு விதை என்னை ஏதோ ஒன்று இங்கே இழுத்துவந்து உரமேற்றி இருக்கிறது. உயர்வோ தாழ்வோ இனி பயப்பட ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும் மெல்ல நம்பிக்கை எனும் கழி கொண்டு பயணப்பட்டுவிடலாம் என்று தோன்றியது. காலை நான்கு மணிக்குக் கிளம்பி சில ஆரஞ்சு மிட்டாய்களும், ஒரு எனர்ஜி ட்ரிங்கும், சில உலர் திராட்சைகளும், இரண்டு சப்பாத்திகளும், ஒரு சுக்குக் கருப்பட்டி உணவோடு 12 மலைகள் ஏறி இறங்கி இருக்கிறேன். மனதிலிருந்து விலகி உடல் தனியே ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.
8மணி சுமாருக்கு இன்னும் சிலர் இறங்கவேண்டிய நிலையில் ரயில் பிடிக்கவேண்டிய அன்பர்களுக்காக, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம். அகநாழிகை வாசுவின் நண்பரான திரு.வைரவன் சிங்கப்பூரிலிருந்து இந்தப் பிரயாணத்திற்காகவே வந்திருந்தார், எங்களுக்கான உலர்பழங்கள் முதல் பல உணவுகளுக்கு அவர்தான் ஸ்பான்ஸர். யோகா கற்று பயிற்சியும் செய்துவரும் அவராலும் உடல் வலிதாண்டி மிகப்பெரிய ஒரு தரிசனம் கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார், திருமதி.வைரவன் நானும் ராஜகோபாலும் 10மணி ரயில் பிடிக்கும் அவசரத்தில் இருப்பதை அறிந்துகொண்டு இரவு உணவு வாங்கி வைத்து அவர்கள் காரிலேயே உடனே ரயில் நிலையம் செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார். ப்ரணவபீடம் செண்டர் வந்த உடனே நாங்கள் ஸ்வாமிஜியிடம் விடைபெற்று ரயில் நிலையம் சென்றோம். ரயில் கிளம்ப 50 நிமிடங்களுக்கு முன்பாகவே நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். ரயிலில் ஏறிப் படுத்ததும் ராஜகோபால் டிக்கெட்டை என்கையில் தந்துவிட்டு உறங்கிவிட்டார், ஏசி கோச்சில் தந்த கம்பளியை இழுத்துப் போர்த்தி நான் தூங்க ஆரம்பித்தபோது, சார் என்ற குரல் கேட்டது, இது ஆர் ஏ சி உங்களுக்கும் எனக்கும் சீட்தான் பர்த் கிடையாது சாரி, என்ற சக பயணியைப் பார்த்தேன், அவருக்கு இடம் தந்து உட்கார்ந்துகொண்டேன்.
உட்கார்ந்துகொண்டே சென்னை செல்வதை நினைத்துப்பார்க்கவே கெதக்கென்று இருந்தது, ராஜகோபால் நல்ல தூக்கத்திலிருந்தார், அவருக்கும் சீட்தான் பர்த் இல்லை, அவர் தூங்குவதைப்பார்த்த அந்த இருக்கைக்குரியவரும் எங்கள் இருக்கையிலேயே அமர்ந்துகொண்டார், டிடிஇ வந்ததும் சார் பர்த் கிடைக்குமா? என்று கேட்டேன், அவர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, மன்னிக்கனும் சார், வெள்ளியங்கிரி ஏறி இறங்கி நேரா வண்டி புடிச்சிட்டோம் சீட்டில் உட்கார்ந்து சென்னைவரை செல்லமுடியுமான்னு தெரியல என்றேன், என்னையும் தூங்கும் ராஜகோபாலையும் பார்த்தவர், திருப்பூர் வரை வெயிட் பண்ணுங்க என்று சென்றுவிட்டார், சரியாக திருப்பூரில் இந்த சைடு பர்த்தே போதுமா வேற தரட்டுமா என்றவரிடம், இதுவே போதும் என்றேன், மற்ற இருவருக்கும் அந்த பர்த்தை தந்துவிட்டு இதிலேயே படுத்துக்கொள்ளுங்கள் என்று டிக்கெட்டில் எழுதித் தந்துவிட்டு சென்றார், நன்றி சொல்லி படுத்தேன், ஸ்வாமிஜி சொன்ன இத்தனை மலை தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும் என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. வண்டி மட்டுமா பர்த்தும் அல்லவா தந்திருக்கிறான் பரம்பொருள் :)) எல்லாம் அவன் செயல் என்று கனவுகள் ஏதுமற்று சென்னைவரை ஆழ்ந்து உறங்கிப்போனேன்.
