Category Archives: திரை விமர்சனம்

கடல் – விமர்சனம்.

அது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்ளிய காலம். நான் அதிகம் பார்த்த தமிழ் படங்களுள் மணிரத்னத்தின் படங்களே டாப் டென்னில் வரும்.

அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், கதையை அங்கே சுட்டார், இந்தக் கோணம் இங்கே சுட்டார் என்று, ஆனால் அதை எல்லாம் மீறி அவர் படங்களின் மீதான ஈர்ப்பு என்பது குறையவே இல்லாத காலம் அது. முதலில் அது உடைந்து சுக்குநூறாகிப்போனது திருடா திருடா படத்தில்தான், கிட்டத்தட்ட அதே மனநிலையில் இன்று முதல் காட்சி பார்த்த இந்தக் கடல் படமும்.

என்ன ஆயிற்று அவரின் மேஜிக் மேக்கிங்கிற்கு? நல்ல மியூஸிக் டைரக்டர், நல்ல கேமரா மேன், அருமையான பாடல்கள், அழகான இரண்டு புதுமுகங்கள், நல்ல ஒரு கதை சொல்லியான ஜெமோ, ட்ரைவிங் சீட்டில் மணிரத்னம் தி க்ரேட், எப்படி வந்திருக்கவேண்டிய படம்???

அதென்னமோ நல்ல லைட்டிங்கில் படம் எடுக்கக்கூடாது என்று எதாவது வாக்கு குடுத்துவிட்டார்களா? ஏதோ அலை அடிப்பதால் அங்கொன்று இங்கொன்று சீன்கள் வெளிச்சத்தில் வருவதால் அது கடல் என்று தெரிகிறது. ஏன்? கடலை அதன் ஆத்மார்த்தமான நீலப் ப்ரதிபலிப்பில் காண்பிக்க என்ன தயக்கமோ?

ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல, கண்ணு வலிக்கிது மக்கா 😦

-0-

குழந்தையாக, சிறுவனாக, ஹீரோவாக வரும் நாயகன் கேரக்டர்கள் எல்லாமே நல்ல தேர்வு. நாயகி பல்லைப் பார்த்த உடனே தெரிந்துவிட்டது ஏதோ மனநிலை சரியில்லாத கதாபாத்திரம் என்று, ஆனால் அவருக்கான உடையில் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்று குழம்பி கடைசியில் நர்சாக அல்லது டாக்டராக அல்லது டெலிவரி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் என்று கண்டுகொள்கிறோம். அவருக்கு ஒரு நாலு வெள்ளை கவுன், ஹீரோவுக்கு பட்டனில்லாத சட்டை நாலு, படம் பூராவும் பீச் பக்கமும், கடலிலும் ஷூட்டிங், அதிகபட்ச செலவே சர்ச் செட்டுக்கும், அர்ஜுன் ட்ரெஸ்ஸிற்கும், அரவிந்சாமியின் புல்லட் பெட்ரோலுக்கும்தான் ஆகி இருக்கும்.

அய்யா சாமி, தூத்துக்குடிப் பக்கம் இந்தமாதிரித்தான் தமிழ் பேசுவார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மணிரத்னம் படம் என்றால் இப்படித்தான் தமிழ் பேசுவார்கள் என்பது இப்பொழுது தெரிந்துவிட்டது. சரி அதையாவது படம் முழுக்க ஒழுங்காகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, ஏதோ குறியீடு போல என்று ஃபாலோ பண்ணாமல் விட்டுவிட்டேன்.

முழுக்க கிருத்துவர்களைக் கொண்ட ஒரு கடற்கரைக் கிராமத்தின் ஒரு நல்ல கிருத்துவ பாதிரிக்கும், ஒரு கெட்ட மனிதருக்கும் (அவரும் பைபிளைக் கரைத்துக்குடித்த கிருத்துவர்தான், ஆனால் தன்னை சாத்தானாகப் பிரகடனப் படுத்திக்கொள்கிறார்) நடக்கும் கதை. நிச்சயம் போராட்டம் தடை எல்லாம் கொண்டுவந்து விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வழக்கமான எரப்பாளி டயலாக்கிலிருந்து துவங்குகிறது ஜெமோ டச், ஆங்காங்கே ’பேயோட்ட 15 ரூவா, பாவமன்னிப்புக்கு 10 ரூவா’ என்ற முத்திரை வசனங்களோடு நகர்கிறது வசனங்கள். பாடல்கள் படத்தில் ஒன்றவே ஒன்றாது என்று முடிவெடுத்து பாவமன்னிப்பாக கடைசி பாட்டை இறுதியில் டைட்டிலோடு ஓட்டிவிடுகிறார்கள், மக்களும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்கள்.