சில விஷயங்கள்::
அனைவரோடும் மலை ஏறும்போது, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எங்களை இணைத்தது எது? என்ற கேள்வி எழுந்தது. வாழ்க்கையில் ஒருவரை சந்திப்பதும் அவரால் நம் வாழ்வில் விளையும் செயல்களும் ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட் போலத்தான் இருக்கிறது.
இங்கே சொல்லப்பட்டிருக்கும் குகைகளுக்கு விஷயம் தெரிந்தவர்கள் உடனிருக்கும்போது தவிர மற்றவர்கள் தயவு செய்து செல்ல முயற்சிக்கவேண்டாம், மிகவும் ஆபத்தை விளைவிப்பதோடு, ஏதேனும் பிரச்சனை என்றால் நீங்கள் அங்கே இருப்பதே யாருக்கும் தெரியாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.
நிகழ்காலத்தில் சிவா பலமுறை வெள்ளியங்கிரி சென்று வந்திருக்கிறார். எங்கள் கூடவே பிரயாணித்து எந்தக் களைப்புமின்றி சுலபமாக ஏறி இறங்கினார். மனிதர் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதைவிட 40% டிஸ்கவுன்டில் காட்சி தந்தார்.
இதுவரை வெள்ளியங்கிரி செல்லாதவர்கள் முதல்முறை செல்லவேண்டுமென்றால், அதற்கான ஆயத்தங்கள் மிக முக்கியம், குறைந்தபட்சம் 48 நாட்களாவது செருப்பில்லாமல் மண் தரையில் முடிந்த தூரம் வரை நடப்பது, குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, படிகள் ஏறி இறங்குவது போன்றவை பிரயாணத்தை சுலபமாக்கும் என்பது என் எண்ணம். காலநேரமும் மிக முக்கியம். அனைவரும் சென்றுவரும் நாட்களில் ஏறி இறங்கும்போது ஏதேனும் ப்ரச்சனைகள் என்றாலும் உதவி கிடைக்கும். நிச்சயம் ஏற்கனவே ஏறிப் பரிச்சியம் உள்ளவரோடுமட்டுமே முதல் பிரயாணத்தை துவங்குங்கள் அற்புதமான அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கலாம். ஏழு மலை ஏற முடியாவிட்டாலும் பாதகமில்லை, எவ்வளவு உடல் தாங்குகிறதோ அவ்வளவு ஏறி இறங்குங்கள்.
தன்யனானேன் ஸ்வாமிஜி :))
ப்ரணவபீடம் சார்பில் ஸ்வாமி ஓம்கார் மூலம் நாங்கள் சென்று வந்த இந்தப் பிரயாணத்திற்கென்று எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனக்கு இப்படி ஒரு அற்புத தரிசனத்திற்கு இரு முறை வாய்ப்பளித்த ப்ரணவபீடத்திற்கும், அன்பின் வழி ஆன்மீகம் ஊட்டும் ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கும், ப்ரயாணத்திற்காக பல விஷயங்கள் ஸ்பான்ஸர் செய்த நல்ல ஆன்மீக உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
ப்ரணவபீடம் குறித்த மேலதிக தகவல்களுக்கு வலைத்தள முகவரி:
எனது கற்றுக்குட்டி எழுத்துவழி இந்த இடுகை மூலம் என்னுடன் வெள்ளியங்கிரி பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்கவேண்டிய ப்ராத்தனையோடு இந்த இடுகையை முடிக்கிறேன்.
எவர் எவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்?
– பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல்
தென்னாடுடைய சிவனே போற்றி!
நன்றி, வணக்கம். :)))))

ஒரு பரதேசியின் பயணம் – 3 – வெள்ளியங்கிரி

.
ஒரு பரதேசியின் பயணம் – 3 – வெள்ளியங்கிரி!!
1990களில் சில வருடங்கள் கோவையில் வாசம் செய்திருக்கிறேன். வெள்ளியங்கிரி போன்ற ஒரு இடம் இருப்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. ஜெய் வெள்ளியங்கிரி என்று கவுண்டர் ஏதோ ஒரு படத்தில் சாமியார் வேடம் போட்டுக்கொண்டு வரும் போதுதான் அந்த பெயரையே கேள்விப் பட்டிருக்கிறேன். அத்தோடு சரி. ஸ்வாமி ஓம்கார் தென் கயிலாயப் பயணம் என்று இடுகை போட்டதும் சென்று வரலாம் என்று எண்ணம் தோன்றியது. ஏற்கனவே பர்வத மலை ஏறிய கர்வம். எவ்வளவோ ஏறிட்டோம் இது ஏற மாட்டோமா? 
பிரபல பதிவர் நண்பர்களிடம் யார் வருகிறார்கள் என்று பேசியபோது இரு முக்கிய தலைகள் வருவதாக சொன்னார்கள் அதில் ஒரு நண்பர் டிக்கெட்டை தட்காலில் புக் செய்துவிட்டு பயணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக சில காரணங்களால் தன்னால் வர இயலவில்லை என்று சொல்லி டிக்கெட்டை எங்களிடம் சேர்பித்தார் அவர் ஏன் வர இயலாமல் போனது? என்பது எனக்கு பயணத்தின் முடிவில் தெரிந்தது. :))
கோவை சென்று இறங்கிய உடனே லேசான சாரலுடன் காலை இதமாக வரவேற்றது. ஸ்வாமிஜியின் புண்ணியத்தில் குளியலும், காபியும், காலை உணவும் முடித்து, ப்ரணவ பீடம் சென்று வெள்ளியங்கிரியைப் பற்றிய சிறிய அறிமுகம் முடிந்து, ப்ரணவ பீடம் சார்பில் ஒரு பை அளிக்கப் பட்டது. அதில் உலர் பழங்கள், நெல்லிக்கனி, ஆரஞ்சு மிட்டாய்கள், சப்பாத்திகள், புளிப்பு சுவையுடைய சில திண்பண்டங்கள், பொரி கடலை, என்று மலை ஏறும்போது பசியாற உதவும் உணவுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து மற்றவர்களுடன் பயணம் ஆரம்பித்தோம்.  
கோவையி்லிருந்து ஈஷா செல்லும் வழியில் சட்டென்று ஒரு இடது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரம். வெள்ளியங்கிரி கோவில் நீண்ட விசாலமான பிரகாரம், வித்தியாசமான வடிவில் நவக்கிரக சன்னதி, வழக்கமான மலைப்பாதை ஆரம்பத்தில் காணப்படும் ஒரு வளைவு, செங்குத்தாக ஆரம்பிக்கும் சீரான படிக்கட்டுகள் சட்டெனத் தெரியும் பச்சைப் பசுமை மலை உச்சி ப்ஃபூ இந்த மலைக்கா இம்புட்டு பில்டப்பு? போலாம் ரைட்..
ஆரம்பம்