ரீ ரெக்கார்டிங் – அழுத்தமான காட்சிகளில் கூட டிங் டிங் லோ வால்யூமில் வைத்த செல்போன் ரிங் போல தடுமாறுகிறது. பாவம் அவரும்தான் என்ன செய்வார்?

-0-

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது, போலவே பழைய மணிரத்னம் படங்கள் நினைவில் உள்ள ரசிகனை இது போன்ற படங்கள் கொடுத்து திருப்திப்படுத்தவும் முடியாது.

மீண்டும் ஒழிமுறியை ஜெமோவுக்காகவும், விண்ணைத்தாண்டி வருவாயாவை ரஹ்மானுக்காகவும், இதயத்தைத் திருடாதேவை மணிரத்னத்திற்காகவும்,  மின்சாரக் கனவை ராஜீவ் மேனனுக்காகவும் பார்த்து என்னுடைய ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும்.

-0-

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய்,  ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )
கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டேன், என்னை மன்னியும்! 
.
Advertisements

ஏழாம் அறிவு!

போதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர்ந்து  சீனாவின் ஒரு எல்லையோர கிராமத்தை அடைகிறார். அங்கே செல்லும்போது அவர் மட்டும்தான் சிகப்பு உடை அணிந்திருக்கிறார். மற்ற மக்கள் சாதாரண கலரிலேயே உடை அணிந்திருக்கிறார்கள் (குறியீடாக இருக்கலாம்) 
அந்த கிராம மக்களை எப்படி போதி தர்மர் கவர்கிறார். ஷாலின் டெம்பிள் எப்படி இவரை கடவுளாக வணங்குகிறது. காஞ்சீபுரம் இட்லி தெரிந்த தமிழர்களுக்கு போதிதர்மாவை ஏன் தெரியவில்லை? சரி, 1600 வருடங்களுக்கு முன்பாக அவர் இங்கிருந்து கொண்டு சென்ற குங்பு கலை சீனாவில் பேமஸ் ஆன அளவிற்கு ஏன் இங்கே ஆகாமல், இட்லியும், பட்டுப்புடவையும் அதை அமுக்கிவிட்டது? விடை தேடத்துவங்குகிறார்கள் தமிழ் உணர்வு, தமிழன், மஞ்சள், வேப்பிலை பேட்டண்ட் இத்யாதி இத்யாதி..
வெறுமனே போதிதர்மர் தமிழர், அதனால் மக்களே, நாமதான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கண்டுபிடித்தோம், வாங்க பழகலாம் என்று படம் எடுத்தால் மக்கள் பார்ப்பார்களோ? என்னமோ? என்று போதி தர்மாவின் டிஎன்ஏ, சூர்யாவின் 6பேக், பாம்பே சர்க்கஸ், ஸ்ருதிஹாசன், தமிழை குரங்கு என்று திட்டும் ப்ரொபசரை கெட்ட வார்த்தையில் திட்டும் ஸ்ருதி (செம அப்ளாஸ் பாஸ்) புக்கெட் தீவு சாங், குத்து சாங், குங்பூ பைட், கிராபிக்ஸ், பறக்கும் கார்கள் என்று உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குக் கொடுத்த நோட்டீஸ் போல இறங்கி வந்து அடி அடி என்று அடித்திருக்கிறார்கள். 
பொதுவாக ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ரஷ்யாவை சகட்டுமேனிக்கு கிரிமினலாக்கி ஹீரோ அவர்களை அழிப்பது போல படங்கள் பார்த்திருக்கிறோம். அது கொரியா மற்றும் வியட்நாமாகக்கூட பரிணாம வளர்ச்சிகள் அவ்வப்போது அடைந்திருக்கிறது. நமது தமிழ் படங்களில் கேப்டன் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதி என்று காட்டப்படும் திடகாத்திரவில்லனை பக்கம் பக்கமாக வசனம் பேசி தலைக்குமேலே காலை எத்தி உதைத்து தாய் நாட்டைக் காப்பாற்றி இருக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வில்லன் சீனா. எனவே குங்பூ மற்றும் சிட்டி ரொபோவிற்கு கொஞ்சம் கம்மியாக வித்தைகள் தெரிந்த சீன வில்லன். நோக்கிக்கோ என்று நோக்கு வர்மத்திலேயே நோக்கி நோக்கி நொங்கெடுக்கிறார்.
அப்புறம் ஸ்ருதி ஹாசன். நல்ல வரவு. சொந்தக்குரலில் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்பா அளவிற்கு இல்லாமல் கொஞ்சம் பாலீஷ் போட்டுப் பேசி இருக்கிறார். ஒரு அழகான அழுகைக் காட்சியும் அவருக்கு இருக்கிறது. பாடல்கள் என்று நாம் நினைக்கும் போதே ஆலம்பனா நான் உங்கள் அடிமை என்றவாரே உடனே வஞ்சனை இல்லாமல் வருகிறது. சூர்யா கமல் சார் பெண் என்று பட்டும் படாமல் ஜோடி போட்டு டூயட் பாடி இருக்கிறார்.
இன்னும் பல விஷயங்களை நீங்கள் தியேட்டரில் சென்று காணலாம்.
அவ்ளொதான் பாஸ் இந்தப் படம் பற்றிய பகிர்தல். மிச்ச மீதியெல்லாம் மற்ற சினிமா விமர்சன ஜாம்பவான்கள் எழுதுவார்கள். என்னதான் எழுதப்போறாங்கன்னு நானும் படிக்க ஆவலோடு இருக்கிறேன். 🙂
முடிவாக : 
அப்புறம் ஸ்டிவன் ஸெகல் என்று ஒரு குடுமி வைத்த ஹாலிவுட் நடிகர் இருக்கிறார் வெறும் கைகள் கொண்டு அவர்போடும் சண்டை அவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக தேவையான இடங்களில் மட்டும் நிச்சயம் இடம்பெறும் அது எனக்குப் பிடிக்கும் என்பது கூடுதல் தகவல். அதற்காகவாவது அவர் போதி தர்மருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.

சூர்யா போதி தர்மர் வேடத்திற்கு கச்சிதமாக உழைத்திருக்கிறார். படமாக்கிய விதம் மிக அருமை. சிறிது தாமதமாகச் சென்றாலும் இந்தக் காட்சிகளை நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.
இந்தப் படத்திற்கான ஒரு பேட்டியில் படம் பார்த்துட்டு வர்றவங்களுக்கு படம் மனசில நிக்கனும் என்று சூர்யா சொல்லி இருந்தார். ஆமாம் எனக்கு போதி தர்மரைப்பற்றி அறிந்துகொள்ள ஷாலின் டெம்பிளும், 36சேம்பரும் தராத ஒரு ஆவலை இந்தப் படம் தூண்டிவிட்டிருக்கிறது. அதற்காகவாவது ஏழாம் அறிவுக்கு நன்றி!
.

>நந்தலாலா – ない問題

>

.
நடிப்பு என்பதென்ன கன்னக்கதுப்புகள் ஆடவேண்டுமா? கண்கள் பேசவேண்டுமா? இரண்டு கைகளையும் எங்கே என்ன மாதிரி வைத்துக்கொள்வதென்று ஹோம் வொர்க் செய்வதா? புருவங்கள்? உதடுகள், குரல்? சிரிப்பின் அளவு, ப்ச்.. உடல்மொழி என்ற ஒன்று போதும் என்று நிரூபிக்கிறது படம். க்ளோசப்பில் நம்மைக் கொன்று குவித்த திரைப்படங்களில் கால்களில் முகம் காட்டும் ஃப்ரேம்கள் ஒரு குழந்தைக்கும் குழந்தையாய் இருப்பவனுக்கும் என்ன அளவில் உலகம் தெரியுமோ அதே அளவில் நகர்கிறது காட்சிகள்.
தாய்ப்பாசத்தை வைத்து பிழியப் பிழிய பொன்மனச்செம்மல் முதல் துவைத்துக்காயப்போட்டவர்கள் அதிகம். அவர்கள் எல்லாமே இலக்கணம் மீறாத அம்மாக்கள். குந்திதேவி மார்பிலடித்து அழும் கர்ணன் வதை காட்சி முதல் பாசத்தினாலும் சோகத்தினாலும் காதைக்கிழியவைத்து கண்களை பதம் பார்க்க வைத்த அதே வெள்ளைத்திரையில் முதுகு மட்டும் காண்பித்து பித்துப்பிடிக்க வைக்கிறார் மிஷ்கின். இத்தனைக்கும் கடைசியில் எந்த சூப்பர் தாய்களையும் காட்டாமலேயே!   
வெறும் சம்பவக் கோர்வைகள்தான். ஒரு பயணத்தில், தின வாழ்வில், தினமும் நாம் காணும் ஆனால் நெகிழத்தவறவிடும் தருணங்கள் ஒவ்வொரு நொடியின் கட்டங்களிலும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. 
படிமானம் குறியீடு என்றெல்லாம் ஆயிரம் இருக்கலாம். அதெல்லாம் சாமானியனுக்குத் தேவையா? புரியுமா? ஒரு கைப்பிடிச் சோறின் ரிஷிமூலம் நதிமூலம் தெரிந்துதான் உண்பேன் என்றால் வயிறு நிறையுமா? அதெல்லாம் விவாதிப்பவர்களுக்கும், திரைப்படத்தை டெக்னிக்கலாக அணுகுபவர்களுக்கும் தேவையானவை. நமக்கு படத்தில் தூரத்தே தெரியும் மதில் ஏறி குதித்த ஒருவன் உடை மாற்றும் நிர்வாணக் காட்சி ஊர் ஒதுக்கிவிட்டதென்று தனியனாய் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சை செய்யும் பெண்டாக்டரும் தன்னைப்போன்றவர் என்று தெரியும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தினால் போதாதா? பெற்ற தாயால் புரிந்துகொள்ளாத குழந்தைகளை முகமறியாதவர்கள் அன்பு செய்கிறார்கள். 