முதல் படி
ஆயிரத்துச் சொச்சம் படிகள் கொண்ட முதல் மலை ஏற ஏற முதலில் வரும் ஒரு இளைப்பாறும் இடம் சிவதீர்த்தம் என்று எழுதப்பட்ட ஒரு சிறிய பாலம் இயற்கையான சுவைமிகுந்த நீர் ஊற்று.  சிறிது சிரமப் பரிகாரம் செய்து மீண்டும் ஏற ஆரம்பிக்கலாமென்றால் மழை கிளம்பு காத்துவரட்டும் என்று அடிக்க ஆரம்பித்தது. பில்டிங்கும் பேஸ்மெண்ட்டும் வீக்காகி வெடிக்கும் நிலையில் முதல் மலை உச்சியில் வருகிறது ஒரு பிள்ளையார் கோவில். எதிரே ஒரு தென்னம் ஓலை வேயப்பட்ட கடை (காற்றோ, களிறோ) சிதறி சின்னாபின்னமாகி இருந்தது. 
ஏற்றி விடப்பா!
குளிர் மழை மேலும் குளிர் மேலும் மழை, சீரான படிக்கட்டுகள் மறைந்து, சதுரமாக வெட்டப்பட்ட பாறைக்கற்களால் அமைக்கப் பட்ட படிகள் போன்ற அமைப்பு ஏன் ஸ்வாமிஜி செப்பல் இல்ல ஷூ போட்டு ஏறக்கூடாது? இது சிவபெருமானின் இருப்பிடம் என்று பதில் சொன்னால் இமயத்திலிருக்கும் கயிலயத்தில் ஷூ போட்டுக்கொண்டே ஏறி தரிசனம் செய்கிறார்களே? என்ற கேள்வி அடுத்ததாக வரும் என்று ஞானதிருஷ்டியில் அவர் அறிந்திருக்கக்கூடும். இம்மாதிரியான மூலிகைகள் நிறைந்த இயற்கை மலைப்பாதையில் பாதங்கள் நேரடியாகப் பட நடப்பதும், உடலில் அந்தப் பகுதியின் காற்று நேரடியாகப் படுவதும் மிக நல்லது என்று சொன்னார். செருப்பில்லாமல் நடக்கமுடியாது என்ற மேட்டுக்குடி மன நிலையை உதறி ஷார்ட்ஸ் பனியனுடன் எளிமையாக(?) ஏற ஆரம்பித்தேன். ஒரு கம்பு எடுத்துக்குங்க என்ற சொல்லைத் தட்டாது அங்கே இருந்த ஒரு மூங்கில் கம்பெடுத்து ஊன்றி ஏற ஆரம்பித்தேன்.
படிப்பாறையில் எறும்புச் சித்தர்!
 மூன்றாவது மலைப் பாதை ஒழுங்கற்று வேர்கள், கற்கள், வழுக்கும் சேறு நிறைந்த பாதையாக மாற ஆரம்பித்தது. ஓரிடத்தில் பாறைகளிலேயே படிகள் செதுக்கி ஒரு வெட்டவெளியும் வந்தது. இப்பொழுது குளிரும் காற்றும் மழையும் கூட்டணிசேர பள்ளத்தாக்கில் கோவை வெயில் வெளிச்சத்தில் பளிச்சினு ஒரு மாற்றமாய் வெப்பத்திற்கு ஏங்க வைத்தது. 
காடு!
ம்முடியல!
மூன்றாவது உச்சியிலும் ஒரு சிதிலமடைந்த குடிசை உட்கார முடியாத அளவுக்கு மழை, ஈரம் அருகில் ஒரு பெரிய பாறை வழக்கம் போல ஒரு நீர் ஊற்று. இம்முறை ஸ்வாமி ஓம்கார் ஒருவர் மட்டுமே உள் நுழையும் அளவுக்குள்ள ஒரு குகையைக் காண்பித்து நான் முதலில் சென்று குரல் கொடுத்ததும் ஒவ்வொருவராக வாருங்கள் என்றார். ஒரு பெரிய பாறை அடியில் இரு வழியாக உள் நுழைய முடியும் அந்த குகையின் அடிவாரம் என்பது