ஒரு படத்தில் இசை என்பதின் எல்லை என்ன என்பதை இசைஞானி சரியாகச் செய்திருக்கிறார். மெளனத்தைப் போன்றதொரு சிறந்த இசை இல்லை என்பதை அவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.  காமிராவின் கோணங்களும், நிறங்களும் அபரிமிதமான உணர்வுகளைத் தருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நான் என்னை அறியாமல் அழுத படம் இது. தன் முத்தத்தை யாருக்கும் தராமல் சேர்த்து வைத்த அந்த சிறுவன் முதல் முறை முகம் முழுக்க முத்தம் தந்தபோது நான் ஏன் அழுதேன்? சிறுக்கி முண்டை என்று தன் தாயை எட்டி உதைக்க வந்தவன் எங்கம்மா எங்கம்மா என்று அழுதபோது நானும் ஏன் அழுதேன்? எது அழுகையை வரவைத்தது? இசையா? காட்சி அமைப்பா? காமெராவா? முக பாவனையா? எது அழுகையைத் தூண்டியது? தமிழ் படத்தில் பார்க்காத அம்மா சென்டிமென்ட்டா? எது அழத் தூண்டியது? 
எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று ரசித்துப் பார்க்கவேண்டிய மன்னிக்க உணர வேண்டிய படம் இது. காட்சிகள் தீர்மானிக்கும் கதையில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று உட்கார்ந்தபடியே ஒன்றிப்போய் படத்தினூடே ஒரு பயணம்.
குறிப்பு: இந்தப்படம் கிகுஜிரோவின் அட்டக்காப்பி அல்லது தழுவல் என்று சொல்லப்படுகிறது. நிச்சயம் இந்தப் படம் ஒரு ரஜினி படம்போலவோ, கமல் படம் போலவோ அல்லது மற்ற மாஸ் ஹீரோ படங்கள் போலவோ வசூலை அள்ளிக்குவிக்கும் என்று நினைத்து அதற்கான முகாந்திரமாக  எடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே? இருப்பினும் ஒரு உன்னதமான படத்தை இப்படி எடுப்பதற்கும் அதில் தானே நடிப்பதற்கும், மெனக்கெடலுக்கும் ஒரு தைரியம் வேண்டும். கரண்ட் ட்ரெண்டில் ஒரு படத்தை எடுத்து காசை அள்ளி இருந்திருக்கலாம். (நான் தியேட்டரில் கண்ட பல இளைஞசர்கள் அந்த எதிர்பார்ப்பிலேயே வந்து என்னய்யா கடுப்பா இருக்கு என கமென்ட் அடித்ததையும் கண்டேன்) அந்த விஷயத்தில் மிஷ்கின் பாராட்டப்படவேண்டியவர். மற்றதெல்லாம் அவரவர் மனசாட்சியின் வேதங்கள்தான் கற்பிக்கவேண்டும். 
ஏனய்யா நூறுகோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் ஒரே ஒரு முகம் கூடவா காந்திபோலில்லை? அட்டன்பரோவைக் கேட்ட கேள்வி ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்கிறது!
நன்றி!
.