சுமார் இருபது அடி ஆழத்தில் இருந்தது. கால்களை முதலில் உள்ளே நுழைத்து மெதுவாக இறங்கினால் உள்ளே வளைந்து சென்று முடியும் இடத்தில் ஒரு சுயம்புலிங்கம் எதிரே நந்தி. லிங்கத்தின் வலதுபுறத்தில் அம்மன், லிங்கத்தின் தலையில் இயற்கையாகவே பாறைக் கசிவிலிருந்து வழிந்துகொண்டே இருக்கும் நீர். லிங்கத்தில் இடதும் வலதும் இரண்டு பாதைகள் ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவிற்கு உள்ளே சென்றுகொண்டே இருக்கிறது எங்கே செல்லும் இந்தப் பாதைகள் யாம் அறியோம் பராபரமே! 
சக்தி இல்லையேச் சிவமில்லை!
இந்த வர்ணணைகள் நீங்கள் எங்கோ கண்டது போல ஒரு தோற்றமளித்தால் ஆம், சூப்பர் ஸ்டார் பாபாஜி குகையில் சென்றதை விஜய் டிவியில் பார்த்திருப்பீர்களே கிட்டத்தட்ட அதனைப்போன்றே ஒரு இடம். வெளியில் இருக்கும் குளிர் உள்ளே இல்லை. டார்ச் லைட் இல்லையென்றால் வெளிச்சமில்லை உள்ளிருக்கும் அந்தப் பாதைகளிலிருந்து எதுவேண்டுமானாலும் வரலாம். திடீரென்று மழை நீர் உள்ளே புகலாம் ஆனாலும் அதி அற்புதமாக அதிகம் பேரால் அறியப்படாத இடமாக மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தாயின் கருப்பையிலிருந்து வெளிவருவது போன்று கால்வழியே உள் சென்று தலை வழியே வெளிவரும் அந்தக் குகை ஒரு மறுபிறப்பினை ஒத்த தரிசனம் என்றார் ஸ்வாமி. எல்லா வகையிலும் அது உண்மைதான். 
வெறும் காற்றடைத்த பையடா!
முழுவதுமான வழுக்குப் பாதை இனி ப்ரயாணம் எவ்வாறு இருக்கும் என்பதை கட்டியம் கூறுவது போல் நான்காவது மலையில் நாலு கால்களில் நடக்க ஆரம்பித்திருந்தோம். குளிரும் மழையும் அதிகம் இருந்ததால் உடலில் நீர் இழப்பு இல்லை. மாறாக விரல்கள் பாதங்கள் மரக்க ஆரம்பித்தது. திடீரென்று பாதங்களின் விரல்கள் எதிர் திசையில் தானாகவே இழுத்துக்கொண்டது. முதல் மலையில் வெடிக்கக் காத்திருந்த விலா எலும்புகள் இப்பொழுது அமைதியாகி இருந்தன. ஒரு வெட்டவெளி கண்ணில் பட்டது வலதுபக்கம் இருந்த ஒரு பெரிய சரிவில் அடர்ந்த மரங்களையுடை காடு. 

ஸ்வாமி ஓம்கார்

மலைப் பாதை!

நான்கு முடிந்து ஐந்தாவது மலையின் ஆரம்பத்தில் எங்களை வருக வருக என்று வரவேற்றனர் அரசியல்வாதிகள். யெஸ் ஜம்ப்பி ஜம்ப்பி ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள். மழை, ஒதுங்க இடமில்லை, பாறையில் சாய்ந்தாலோ ஓரிடத்திலேயே நின்றாலோ குருதி உறிஞ்ச ஒட்டும் அட்டைகள், ஓம் நமச்சிவாய ஆரம்பம் ஆறாவது மலை. 