>மந்திரப் புன்னகை – இது விமர்சனமா??

>

.
என்ன பலா நைட்டே படத்தப் பத்தி ரிவ்யூ எழுதிடுவீங்கதானே? கேட்ட பிரபல பதிவரைப் பார்த்து திரும்ப சொன்னேன் ஏன் படம் பார்த்தா ரிவ்யூ எழுதனுமா?
இல்ல அண்ணன் உண்மைத்தமிழன் கஷ்டப்பட்டு எல்லாரையும் கூப்பிட்டு முக்கியமா பதிவுலக நண்பர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ அரேஞ் பண்ணி இருக்காரு, குடும்பத்தோட வரலாம்னு ரொம்ப முயற்சி எடுத்திருக்கார் அதனால..
ஹலோ நானா அவர கஷ்டப்படச்சொன்னேன்? ஸ்பெஷல் ஷோ போடச்சொன்னேன்? கஷ்டப்பட்டு படம் பார்க்க வந்திருக்கனே நான் பாவமில்லையா?? சரி அத விடுங்க ஏதோ டிசம்பர் 15ம் தேதி நீங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப்போறீங்களாமே? 
ஏங்க சத்தமா பேசறீங்க?
ஏம்ப்பா கல்யாணம்தானே பண்ணிக்கப்போற லிவிங்டுகெதர் இல்லையே? அப்படியே இருந்தாலும் சத்தமா கேக்கறதுல என்ன தப்பு? மெதுவா கேட்டாலும் சத்தம் வராதா என்ன? 
இங்கிதமே தெரியல பலா உங்களுக்கு! 
இங்கிதம்னா என்னங்க? கல்யாணம் செஞ்சிக்கப்போறத ரகசியமா செய்யறதா? அட்லீஸ்ட் அந்தப் பொண்ணுக்காவது தெரியுமா? 
ஏய்ய்ய்ய்ய்ய்ய் என்று அந்தப் பிரபலப் பதிவர் அருவா தூக்குவதற்கு முன்பாக கட்.
இந்தப் படம் இது போன்ற ஒரு கேரக்டரைச் சுற்றித்தான் ஆரம்பிக்கிறது. உள்ளதை உள்ளபடியே பேசும், பேச விரும்பும் நாயகன். முகமூடிகள் தேவைப்படாத, அதை மாட்டி யோக்கியன் என்று காண்பித்துக்கொள்பவரைக் கேள்விகேட்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். முதல் பாதி முழுவதும் முகமூடிகளுடன் படம் பார்ப்பவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துகொண்டே வரும் வசனங்கள். கூடவே வழக்கம் போல சந்தானம் :))
இது போன்ற மனிதர்களைக் காண்பது அரிது. ஒருவேளை பைத்தியம் என்று சொல்லி எங்காவது சங்கிலி போட்டு கட்டிவைத்திருகிறார்களோ என்னமோ? ஆனாலும் பாருங்கள் இது எல்லோருக்குள்ளும் நிகழும் ஒன்றுதான். நீயா நானாவில் ஒரு ஷோவில் பார்த்திருக்கிறேன் அழகான பெண்கள், ஆண்கள் பெண்களைப் பார்த்து கேள்வி வரும் நீங்கள் ஏன் அழகாக உடை உடுத்துகிறீர்கள்?. பதில் பசங்கள அட்ராக்ட் பண்ணத்தான். 99% இது உண்மையாக இருக்கலாம் ஆனால் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ உத்துப் பார்த்தால் போச்சு! ஆணின் ஜெண்டில்மேனை பெண் உடைப்பாள், பெண்ணின் கேரக்டரை ஆண் உடைப்பான். அழகாய் நிற்கும் பெண்ணின் அல்லது ஆணின் உடையை ஹேர் ஸ்டைலை சூப்பரா இருக்குங்க, யூ லுக் பியூட்டிஃபுல் என்று சொல்ல முடியவே முடியாது. ஆனால் மனசு சொல்லிவிடும். மனசு சொல்வதை வாயாலும் சொல்கிறார் ஹீரோ. அதிலும் வழக்கமான க்ளிஷேக்கள் உடைக்கப்பட்டு படம் பைபாஸில் பயணித்து மேம்பாலம் ஏறி நகர நெரிசலில் சிக்கப்போகும் முதல் சிக்னலில் இடைவேளை.