முதல் மலையில் முதலில் வரும் இடம்!
ஏற்ற இறக்கங்களுடன் சமதளப்பாதைகள், அதள பாதாளம் அற்புதமான இயற்கைக் காட்சிகள், ஆளையே தூக்கும் அசுரக்காற்று வெளிச்சம் குறைய ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் ஏழாவது மலை அடிவாரம் அடைந்தோம். அங்கே இருக்கும் ஒரு சுனையில்தான் குளித்துக் குளிர்பெற்று குளிர் நீங்கி ஏழாம் மலை ஏறி ஈசனைக் காணவேண்டும். ஆனால் இயற்கை எங்களுக்கு வேறு கட்டளை இட்டது. ஏழாவது மலை அடைய முடியாத அளவுக்கு மழையும் காற்றும் மேகமுமாய் ஆக்ரோஷமாக இருந்தது. சுமார் 24 நபர்கள் அடங்கிய எங்கள் குழுவில் சில வயதானவர்களும் இருந்தார்கள். ஏழாம் மலை ஏறி தங்குவதாக இருந்த எங்கள் திட்டத்தில் இப்பொழுது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வந்தது. ஸ்வாமிஜி இருக்கும் நிலையை விளக்கிச் சொல்லி ப்ராக்டிகலாக நாம் இப்பொழுதே திரும்பிவிடலாம் என்று சொன்னதை அனைவரும் ஏற்று ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் ஏழாம் மலை எட்டிப் பார்த்துவிட்டு இறங்க ஆரம்பித்தோம். 

அந்தப் பாதாள குகை அருகில்!
இரண்டே மணி நேரத்தில் அசுரப் பாய்ச்சலில் எங்கும் நிற்காமல் ஐந்து மலை இறங்கி மீண்டும் பிள்ளையார் கோவில் வந்து கால் நீட்டிப் படுத்தபோது குண்டலினி மற்றும் உடலில் ஓடும் சக்கரங்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே அதெல்லாம் இதுவாக இருக்குமோ என்று சிட்டி ரோபோ போல பார்ட் பார்ட்டாக உடலின் பாகங்கள் உணர ஆரம்பித்தபோது உடல் நடுங்கத் தொடங்கியது. 
அரோகரா அதோ பிள்ளையார் கோவில் ஓம் நமச்சிவாய என்ற குரல் வந்த திசையில் சில இளைஞர்கள் மலை ஏறி வருவதைக் கண்டு அவர்களை கோவிலிலேயே ஓய்வெடுத்து காலையில் மழை இல்லையென்றால் மலை ஏறுமாறும் இல்லையென்றால் இறங்கிவிடுமாறும் சொல்லி வானிலை மோசமாக இருப்பதும், தங்க இடமில்லாமல் இருக்கும் நிலையையும் புரியவைத்தோம் சரிங்ணா என்று சொல்லி அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். 

மீண்டும் குளிர ஆரம்பித்தது.. ஒரு மணி நேர ஓய்விற்குப் பிறகு இறங்கிவிடலாம் என்று காலை எடுத்தபோது தெரிந்தது ஓய்வெடுத்தது எவ்வளவு தவறு என்பது. 200 அடிகள் இறங்கிய உடன் உடல் மீண்டும் ஒத்துழைத்தது. ஒரு வழியாக 12 மணி அளவில் மலை அடிவாரம் அடைந்து கால் நீட்டிப் படுத்தோம். உறங்குவதும் விழிப்பதுமாக ஒரு மன நிலை. மழை பெய்துகொண்டே இருந்தது.
 சிறிய குழுக்களாக மக்கள் மலை ஏற வந்துகொண்டே இருந்தார்கள். மனதிலேயே கோவில்கட்டி ஈசனை வழிபட்ட ஒரு நாயனாருக்கு மனம் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஆரம்பித்திருந்தது. தூணிலும் துரும்பிலும் உன்னிலும் என்னிலும் இருக்கும் இறைவன் என்ற வசனங்கள் மனதினுள்ளே சாகா வரம் பெற ஆரம்பித்திருந்தது. 
இது ஜஸ்ட் லைக் தட் ட்ரெக்கிங் அல்ல, ஏன் விரதம் இருக்கவேண்டும்? ஏன் வெறும் காலில் ஒரு மண்டலம் நடக்கவேண்டும்? ஏன் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும்? ஏன் இந்தக் கடவுளின் பெயரில் இத்தனைக் கட்டுப்பாடுகள்? இதெல்லாம் காரணம் புரிய ஆரம்பித்தது. இயற்கையென்றால் இயற்கை இறைவனென்றால் இறைவன். இரண்டும் எப்பொழுதும் காண்பதுபோல இங்கே காணக் கிடைப்பதில்லை என்பதே உண்மை. மெனெக்கெட்டால் மேன்மையானது கிடைக்கும். வெள்ளியங்கிரிப் பயணம் அதை உணர்த்தியது. இன்று போய் நாளை வா என்பது போல அது மீண்டும் ஒரு முறை பூரணமாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பளிக்கவே முழுமை அடையாத ஒரு பயணத்தை எனக்கு வழங்கி இருக்கிறதாகவே நான் உணர்கிறேன். சரியான முன்னேற்பாடுகளுடன் அடுத்தமுறை ஒரு முழுமையான பயணம் முடித்து சிறப்பான மன உணர்வுகளை பகிர விருப்பம். எல்லாம் அவன் செயல்.
நன்றி மறப்பது நன்றன்று:-
டிக்கெட் எடுத்துக் கொடுத்த ஏற்கனவே ஏழு மலை ஏறி இறங்கி இருந்த அந்தப் புண்ணியவான் + பிரபலப் பதிவருக்கு சூட்சும சக்தி ஏதேனும் சேதி சொல்லி இருந்திருக்கக்கூடும், அதனாலேயே அவர் பயணம் கடைசி நேரம் தடைப் பட்டிருக்கிறது:))
கோவையில் காவி சட்டை வேட்டியில் கையில் கம்புகொண்டு ஒரு சாமியார் சாப்பாட்டுக்கு ஓட்டல் தேடியதை நீங்கள் கண்டிருந்தால் அது சாட்சாத் நானேதான். உடனிருந்தவர் பதிவர் எறும்பு ராஜகோபால். நான் இஸ்துகினு இஸ்துகினு கம்புகொண்டு நடப்பதை ஏளனத்துடன் பார்த்து அடுத்து சதுரகிரி போறோம்தானே? என்றார்! 
மாலை பதிவர்(?) சகோதரி விஜி அவர்கள் வீட்டிற்கு சென்று அருமையான காபி குடித்தோம்,  காங்கிரஸ் இணைய தளபதி சஞ்செய் வந்தார், சகோதரி சக்தி மற்றும் தாரிணிப் ப்ரியாவுடன் செல்லில் அழைத்துப் பேசி ஒரு மினி மாநாடு முடிந்து சுவையான இரவு உணவு முடித்து விடைபெற்று வீடு வந்தோம். 
எங்கிருந்தோ பெயர்த்தெடுத்து இந்தத் தமிழகத்தில் வெள்ளியங்கிரியை வைத்தது யார்? இதைப் படித்து வெள்ளியங்கிரி ஏறக்கூடாது என்று முடிவெடுத்தால் நீங்கள் தமிழகத்திலிருக்கும் ஒரு மிக மிக முக்கியமான ப்ரயாணத்தை இழக்கிறீர்கள். ஏறலாம் என்று முடிவெடுத்தால் அதி அற்புதமான ஒரு தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும் இயற்கையோ, ஈசனோ, சுற்றுச்சூழலோ, ஆரோக்கியப் ப்ரயாணமோ, ட்ரெக்கிங்கோ ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கும் உரிமை உங்களுக்கிருக்கிறது.                   