இரண்டாம் பாதியில் அந்த கேரக்டரை காம்ப்ரமைஸ் செய்து வழக்கமான சினிமா க்ளிஷேக்களை நிரப்பி ஜஸ்டிஃபிகேஷன் செய்திருக்கிறார்கள்.   
படத்தில் (என்னை) கவர்ந்த அம்சங்கள்:
பலரின் முகங்களைக் காட்டும் டைட்டில்
வசனம்
சந்தானம். 
அல்ட்ரா ஸ்லோமோஷன் பேக்கிரவுண்டில் அந்தப் பாடல்.
கரு. பழனியப்பன் நடிப்பு – எறும்பு ராஜகோபால் கூட கேட்டார் ரொம்ப ஃப்ளாட்டா நடிச்சிருக்காரே. ஆனால் இந்தப் படத்தில் அந்த கேரக்டருக்கு வேறு யாரைப் பொருத்திப்பார்ப்பது? எல்லா பிரபல நடிகர்களின் க்ளிஷேக்களும் நமக்கு மனப்பாடம் ஆகிவிட்ட நிலையில் அவர் நடித்திருப்பது சரிதான். விக்ரம் என்றார் மணிஜீ (ராவண வதமே போதும்) இதற்கு படத்தில் சந்தானம் சொல்லும் ஒரு வசனம் பொருந்தும். பில்டிங் டிசைன் பற்றிய ஒரு கூட்டத்தில் டிசைன் டிஃப்ரெண்ட்டா இருக்கனும் என்று சொல்லும்போது சந்தானம் சொல்வார் சார் எல்லாரும் இப்ப டிஃப்ரண்ட்டாதான் கட்டறாங்க நாம சாதாரணமாவே கட்டுவோம் அதுவே டிஃப்ரெண்ட்டா தெரியும். 
முதல் பாதி கேரக்டரை ஏன் டெவலப் செய்து படம் முழுதும் காட்டமுடியவில்லை? எதற்கு வழமையான ஒரு காம்ப்ரமைஸ் என்று யோசிக்கும்போது சினிமாவின் ஃபார்முலாக்களும் வியாபார குண்டு சட்டிகளும் நினைவுக்கு வருகிறது. அரைத்த மாவை அரைக்கும் மொக்கைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் பதிவர்களாலேயே நிரம்பியிருந்த அந்தத் திரை அரங்கம் சிரிப்பால் பல முறை அதிர்ந்தது அதற்கு சாட்சி.
ஜெட்லி கார்னர்”
ரெஜிஸ்டர் மேரேஜ் பதிவர் ஹீரோயினை திரையில் பார்த்துவிட்டு என் காதில் கேட்டார், இதுதான் தேவதையா? நான் சொன்னேன் எல்லா வதைகளும் தே என்ற எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது.
நெருடல் : அவ்ளோ பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன் சைட்டில் ஒரு பீகாரியைக் கூட காணமுடியவில்லை.!!
அண்ணன் உண்மைத் தமிழன் தயாரிப்பாளர் கெட்டப்பில் கெத்தாக வந்திருந்தார். பதிவர்கள் குடும்பத்தோடு வரவில்லையே என்று குறைபட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கம்போல பதிவர் சந்திப்பும் நடந்தது. :))
அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுக்கும் பதிவர்களை மதித்து, அழைத்து திரையிட்ட கரு.பழனியப்பன் அவர்களின் அன்பிற்கும், நன்றிகள்! :))


.

>அங்காடித்தெரு – சுடும் நிஜம்..

>

அம்பை நாணில் பூட்டி குறிபார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனைப்பார்த்து வித்தை சொல்லித்தந்த குரு கேட்டார்.

“என்ன தெரிகிறது? “

“மரம்”

“பிறகு?”

“கிளை”

“ம்ம்.. பிறகு”

“ஒரு பறவை”

”சரி வேறு”

”அதன் கண்கள்..”

அடுத்த சிஷ்யனைப்பார்த்து கேட்டார்..

”உனக்கு??”

”பறவையின் கண்கள் மட்டும்..”

”இதுவே சரியான பார்வை. அம்பை விடு இலக்கு விழும் வெற்றி உனதே.”

ஆனால் அங்காடித்தெரு படம் முதல் கோணத்தை சொல்கிறது. இப்படித்தான் பல தேவைகளுக்காக பலதரப்பட்ட மனிதர்களை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். நம் குறி நமது தேவைகள் மட்டுமே. அதில் தவறில்லை ஆனால் அதனை நிறைவேற்றும் மனிதர்களுக்கும் நம் போலவே ஒரு வலியுண்டு, வாழ்வுண்டு, ஆசைகளுண்டு அதனையும் புரிந்துகொள்வோம், மதிப்போம் என்று உணரவைக்கிறார் இயக்குனர் திரு.வசந்த பாலன்.  

இயல்பான காட்சிகள், பாத்திரங்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு, திரு.ஜெயமோகன் அவர்களின் வசனம், போன்றவை படத்தின் பலம். உயர் ரக காரில் காலில் செறுப்பு கூட இல்லாது கடைக்கு வந்திறங்கும் முதலாளி (இவர்களின் வியாபார சூத்திரங்கள் அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு புரியும். என்ன இவர் வாட்ச் கட்டி இருக்கிறார், நான் பார்த்தவர்களுக்கு அது கூட கிடையாது!!)

 ஆண்டாண்டு காலமாய் இன்வெஸ்டிகேஷன் ஜர்னல்கள் (என்று சொல்லிக்கொள்ளும்) கூட முழுமையாய் சொல்லமுடியாத/இயலாத/சொல்லாத ஒரு களம் இங்கும் முடிந்தவரையில்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கே ஒரு பெரிய சபாஷ் போடலாம்.    

சின்னச் சின்ன கதா பாத்திரங்கள் மூலம் பெரிய விஷயங்கள் சொல்லப்பட்ட விதம் அருமை. முக்கியமாய் கதாநாயகியின் தங்கைக்கு வரும் ஒரு பிரச்சனை/கையாண்டவிதம். கண் தெரியாத பெரியவர், குள்ளமான மனிதரும் அவர் மனைவியும், நாயகியின் தோழிகள், நாயகன்/நாயகியின் முறிந்த காதல், கடையின் கண்கணிப்பாளர், இப்படியாக படம் முழுவதும்.

படம் இயல்பாகவே சில கேள்விகளை உள்ளுக்குள் எழுப்பும்? அது நம்மின், மனிதத்தின் சுயபரிசோதனை பற்றியதாக, அது புரிய விரும்பாதவர்கள்/தெரியாதவர்களுக்கு மேலே சொன்ன பறவையின் கண்கள் மட்டுமே தெரியும்.

கற்றுக்கொடுக்கப்பட்டவை தாண்டி கற்றலும் நல்லதுதானே.