ஒன்றுமில்லாததில் 
ஒன்றுமில்லாததிருந்திருக்கவேண்டும்
அந்த ஒன்றுமில்லாததிலும்
ஒன்றுமில்லாததிருந்ததா என்பது
என்றுமில்லாதது மட்டுமே
அறியும்!
தென்னாடுடைய சிவனே போற்றி!
.

ஒரு பரதேசியின் பயணம் – பார்ட் 2

 சமீபத்தில் பதிவர் நண்பர் எறும்பு ராஜகோபாலின் குழந்தையின் முதல் பிறந்த நாள் முன்னிட்டு அவருடன் அம்பாசமுத்திரம் சென்றிருந்தேன். போன வருடமும் இதே தை மாதத்தில் அங்கு சென்றதால் இந்த முறை சில புதிய இடங்களைப் பார்த்துவிட முடிவு செய்திருந்தேன். எறும்பு குழந்தையின் பிறந்த நாளுக்காக பிஸியாகிவிட்டதால் சுற்றிக்காட்டும் முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர் நம்ம துபாய் ராஜா.
 பாசக்கார மனுஷன் அவருடைய பிறந்த நாள் அன்றைக்குக்கூட இந்த ஏழை எழுத்தாளனை வைத்துக்கொண்டு பட்டி தொட்டியெல்லாம் சுற்றிக் காண்பித்தார். 
முதல் நாள் அம்பை சென்று இறங்கியவுடன் ராஜகோபால் பிறந்தநாள் முதல் அவருக்கு பதனி சப்ளை செய்யும் பதனிக் கடை ஓனர் ஸ்பெஷலாக இள நுங்கு வெட்டிப்போட்டு பனை இலையில் பதனி ஊற்றித்தந்தார் பல வருடங்களுக்குப் பிறகு ஜில்லென்று ஒரு பானம் அடித்த கையோடு ஆற்றுக்குச் சென்றோம். 
“ராஜகோபால் இந்த ஆத்துல எதுனா விசேஷம் இருக்கா?”
“இருக்குங்க”
”என்னது?”
“வெளியூர்லேர்ந்து வர்றவங்கள நிறைய காவு வாங்கி இருக்கு.” 
(நல்ல எண்ணம்யா) நல்லவன் வாழ்வான்னு நினைத்துக்கொண்டே ஆற்றங்கரைக்குச் சென்றோம். நான் நினைவு தெரிந்து தமிழக ஆற்றில் கண்ட மலமணக் காட்சிகள் நாசி துளைக்க கரைக்குச் சென்றபோது கொல்லம்/செங்கோட்டை பாசஞ்சர் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிக்காக மேம்பாலம் கட்டிக்கொண்டிருந்தனர். அதாவது ஆங்கிலேயர் சற்றொப்ப 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய தூண்களை இடிக்க முடியாது அதன்மேலேயே ஒரு மேக்கப் போட்டு சுமார் 3 வருடங்கள் நெருங்கப்போகும் ‘துரித’ கதியில் வேலைகள் செம்மையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
                                   தாமிரபரணியின் மேலே அந்த மேக்கப் பாலம்
ஆற்றங்கரையில் நான் மனங்குளிரக் கண்ட ஒன்று மருத மரங்கள். ஓங்கி உலகளந்த உத்தம இயற்கையின் ரோமக் கால்களைப்போல சுமார் 30 அடி சுற்றளவும் 180 அடி உயரமும் வளரக்கூடிய நம் நாட்டின் பாரம்பரிய மரங்கள் வரிசையாய் பல நூற்றாண்டு வளர்ச்சியுடன் கம்பீரமாய் நிற்கிறது. மருத மரங்கள் கோவில் தேர் செய்யப் பயன்படுத்தப்படும் மரங்களில் ஒன்று, மேலும் ஆயுர்வேத மருத்துவங்களிலும், விருட்சாயுர்வேதத்திலும் இதன் பயன்பாடுகள் அதிகம் சொல்லப் பட்டிருக்கிறது. விஞ்ஞானப் பெயர் Terminalia arjuna (Combretaceae) எல்லாப் பருவ நிலைகளிலும் வளரும் இதைக் கன்றாகக் கொடுத்து வளர்த்தால் மழை வளம் பெருகும். ஆனால் அரசாங்கம் வளர்ப்பது ஒன்றுக்கும் உதவாத டில்லி மரங்களை :(( 
சுழல், புதைகுழி இருக்கும் பகுதி என்ற போர்டைக் கடந்து 5 அடி ஆழமுள்ள இடத்தில் மீன்கள் கடிக்க ஒரு குளிர் குளியலோடு வீடு வந்தால் துபாய் ராஜா ”வாங்க போலாம்” என்று வண்டியில் என்னை அழைத்துச் சென்ற இடம் மணிமுத்தாறு டாம். காய்ந்து கிடந்த கம்பீரமான டாமை புலிகளின் சரணாலயமான அடர்ந்த காட்டு வழிப் பாதையில் சென்று அடைந்தோம், காட்டு வழிப்பாதையிலேயே இதமான குளிரும் வன வாசமும் மனசை லேசாக்கியது. மணிமுத்தாறு அருவிக்குச் சென்றால் சென்ற வருடத்தில் பாபனாசம் அகஸ்தியர் அருவியில் அடைந்த அதே இன்பம். யாருமற்ற அருவிக் குளியல்! உயரம் அதிகமில்லை என்றாலும் நீரின் வேகத்தை உடல் தாங்க முடியாமல் தள்ளாடியது. அருவியின் எதிரிலேயே ஒர் அழகான அமைதியான எண்பதடி ஆழமான தடாகம் டைவ் அடித்து சொர்க்கத்திற்கு சென்றவர்கள் அதிகமாம். 
ச’னாவும் வராது, ப’னாவும் வராது ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி. என்று சொல்லிவிட்டு தேங்காய் சீனிவாசன் முறைப்பது போல அந்தத் தடாகம் என்னைப் பார்ப்பதுபோல இருந்தது. டைவ் அடிப்போமா என்றார் ராஜா.
எனக்கு கடப்பாறை நீச்சல்தான் தெரியும் என்பதை அவருக்குச் சொல்ல வாய் வந்தும் 
‘சாரி ராஜா பளக்கமில்ல எதுக்கு ரிஸ்கு?” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனேன். 
பராமரிப்பின்றி கிடக்கும் அணையின் பூங்காவைச் சுற்றிப்பார்த்தோம். அணையின் அருகிலிருந்த விவசாய நிலங்கள் செழிப்பாக இருந்தது. குறிப்பாக நேந்திரம் மற்றூம் ரோபஸ்ட்டா அதிகம் பயிராகி இருந்த வாழைத் தோப்புகள்.. அவ்வளவு பச்சை.