வாழ்த்துகளும், நன்றியும்..

திரு.வசந்த பாலன் அவர்களுக்கும்,
மற்றும் கண்ணில் நிறைந்த அத்துணை கதாபாத்திரங்களுக்கும்.

மிகச் சில படங்களுக்கே நான் என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். அங்காடித்தெரு அதில் ஒன்று. கண்டிப்பாய் ’திரை அரங்கில்’ உணருங்கள்.

.

Eagle’s Wing (1979-2010) – திரை விமர்சனம்

Eagle’s Wing (1979)

1980 களில் வெளிவந்து திரையிட்ட பல தியேட்டர்களில் இண்டீரியர் டெகரேஷன் எல்லாம் செய்தார்கள், இத்தனைக்கும் அப்போது டிக்கெட் அதிகமில்லை ஜெண்டில்மேன் வெறும் டூ ருப்பீஸ் ஒன்லி. திருட்டு விசிடி ப்ரச்சனை வேறு ரூபத்தில் இருந்தது. திரை போட்டு வாங்கசார் என்று சொல்லி, டெக் போட்டு ஜாக்கி சான் படம், ஷாலின் டெம்பிள் படம் எல்லாம் காட்டுவார்கள். தியேட்டரில் அல்ல சின்ன சின்ன கடைகளில்.

வேலூரில் VKR (aka) தினகரன் என்ற ஒரு தியேட்டர் இருக்கும், வெறும் ஹாலிவுட் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். இலவசமாய் மூட்டை பூச்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகலாம்.

5மென் ஆர்மி முதல் ஜேம்ஸ்பாண்டு படங்கள், ஜங்கிள்புக் என்று எல்லா படங்களும் 7ஆவது படிப்பதற்குள் பார்த்து மகிழ்ந்தது அங்கேதான்.

ஈகில்ஸ் விங் அப்படித்தான் உற்சாகத்தோடு பார்க்கப்போய், ஹாலி பாலி லெவலுக்கு இருந்ததால் அனேகமாக எல்லா சீட்களும் உடைக்கப்பட்டு, புதிதாய் உள்கட்டமைப்பு வேலைகள் செய்யப்பட்டது.

அப்படி உடைக்கற அளவுக்கு என்ன என்று கேட்க்காதீர்கள்:( ஒரு குதிரை, தொப்பி போட்ட ஒரு ஹீரோ, நடக்கறாங்க, நடக்கறாங்க படம் முழுதும்…ங்கொய்யால யாரடா ஏமாத்தறீங்கன்னு மக்கள் ஒரு பேயாட்டம் ஆடினது, நினைவில் இருக்கு. கொடுத்த காசுக்கு பரபரப்பாய் தியேட்டர் உடைத்ததை பார்த்து வீடு வந்து சேர்ந்தோம்.

அதற்கு பிறகு நிறைய படங்கள் பார்த்தாலும் இலவசமாய் கிடைக்காது போன மூட்டைபூச்சிகளால் மனசும், உடலில் வேறு சில இடங்களும் எதையோ இழந்ததுபோல இருந்ததென்னமோ உண்மை.

மேலதிக விவரங்கள் மற்றும் பட லின்க்..யார் ஹீரோ (ரொம்ப முக்கியம்) ஹாலிபாலி யை தொடர்புகொள்ளவும். முடிந்தால் நடித்த குதிரையின் தற்போதைய இருப்பிடமும் அறிவிப்பார்.

டிஸ்கி::1

எனக்கு தெரிந்து இந்த படத்துக்கு யாரும் தமிழில் விமரிசனம் எழுதி இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்… நானும் ஒரு பட விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்று – எறும்பு ராஜகோபால் திரை விமர்சனம் பார்த்து வந்த கொல வெறியில் எழுதப்பட்டது இது.

டிஸ்கி::2

ஜனாதிபதி ஆக்கிய என்னை பிரதமர் ஆக்காமல் கவர்னர் முதல்வர் ரேஞ்சுக்கு மட்டம் தட்டியதுமல்லாமல், என் ஏரியா உள்ள வராதே என்று மிரட்டிய ஹாலிபாலிக்கு சமர்ப்பணம்.::))

Advertisements