மணிமுத்தாறு அணை பற்றி சில குறிப்புகள்: நீரியல் திட்டம் 1 – உலகவங்கி நிதியுதவியுடன் 1958 ல் கட்டப்பட்டது. 
மொத்த நீளம்- 9605 அடி
முழு நீர் மட்ட உயரம் – 118 அடி
நீர்ப்பரவல் பரப்பு – 62.481 சதுர மைல்
முழுக்கொள்ளளவு – 5511 மி.க.அடி
மதகுகளின் எண்ணிக்கை – 3
உபரி நீர் போக்கி – 7
மொத்த பாசனப் பரப்பு – 25438 ஏக்கர்.
அடுத்து அவர் கூட்டிச் சென்றது சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை. அதைப் பற்றி வேறு ஒரு இடுகையில் பார்ப்போம். (பின்ன எப்படி டபுள் செஞ்சுரி அடிக்கறது?)
மறு நாள் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து குற்றாலம் போலாம் வாங்க என்று ராஜா அழைக்க ஒரு ட்ரிப் அடித்தோம். வழியில் பிரபல பதிவர்களின் ஊர்களைக் கடந்து குற்றாலம் சென்றபோது பழைய குற்றாலத்தில் மட்டும் உடல் நனையும்படிக்கு நீர் விழுந்து கொண்டிருந்தது.
 மற்ற தேனருவி, மெயின் அருவி, ஐந்தருவி எல்லாம் காய்ந்து கிடந்தது. அன்று தை அமாவாசை என்பதால் அதிக கூட்டம். ஷவரை விட சிறியதாக விழுந்த அந்தத்தண்ணீரிலும் தண்ணிபோட்டு  எண்ணெய் தேய்த்து குளிக்க நின்றிருந்த கும்பல் கண்டு நான் ராஜாவைப் பார்த்தேன். குளிக்கலாமா என்றார். பார்த்ததே பரம திருப்தி என்று சொல்லிவிட்டு கும்பலாய் சுற்றிஅலையும் குரங்குக் கூட்டங்களைப் பார்த்து பரவசமடைத்தோம்.
 (எப்பேர்ப்பட்ட வனத்துல மேஞ்சாலும் கடைசில இனத்துலதான் வந்து சேரனும்.:)
கல்லிடைக் குறிச்சியில் அப்பளங்கள் வாங்கி ராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரின் தந்தையோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கம்பட்டியில் அவர்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்றதையும் அங்கு மாடியிலிருந்து கண்ட வயல்வெளிக் காட்சிகளையும் பற்றி பேச்சு வந்தபோது ஆயிரம் மாடுகளுக்கு மேல் சொந்தக்காரகளாக இருந்து அந்த மணிமுத்தாறு மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பிய நாட்களை நினைவு படுத்திப் பேசினார். சர்வசாதரணமாக சிங்கம் பட்டியிலிருந்து அம்பைக்கு நடந்தே வந்து பள்ளியில் படித்தது, ஜமீன், புலிவேட்டை, புலியின் மாடு வேட்டை, டேம் கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட கிராமம். என்று பேச்சு டைம் மிஷினில் ஏறிச்சென்றது.
அன்றே அம்பையின் அருகில் இருக்கும் பிரம்மதேசம் சென்றோம். சென்ற முறையே அங்கு சென்றுவந்ததைப் பற்றி சொன்னேன். ஒரு கோவில் இருக்கு கண்டிப்பா பார்க்கணும் என்றார் ராஜா.
“சிவன் கோவில்தானே?”
“இல்லைங்க:
”:ஒரு கிருஷ்ணன் கோவில் இருக்கே அதா?”
”இல்லைங்க”
“அந்த நாலாயிரத்தம்மன்?” இல்லையென்று தலையாட்டியவரைப் பார்த்து வேற என்னங்க கோவில் இருக்கு பிரம்மதேசத்தில என்று கேட்டேன். நானும் இப்படித்தாங்க இருந்தேன், ஆனா கவிஞர் விக்கிரமாதித்தியன் சார்தான் எனக்கே இந்தக் கோவிலை அறிமுகப் படுத்தினார் என்று அவர் அழைத்துச் சென்ற கோவில் 
வாலீசுவரர் கோவில் – திருவாலீஸ்வரம் – தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவில் தஞ்சை பெரியகோவிலுக்கும் பழைமையானது. மேலதிகத் தகவல்களுக்கு இந்த படத்தைப் பாருங்கள். 
                                கோவிலின் வாசலில் உள்ள அறிவிப்பு பலகை
                                                                             துபாய் ராஜா
மிக அழகான கோவில். தொல்லியல்துறை வசம் இருப்பதால் மாதத்தில் முக்கிய நாட்கள் நீங்க வேறு தினப்படி பூஜைகள் ஏதுமில்லை. நாங்கள் சென்ற நேரத்தில் பராமரிக்கும் அதிகாரி அங்கே இருந்ததால் உள்ளே அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். 
                                                         ராக்கெட் ராஜா!

திருநெல்வேலியின் ஒரிஜினல் அல்வா கிண்டப்படும் வீடியோ காட்சி, பதிவர் உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்களுடன் சந்திப்பு, சாத்தூர் மாக்கான் இராமசாமி கண்ணன் ஊரின் அருகில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் போன்ற விறுவிறுப்பான பதிவுகள்

பின் வரும் நாட்களில்…..

டிஸ்கி:-

(இந்த இடுகைய தமிழ்மணம் டாப் டென்ல கொண்டு வந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் வேலையே இல்லாத நேரத்தில் மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே பதிவிடுகிறேன் நண்பர்களே!) :))

Advertisements